Monday, August 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல்திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 4

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்*
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து* எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.

பொருள்:

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார் -
உறி என்பது தயிர், மோர் ஆகியவற்றைப் பானைகளில் வைத்து, அப்பானைகளை அடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அவற்றை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிடுவர். இதை தூக்கணக் கயிறு ன்னு கூட சொல்வாங்க.

ஏன் இப்படி வைக்குறாங்கன்னா, இரவில் பூனை வந்து மோரை கபலீகரம் செய்திடக்கூடாது என்பதற்காகவும், தரையில் வைத்தால் எறும்பு போன்றவை வந்து மோர்ப்பானை முழுதையும் ஆக்கிரமிச்சுக்குங்கறதாலயும், இந்த மாதிரி உறியில வெச்சு சமையலறையில ஒரு விட்டத்துல கட்டித் தொங்கவிடுவாங்க.

உறியை முற்றத்துல உருட்டி நின்றாடுவார் என்றால், உறியில் வைத்துள்ள பாலின் பயன்களான தயிர், மோர், வெண்ணெய் போன்றவற்றை மகிழ்ச்சி மிகுதியால் அவற்றை வீட்டு முற்றத்தில் உருட்டி விளையாடி மகிழ்வர்;

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார் - நல்ல, மணமான நெய்யையும், பால், தயிர் முதலியவற்றையும் மிகுந்த உற்சாகத்தோடு ஒருவர் மேல் ஒருவர் தூவிக் கொண்டு குதூகலிப்பார்கள்;

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து - இருண்ட அடர்ந்த காட்டினைப் போல் செறிவான கூந்தலின் பின்னல் அவிழ்வதைக் கூட அறியாமல், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து; ( செறிமென் - செறிவான, அடர்ந்த; திளைத்து - மகிழ்ந்து)

எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே - ஆயர்ப்பாடியில் உள்ள ஆயர்கள் அனைவரும், உறியில் தங்களின் தேவைக்கென்று வைத்துள்ள தயிர், மோர் ஆகியவற்றை உருட்டிவிட்டு விளையாடியும், எதிர்ப்படுவோர் அனைவர் மேலும் சிறந்த மணமுடைய நெய்யையும், பால், தயிர் முதலியவற்றையும் மிகுந்த உற்சாகத்துடன் தூவிக்கொண்டும், கட்டப்பட்ட அடர்த்தியான கூந்தல் அவிழ்வதைக் கூட அறியாது, தாங்கள் என்ன செய்கிறோம் என்ற நிதானமிழந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர்.

பதவுரை:

இப்பாடலில், ஆயர்ப்பாடியிலுள்ள ஆயர்கள் அனைவரும், நந்தகோபருடைய மாளிகைக்குச் சென்று குழந்தை கண்ணன் கோகுலத்தில் பிறந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் தங்கள் நிதானத்தையும் தாம் என்ன செய்கின்றோம் என்ற அறிவையும் இழந்து பேரின்பம் கொண்ட நிலையைப் பெரியாழ்வார் விவரிக்கிறார்.


ஆயர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைத்திருந்த, அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான பாலின் பயன்களான தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட பானைகளை உறியிலிருந்து வீட்டு முற்றத்தில் உருட்டிவிட்டு விளையாடி மகிழ்ந்தனர்; சிறந்த, நல்ல மணமான நெய்யினையும், பால், தயிர் முதலியவற்றை எதிர்ப்படுவோர் அனைவரின் மீதும் உற்சாகம் பொங்கத் தூவிக் குதூகலித்தனர்; நன்கு கட்டப்பெற்ற, அடர்த்தியான கூந்தல் அவிழ்வதைக் கூட அறியாது மகிழ்ச்சி பெருங்கடலில் மூழ்கி, தங்களின் நிதானம் தவறியவர்களாக மாறியிருந்தனர், ஆயர்ப்பாடியிலுள்ள ஆயர்கள் அனைவரும்.

7 comments:

Anonymous said...

Alwargal Paasurattai porulodu padikkumpodu naamum ayarpadiyil kannan pirantatai kondadupavargal
Anupavikkum magizhchiyil ,,, avargaludan namum kalandirukkum unarvu(magizhchi) erpadukiradu.
Paasuram Paditta namakke ippadi irukkum podu, paasuram paadiya alwargal magizhchi kadalil neenduvaargallo!!!!

