பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல்திருமொழி - வண்ணமாடங்கள்
பாடல் 5
முதல்திருமொழி - வண்ணமாடங்கள்
பாடல் 5
கொண்டதாளுறி கோலக்கொடுமழு*
தண்டினர் பறியோலைச் சயனத்தர்*
விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
தண்டினர் பறியோலைச் சயனத்தர்*
விண்டமுல்லை யரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
கொண்ட தாளுறி கோலக்கொடுமழு - இவ்வடியை, தாள் உறி கோலக் கொடு மழு கொண்ட என்று மாற்றிப் பொருள் கொள்வோம். அதாவது, உறி என்பது வீட்டின் விட்டத்தில், மோர்ப் பானை அடுக்குகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு கயிறு என்று முந்தைய பாசுரத்தில் பார்த்தொமல்லவா. அதுவும் உறிதான். அதே சமயம் எங்காவது நெடுந்தூரம் பயணம் செய்வோர் அவர்களுக்குத் தேவையானவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி அல்லது தண்ணீர் பானை, மோர் பானை போன்றவற்றை, கயிற்றில் கட்டி, நடுவில் ஒரு தடிமனான குச்சியால் இருபுறத்துக் கயிற்றையும் இணைத்து, அந்த குச்சியைத் தோளில் வைத்து தூக்கிச் செல்வர். இதுவும் ஒரு வகையான உறிதான். உறி என்றால் தூக்கணக் கயிறு என்று பொருள்.
ஆயர்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகளைக் கொண்டவர்கள் சற்றுத் தொலைவான இடங்களுக்கு, அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். அவர்கள் திரும்பி வரும் நாளானது, அவர்கள் செல்லும் தொலைவினைப் பொறுத்து மாறுபடும். நெடுந்தொலைவு சென்றவர்களால் தினம் தினம் தங்கள் வீட்டிற்கு வர இயலாததினால், அவர்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் தங்களுடன் எடுத்துச் செல்வர். இவ்வாறு கால்நடைகளை நெடுந்தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆயர்களை இப்பாசுரத்தில் விவரிக்கிறார், பெரியாழ்வார்.
அவ்வாறு நெடுந்தொலைவு சென்றவர்கள், இடையில் பால் கறக்க நேரிட்டால், அதையும், பாலின் பயன்களையும் வைப்பதற்கு எடுத்துச் சென்ற உறியானது, அவர்களின் பாதங்களைத் தொடுமளவிற்கு நீண்டிருந்தது. அதோடு, கால்நடைகளுக்குத் தேவையான இலைத் தழைகளும், கொடிகளும் உயரத்தில் இருந்தால் அவற்றைப் பறிப்பதற்காக, அழகிய, கூர்மையான அரிவாளையும் கொண்டிருந்தனர். (தாள் - பாதம்; உறி - தூக்கணக்கயிறு; கோலக்கொடு - அழகிய, கூர்மையான; மழு - அரிவாள்)
தண்டினர் பறியோலைச் சயனத்தர் - பாதமளவு நீண்ட உறியையும், அழகிய, கூர்மையான அரிவாளையும் கொண்ட தண்டினர். அதாவது, கால்நடைகளை ஒழுங்குபடுத்தி மேய்ப்பதற்கும், அவற்றை மிரட்டுவதற்கும் கையில் நீண்ட குச்சிகளைக் கொண்ட ஆயர்கள்; பனை ஓலையைப் பறித்து அதன் மேல் உறங்கும் ஆயர்கள்;(தண்டினர் - தடியினை உடையவர்; பறியோலை - பனை மரத்திலிருந்து பறித்த ஓலை; சயனத்தர் - உறங்குபவர், துயில்பவர்)
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் - ஆயர்களின் பல்லழகை இவ்வடியில் கூறுகிறார். அதாவது, முகிழ்கின்ற முல்லைப் பூவின் மொட்டினை ஒத்த பல்லையுடையவர்கள்; முல்லை மலர் மொட்டாய் இருக்கும் பொழுதும், நன்கு மலர்ந்த பின்னும் இருப்பதைவிட, அது மலரும் பொழுது மிகுந்த வெண்மையுடன் இருக்கும். (விண்ட - மலர்கிற, முகிழ்கின்ற; முல்லை - ஒருவகை பூ; அரும்பு - மொட்டு; அன்ன - உவம உருபு; பல்லினர் - பல்லினை உடையவர்)
உவம உருபுகளைக் கூறும் நன்னூல் பாடல்:
'போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே' - நன்னூல் 367.
'போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே' - நன்னூல் 367.
