Monday, August 24, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 7

வாயுள் வையகம் கண்ட மட நல்லார்*
ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம்*
பாயசீருடைப் பண்புடைப் பாலகன்*
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே.

பொருள்:

வாயுள் வையகம் கண்ட மடநல்லார் - போன பாசுரத்தில் ''வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே'' அப்படின்னு சொன்னாருல்ல பெரியாழ்வார்.

பிள்ளை வாயுள் வையமேழும் கண்ட யசோதை, தன்னருகில் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு உடனிருந்த மற்ற ஆய்ச்சியரையும் அழைத்துக் காட்ட, அங்கிருந்த அனைவரும் கண்ணனின் வாயினுள் வையமேழும் இருந்த அதிசயத்தைக் கண்டு பின்வருமாறு யசோதையிடம் கூறினர்.
( வையகம் - உலகம்; மடநல்லார் - பெண்கள், இங்கு ஆய்ச்சியரைக் குறித்தது)

ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம் - குழந்தையின் வாயினுள் வையகம் கண்ட ஆயர் குலப் பெண்கள், ''இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானிடப் புதல்வனே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வம் இவன். (புத்திரன் - புதல்வன், மகன்; அருந்தெய்வம் - அரிதான தெய்வம்)

பாய சீருடைப் பண்புடைப் பாலகன் - விரும்பத் தகுந்த குணங்களும், சிறந்த புகழினையும், சீரிய பண்புகளைக் கொண்ட பாலகன் இவன். (பாய - விரும்பத் தகுந்த; சீர் - புகழ்; பாலகன் - குழந்தை)

மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே - விரும்பத் தகுந்த குணங்களும், சிறந்த புகழும், சீரிய பண்பும் உடைய இந்த பாலகன், அந்த மாயோன் தான் என்று பெருமகிழ்ச்சி கொண்டனர், ஆயர்குலப் பெண்கள். (மாயன் - மாயோன்; மாதர் - பெண்கள் {மாந்தர் - மக்கள்})

பதவுரை:

குழந்தை கண்ணபிரானின் நாவினை நல்ல மஞ்சளால் வழித்துவிட, அவன் வாயை அங்காந்திட்ட போது, யசோதை குழந்தையின் வாயினுள்ளே வையம் ஏழினையும் கண்டாள். அவ்வருங்காட்சியை, உடனிருந்த ஆயர்குலப் பெண்களிடம் யசோதை காட்டிய போது, அவர்கள், ''இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானுடப் பிள்ளையே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வமிவன்; எல்லாராலும் விரும்பத் தகுந்தவனும், மேன்மையான புகழும், சிறந்த குணங்களுமுடைய இந்த குழந்தை நம் குலத் தெய்வமான மாயோனே தான்" என்று கூறி பெரும் மகிழ்ச்சி கொண்டனர் ஆயர் குலப் பெண்கள்.

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சின்னூண்டு வாயுள் 70 mm பார்த்த பின் உண்டான எஃபெக்ட்டை இந்தப் பாட்டில் காட்டுறாரு பெரியாழ்வார்! :)

//பாயசீருடைப் பண்புடைப் பாலகன்*
மாயனென்று//

மாயோன் என்ற தமிழ்க் கடவுள்! முல்லை நிலத்து முதல்வன்! ஆயர் புத்திரனல்லன்! அருந்தெய்வம்! கருந்தெய்வம்! அவன் குழந்தைத் தனத்தை அனுபவிக்கும் அழகே அழகு!

//வையகம் கண்ட மட நல்லார்//

வையகம் = உலகம் என்று ஒரு பொருள்!

வை+அகம் என்று பிரித்து, தங்கள் அகத்தையே, அவன் பால் வைத்த அகத்தையே, வை+அகத்தையே காண்கின்றனர் இவர்கள்!

யசோதைக்கு வாயில் வையம் ஏழும் காட்டிய போது, அதில் அவளையும், அவள் ஆச்சர்யமாகப் பார்க்கும் விதமும் கூட, வாயில் தெரியுமாம்!

அதை போல், இங்கு இவர்கள் வை+அகத்தையும், தங்களையும் சேர்த்தே காண்கின்றனர் ஆயர் மக்கள் என்பது குறிப்புப் பொருள்!

தமிழ் said...

//வையகம் கண்ட மட நல்லார்//

வையகம் = உலகம் என்று ஒரு பொருள்!

வை+அகம் என்று பிரித்து, தங்கள் அகத்தையே, அவன் பால் வைத்த அகத்தையே, வை+அகத்தையே காண்கின்றனர் இவர்கள்!

யசோதைக்கு வாயில் வையம் ஏழும் காட்டிய போது, அதில் அவளையும், அவள் ஆச்சர்யமாகப் பார்க்கும் விதமும் கூட, வாயில் தெரியுமாம்!

அதை போல், இங்கு இவர்கள் வை+அகத்தையும், தங்களையும் சேர்த்தே காண்கின்றனர் ஆயர் மக்கள் என்பது குறிப்புப் பொருள்!//

--------------------------

விளக்கத்திற்கும், வருகைக்கும் ரொம்ப நன்றி கேயாரெஸ்! ;-))

தமிழ் said...

சின்னூண்டு வாயுள் 70 mm பார்த்த பின் உண்டான எஃபெக்ட்டை இந்தப் பாட்டில் காட்டுறாரு பெரியாழ்வார்! :)//

-------------

70 mm இல்லீங்க.... imax show.... :-))

Radha said...

Excellent work !! God bless you !

தமிழ் said...

@Radha...

Excellent work !! God bless you !//

Thankyou Radha! Thanks for visiting our blog. keep coming... :-))