Sunday, June 21, 2009

திருப்பல்லாண்டு - பாடல் 8

திருப்பல்லாண்டு பாடல் - 8

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

பொருள்:

நெய்யிடை நல்லதோர் சோறும் - நல்லா சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்...), நியதமும் அத்தாணிச் சேவகமும் - நித்தமும் அத்தாணி மண்டபத்தில் இறைவனுக்குச் சேவையும் (கைங்கர்யமும்), (நியதமும் - நிதமும், நித்தமும், தினமும்)

கையடைக் காயும் - கை + அடைக் காய்; அடைக்காய் இலை ன்னா கொட்டாப்பாக்கும் கொழுந்து வெத்தலையும்... விருந்துணவு முடித்தபின் நம் கைகளில் தாங்கி விருந்தினரை எடுத்துக் கொள்ளச் சொல்லும் வெற்றிலைப் பாக்கு(அடைக்காய் - தாம்பூலம், பாக்கு)
கழுத்துக்குப் பூணொடு -கழுத்துக்குத் தேவையாண அணிகலன்களொடு (பூண் - அணிகலன்)
காதுக்குக் குண்டலமும் - காதுக்குத் தோடும் (குண்டலம் - காதணி)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தேகத்திலிடுவதற்கு (பூசுவதற்கு) இனிமையான மணமுடைய அரைச்ச சந்தனமும் (மெய் - தேகம், இட - பூச, தடவ; சாந்தம் - சந்தன சாந்து)
தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல - இவற்றை எல்லாம் தந்தருளி என்னை பாவங்களற்ற, தூய எண்ணங்கள் கொண்ட வெள்ளை மனம் உடைய உயிராக்கவல்ல(இறைவனைப் பற்றியே என்றும் நினைக்கவல்ல) மனம் தூயதானால், உயிரும் தூய்மையானதாகும்! (வெள்ளுயிர் - தூய எண்ணங்கள் உடைய உயிர்) உயிர் என்பது இங்கு ஆழ்வாரையேக் குறிக்கிறது!

பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே - படமெடுக்கும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியாகக் கொண்டுள்ள மன்னவனுக்கு நான் எந்நாளும் பல்லாண்டு பாடுவனே!( பையுடை நாகம் - படமெடுக்கும் தேகமுடைய நல்லப் பாம்பு, நாகப் பகை - நல்லப் பாம்பின் பகைவன், கருடன்; கொடியான் - கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவன், ஸ்ரீமன் நாராயணன் )

பதவுரை:

நெய்யில் கலந்திட்ட நல்ல சுவையான உணவும், தினமும் இறைவனின் அத்தாணி மண்டபத்தில் சேவையும், தாம்பூலமும், கழுத்துக்கு மாலை முதலான அணிகலன்களும், காதுக்குக் குண்டலமும், தேகத்தில் பூசுவதற்கு இதமாகக் குழைத்த சந்தனமும் தந்து என்னை பாவங்கள் அற்ற, தூய எண்ணங்களைக் கொண்டவனாக ஆக்க வல்ல, படமெடுத்து ஆடும் நல்லபாம்பின் பகைவனான கருடனைத் தன் கொடியில் கொண்டுள்ள இறைவனுக்கு நான் பல்லாண்டு பாடுவேனே!

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நல்லா சுத்தமான நெய்யில் கலந்திட்ட நல்ல சோறும், ( சாப்பாட்டுல நெய் கலக்கவில்லை, நெய்யில கலந்த சாப்பாடாம்...)//

விட்டா நீங்களே கொலஸ்ட்ராலை ஏத்திருவிங்க போலக் கீதே! :))

அதான் நல்லதோர் சோறும்-ன்னு நல்ல-ன்னும் சொல்லி வச்சாரு!
நெய்யிடை "நல்ல" சோறு = நெய் இடையே தூவப் பட்ட உடலுக்கு ஆரோக்கியமான சோறு-ன்னு தான் பொருள்! :)

கரையிடை ஓடும் ஆறு-ன்னா, கரை பெருசு, அதுல கொஞ்சமா ஓடும் ஆறு-ன்னா பொருள்?
அதே போல் தான் நெய்யிடை "நல்ல" சோறு!