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் - ஆநிரை மேய்ச்சலுக்காகத் தொலைதூரங்களுக்குச் சென்ற ஆயர்கள், கண்ணன் பிறந்துவிட்ட நல்ல செய்தியைக் கேட்டு, உற்சாகமிகுந்து, குழந்தையைப் பார்க்க வேண்டிய ஆவலில் பாதிவழியிலேயே அவற்றைத் திருப்பி வீட்டிற்கு ஓட்டிவந்துவிட்டு விட்டு, கண்ணன் பிறந்திருந்த நல்ல நாளை முன்னிட்டு எண்ணெய் முழுக்காடினர். (அண்டர் - ஆயர், இடையர்; மிண்டி - நடுவில், இடைவழியில்; நெய்யாடினார் - நெய் முழுக்கு அல்லது எண்ணெய் முழுக்காடினர்)
பதவுரை:
ஆநிரைகளை மேய்ப்பதற்கு நெடுந்தொலைவு சென்ற ஆயர்கள், பாதமளவிற்கு நீண்ட உறியையும், அழகிய, கூரிய அரிவாளையும் கொண்டவர்கள்; மேலும், ஆநிரைகளை ஒழுங்குபடுத்துவதற்காக நீண்ட, தடித்த குச்சியினை உடையவர்கள்; அவர்கள் ஓய்வெடுக்கவும், உறங்கவும், பனை ஓலையினை படுக்கையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; முகிழ்கின்ற முல்லை மலரின் அரும்பினைப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஆயர்கள், தங்கள் நிரைகளை மேய்க்கச் செல்லும் பாதிவழியிலேயே கண்ணன் பிறந்துவிட்ட நல்ல செய்தியைக் கேட்டு, உடனே வீட்டிற்குத் திரும்பினர்; வீட்டிற்கு வந்தவுடன், கண்ணன் பிறந்திருந்த நல்ல நாளினை முன்னிட்டு எண்ணெய்க் குளியலாடினர்.
11 comments:
Unga blog sites day by day fast improving sir
Paasuram meanings padika lots of members open your blog I think
So please visiters counters add it in your blog . it is Encouraging you sir
பல அருமையான செய்திகளை உள்ளடக்கிய பாசுரம் இது, தமிழ்!
இயற்கையான கிராமீய வாழ்வைக் காட்டும் பாசுரமும் கூட! நல்லாச் சொல்லி இருக்கீக!
தாள் உறி கோலக் கொடு மழு கொண்ட என்பதில் தான் ஆய்ர்களின் ஒட்டு மொத்த நடை உடையை ஒரே அடியில் கொண்டு வந்து விட்டார் பாருங்க!
//தென்னை ஓலை அல்லது பனை ஓலையைப் பறித்து அதன் மேல் உறங்கும் ஆயர்கள்//
தென்னை ஓலையில் படுப்பது வழக்கம் இல்லை! வேறு பொருளாய் ஆகி விடும்!
பனை ஓலை என்பது தான் சரி!
//முல்லை யரும்பன்ன பல்லினர் //
முல்லை நில மக்கள் தானே! அதான் முல்லைப் பல்லு! :)
//அண்டர் மிண்டிப் புகுந்து//
கண்ணனுக்காகப் பாதியில் விட்டு வரும் அளவுக்கு என்ன ஒரு ஒட்டுதல் பாருங்க! இத்தனைக்கும் கண்ணனை இன்னும் முன் பின் பார்க்கக் கூட இல்லை!
வாங்க கமலக்கண்ணி அம்மன்,
பலரும் வந்து படித்துப் பயனுற விழைகிறோம்!! :-))
தங்கள் ஆலோசனைக்கு நன்றி ங்க, விரைவில் இணைப்பதற்கு முயற்சிக்கிறோம்.
தொடர்ந்து வாங்க!
தென்னை ஓலையில் படுப்பது வழக்கம் இல்லை! வேறு பொருளாய் ஆகி விடும்!
பனை ஓலை என்பது தான் சரி!//
வாங்க கேயாரெஸ் :-)))
பிழையை சுட்டியமைக்கு நன்றி!
ஆமாம் இல்ல, நீங்க சொல்றது சரிதான்! உண்மையிலேயே நான் இந்த சங்கதிய யோசிக்கவே இல்ல. ரொம்ப ரொம்ப நன்றிங்க சாரே.
ஆமாம் உங்கள ரொம்ப நாளா ஆளக் காணாததும் எங்காவது ஊர் சுத்த போயிட்டீங்களோ ன்னு நினைச்சேன்.
தொடர்ந்து வந்து பிழைகளைச் சுட்ட வேண்டுகிறோம்!
பதிவில் திருத்தியாச்சு, நன்றி சார். :-)))
//முல்லை யரும்பன்ன பல்லினர் //
முல்லை நில மக்கள் தானே! அதான் முல்லைப் பல்லு! :)//
இரவும் பகலும் சந்திக்கும், அந்தியம் போதில், நம்ம கைரேகை தெளிவாகப் பார்க்க முடியாத அளவினுக்கு பொழுது சாய்ந்தபிறகு, மெல்ல மெல்ல இந்த முல்லை மொட்டுகள் மலரும்; அப்ப பார்த்தாக்க, அவ்ளோ வெள்ள வெளேர்னு இருக்கும்.