தமிழ் said...

Alwargal Paasurattai porulodu padikkumpodu naamum ayarpadiyil kannan pirantatai kondadupavargal
Anupavikkum magizhchiyil ,,, avargaludan namum kalandirukkum unarvu(magizhchi) erpadukiradu.
Paasuram Paditta namakke ippadi irukkum podu, paasuram paadiya alwargal magizhchi kadalil neenduvaargallo!!!!//

வாங்க! கமலக்கண்ணிஅம்மன்! :-))

நீங்க சொல்றது ரொம்ப சரி. இந்த பாசுரங்கள் ல கூட, மக்களோட உணர்வுகளத்தான் ஆழ்வார் சொல்றாரு.

அவர் யசோதையா தன்னை உருவகிச்சுப் பாடுறத பாட்டல்லாம் பாடினா, படிக்கிற நம்ம நாக்குல தேனூறும்; நம்மையும் ஒரு தாயாகவே மாத்திடும்! அவ்வளவு அழகா ஒரு அம்மா வோட மனநிலையை அப்படியே சொல்லுவாரு!

தொடர்ந்து வந்து படிங்க! ஆழ்வார்கள் இறைவனுக்குள்ள ஆழமாய் மூழ்கி எடுத்த முத்துக்கள்தான் இந்த பாசுரங்கள்!

அழகிய தமிழில், அமிழ்தாய் வார்த்தைகள்... ஆயிரம் பிறவிகள் வேண்டும் அவற்றை நம் நாவு பாடிடக் களித்திட...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இரவில் பூனை வந்து மோரை கபலீகரம் செய்திடக்கூடாது என்பதற்காகவும், தரையில் வைத்தால் எறும்பு போன்றவை வந்து மோர்ப்பானை முழுதையும் ஆக்கிரமிச்சுக்குங்கறதாலயும், இந்த மாதிரி உறியில வெச்சு சமையலறையில ஒரு விட்டத்துல கட்டித் தொங்கவிடுவாங்க//

சூப்பரோ சூப்பர்! எங்க கிராமம் வாழைப் பந்தலுக்கு என்னைய கூட்டிப் போயிட்டீக! :)

//அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே//

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
என்பாள் இவரு பொண்ணு! அதே தான் அப்பாவும் சொல்றாரு பாருங்க! :)

அறிவினால் இறைவனை அளக்க முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

அப்படிக் கொண்டனர், அறிவழிந்தனர், ஆய்ப்பாடி ஆயரே!

தமிழ் said...

சூப்பரோ சூப்பர்! எங்க கிராமம் வாழைப் பந்தலுக்கு என்னைய கூட்டிப் போயிட்டீக! :)//

உங்கள வாழைப்பந்தலுக்குக் கூட்டிட்டுப் போனது நானில்லை. நம்ம பெரியாழ்வார்.

உன் தோழியோட தோப்பனார். :-))

தமிழ் said...

அறிவினால் இறைவனை அளக்க முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!//

சரியாச் சொன்னீங்க! இறைவனை அளக்கவோ, அனுபவிக்கவோ அறிவு தேவையில்லை. குழந்தைத்தனமான உள்ளம் இருந்தால் போதும். அதாவது, கள்ளமில்லா உள்ளம் இருந்தால் போதும்!! :-))

குமரன் (Kumaran) said...

இங்கே ஆயர்ன்னு சொன்னது ஆய்ப்பாடி ஆண்களையா பெண்களையா? கூந்தல் என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால் ஆண்களைக் குறிப்பதாகத் தோன்றவில்லையே?

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

இங்கே ஆயர்ன்னு சொன்னது ஆய்ப்பாடி ஆண்களையா பெண்களையா? கூந்தல் என்று சொல்லியிருப்பதைப் பார்த்தால் ஆண்களைக் குறிப்பதாகத் தோன்றவில்லையே?//

ஆயர்ன்னு ஆண்கள், பெண்கள் இருவரையும்தான் குறிக்கிறது.

செறிமன் கூந்தல் அவிழத்திளைத்தது பெண்களையும், உறியை முற்றத்து உருட்டி நின்றாடினதும், நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவினதும் இருபாலரையும் குறித்தன.

அதாவது, ஆய்ப்பாடி முழுவதிலுமுள்ள ஆயர்களனைவரும்...