திருமதி தமிழரசன்...உங்க வூட்டுக்காருக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நெய்யைக் கட் பண்ணுங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்கவல்ல//

இங்கே சாந்தம் என்பது சந்தனம் என்பதை விட,
சந்தன-குங்கும-நாமம் கலந்த திருமண் காப்பையே (நாமம் இடுதலையே) ஆழ்வார் குறிப்பதாகவும் பேசப்படும்! அதான் மெய் மேல் இட நல்லதோர் சாந்தம்! அது வெண்மை! வெள்ளுயிர் ஆக்க வல்லும்!

தமிழ் said...

//விட்டா நீங்களே கொலஸ்ட்ராலை ஏத்திருவிங்க போலக் கீதே! :))//

யாருக்கு கேயாரெஸ்??? :-))

நெய்யிடை சோறா இருந்தாலும், சோற்றிடை நெய்யாய் இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனால் கொடுக்கப்பட்டவையே...

உணவுக்கு எவ்வித கவலையும் இன்றி அனைத்து வசதிகளுடன் வைத்துள்ள இறைவனே, அப்படின்னுதான சொல்ல வர்ராரு...

//நெய்யிடை "நல்ல" சோறு = நெய் இடையே தூவப் பட்ட உடலுக்கு ஆரோக்கியமான சோறு-ன்னு தான் பொருள்! :)//

நெய் இடையில தூவினாலும், அது உருகி சோற்றை முழுதுமா கவர் பண்ணிடும்ல்ல... ;-)) அப்ப சோத்துக்குள்ள நெய் இருக்குமா? நெய்க்குள்ள சோறு இருக்குமா?? ;-)) நெய் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியமானது தானுங்...

//
கரையிடை ஓடும் ஆறு-ன்னா, கரை பெருசு, அதுல கொஞ்சமா ஓடும் ஆறு-ன்னா பொருள்?
அதே போல் தான் நெய்யிடை "நல்ல" சோறு!//

நெய்யிடை நல்லதோர் சோறு...
கரையிடை ஓடும் ஆறு....

ஐ! எதுகை மோனை நல்லா இருக்கே!! :-))

ஆமாங்க, எவ்வளோ பெரிய ஆறா இருந்தாலும் அது கரைக்குள்ள தான ஓடுது... அதுக்கப்புறம் முழுக்க கரைத்தானே... அடுத்த ஆறோ, குளமோ வர வரைக்கும்... :-)) just for fun...

//
திருமதி தமிழரசன்...உங்க வூட்டுக்காருக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு நெய்யைக் கட் பண்ணுங்க! :)//

ஹைய்யோ, ஹைய்யோ!! நான் நெய்யே சாப்பிடறது இல்லையே!! :-)) வேணும்னா நான் என் சார்பா என் பையனுக்குக் கட் பண்ண சொல்றேன்... :-))

தமிழ் said...

//இங்கே சாந்தம் என்பது சந்தனம் என்பதை விட,
சந்தன-குங்கும-நாமம் கலந்த திருமண் காப்பையே (நாமம் இடுதலையே) ஆழ்வார் குறிப்பதாகவும் பேசப்படும்! அதான் மெய் மேல் இட நல்லதோர் சாந்தம்! அது வெண்மை! வெள்ளுயிர் ஆக்க வல்லும்!//

ஓ! அப்படியா.... உங்கள மாதிரி அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்ட்டார் பதிவர் வந்து விளக்கினாதான தெரியும்!!

இருந்தாலும் ஒரு சந்தேகம்!! சந்தனம், குங்குமம் ல்லாம் கலந்தப்புறம் எப்படி அது வெள்ளையா இருக்க முடியும்??? :-))

அதாவது, பெரியாழ்வார் இந்த பாட்டில என்ன சொல்ல வர்றாரு ன்னா, குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...

வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!!

அப்படித்தானே....