முல்லை மொட்டு கூட கொஞ்சம் மெல்லிய சந்தன வண்ணம் பூசின மாதிரி இருக்கும். ஆனா மொட்டு வெடிக்கும் போது நல்ல வெண்மையாக இருக்கும். கவனிச்சிருக்கீங்களா ;-))
//அண்டர் மிண்டிப் புகுந்து//
கண்ணனுக்காகப் பாதியில் விட்டு வரும் அளவுக்கு என்ன ஒரு ஒட்டுதல் பாருங்க! இத்தனைக்கும் கண்ணனை இன்னும் முன் பின் பார்க்கக் கூட இல்லை!//
இது கிராமத்து மக்களுக்கே இருக்கற தனித்துவம் ன்னு கூட சொல்லலாம். ஊர்ல்ல யார் வீட்டில என்ன விசேஷமா இருந்தாலும் எல்லாரும் அவங்க வீட்டுல்ல நடக்கற மாதிரி கலந்துப்பாங்க. ஒரு வீட்டுல விசேஷம் ன்னாலும், எல்லாருக்கும் குதுகலமாகிடும். ;-))
இங்க பட்டணத்துல, கீழ் வீட்டு விசேஷமே எப்பவாவது கீழ எட்டிப் பார்த்தாதான் ஏதோ நடக்குதுன்னு ஊகிக்க முடியுது. ;((
//ஆமாம் இல்ல, நீங்க சொல்றது சரிதான்!//
ஹிஹி!
ஆமாம், இல்ல - இது என்ன முரண் தொடையில் பேசறீங்க?
ஆமா-வா? இல்லை-யா? ஒழுங்காச் சொல்லுங்க முகில்! :)))
அட. சங்க இலக்கியங்கள் தான் ஆயர்களைப் பாடும் போதெல்லாம் முல்லை மலரைக் கூறி அவர்கள் வாழும் முல்லை நிலத்தையும் அப்பாடல்கள் அமையும் முல்லைத் திணையையும் சுட்டும் என்றால் பெரியாழ்வாரின் பாசுரமும் அப்படியே இருக்கின்றதே. இன்று தான் இதனைக் கவனித்தேன். :-)
குமரன் (Kumaran) said...
அட. சங்க இலக்கியங்கள் தான் ஆயர்களைப் பாடும் போதெல்லாம் முல்லை மலரைக் கூறி அவர்கள் வாழும் முல்லை நிலத்தையும் அப்பாடல்கள் அமையும் முல்லைத் திணையையும் சுட்டும் என்றால் பெரியாழ்வாரின் பாசுரமும் அப்படியே இருக்கின்றதே. இன்று தான் இதனைக் கவனித்தேன். :-)//
வாங்க குமரன்,
கிண்டல் செய்வது போல் உள்ளது. உங்க வலைப்பூவுல கூட நாலாயிரம் எழுதுறீங்கத்தானே... ;-))
என்னன்னு தெரியல, உங்க கமெண்டுக்கு மட்டும் பதில் பின்னூட்டம் போடத் தெரியமாட்டுது... ;-((
கிண்டல் இல்லைங்க. உண்மையாத் தான் சொல்றேன். இப்பத் தான் முல்லை இங்கே வர்றதைக் கவனிச்சேன்.
எனக்கு எப்பவும் இரவிசங்கர் பின்னூட்டத்துக்குத் தான் என்ன எழுதுறதுன்னு புரியாது. உங்களுக்கு என் பின்னூட்டத்துக்கு அப்படி ஆகுதா? அப்ப எனக்கு பதவி உயர்வு கிடைச்சிருச்சுன்னு அருத்தம். :-)
குமரன் (Kumaran) said...
கிண்டல் இல்லைங்க. உண்மையாத் தான் சொல்றேன். இப்பத் தான் முல்லை இங்கே வர்றதைக் கவனிச்சேன்.//
எப்பா நம்ப பதிவையும் கவனிச்சு படிக்குறாங்க... இந்த இரவி கவனிக்கறதுக்காகவே படிப்பாரு போல.... ;-))
------------------------
எனக்கு எப்பவும் இரவிசங்கர் பின்னூட்டத்துக்குத் தான் என்ன எழுதுறதுன்னு புரியாது. உங்களுக்கு என் பின்னூட்டத்துக்கு அப்படி ஆகுதா? அப்ப எனக்கு பதவி உயர்வு கிடைச்சிருச்சுன்னு அருத்தம். :-)//
உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்லதா அமைஞ்சிருக்கு போல.... பதவி உயர்வு ல்லாம் வாங்குறீங்க... ;-))
Post a Comment