Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 3

நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!

நாவியுள் நற்கமல நான்முகனுக்கு* ஒருகால்

தம்மனை யானவனே! தரணிதல முழுதும்

தாரகையின் னுலகும் தடவி அதன்புறமும்*

விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!*

அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.பதவுரை:


நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே! நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே -
எம் ஆயர் குலத்தரசே! முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப்பொருளாய் இருப்பவனே! நின் கொப்பூழ்கொடி பந்தம் கொண்ட, படைப்புத் தொழிலைச் செய்யும் செந்தாமரைமலர் மேல் வீற்றிருக்கின்ற நான்முகனுக்கும் அன்னையாய் இருப்பவனே! அதுமட்டுமல்லாது, உலக நன்மைக்காக பிரம்மனிடமிருந்து மது, கைடபன் என்ற இரு அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட நான்கு வேதங்களையும், அவர்களிடமிருந்து மீட்டு, மீண்டும் பிரம்மனிடம் கொடுத்து நான்முகனுக்கு அன்னையாய் ஆதரித்தவனே! (நாயகன் - தலைவன், இறைவன்; நான்மறை - நான்கு வேதங்கள்~ ரிக்வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்; நாவி - கொப்பூழ்; நான்முகன் - பிரம்மன்; மனை - நற்றாய்)தரணிதலம் முழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே! -
வாமன அவதாரத்தில், திரிவிக்கிரமனாக வளர்ந்து பூலோகம் முழுவதையும் ஓர் அடியில் அளந்து, இரண்டாமடியில், நட்சத்திரக்கூட்டங்கள் நிறைந்த விண்ணுலகம் மட்டுமல்லாது, அதற்கு அப்பாலும் இருப்பவை எல்லாவற்றையும் அளந்தவனே (தரணி - பூமி; தாரகை - விண்மீன், நட்சத்திரம்; விம்ம - நிறைய, மிக)

வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே -
சிறுவனாயிருந்த பொழுது குவலயாபீடம் என்ற கம்சனின் பட்டத்து யானையையும், நப்பின்னையை மணமுடிப்பதற்காக ஏழு எருதுகளையும் எதிர்கொண்டு, அவற்றை அடக்கி, வெற்றியோடு வருபவனே (வேழம் - யானை; விடை - எருது, காளைமாடு)

அம்ம! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே -
அம்ம, எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; போர் செய்ய வல்லமையுடைய காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே. (அம்ம - கேள் என்னும் ஏவற்பொருளில் வந்த அசைச்சொல்)

பதவுரை:


எங்கள் ஆயர் குலத்தரசே! முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப்பொருளாய் இருப்பவனே! நின் கொப்பூழ்க்கொடி பந்தம் கொண்ட பிரம்மனிடமிருந்து அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட வேதங்களை மீட்டுத் தந்து, நான்முகனுக்கு நற்றாயாக இருப்பவனே! மண்ணை ஓரடியாலும், விண்ணுலகம் முழுதையும் இரண்டாமடியாலும் அளந்துவிடும் அளவுக்கு வளர்ந்த வாமனனே! மதங்கொண்ட யானையானாலும், கூரிய கொம்புகளைக் கொண்ட காளைகளானாலும் அவற்றையெல்லாம் எளிதில் எதிர்கொண்டு, அடக்கி, என்றும் வெற்றிவாகை சூடுபவனே! என் கூற்றுக்கு செவிசாய்ப்பாயாக அண்ணலே! எனக்காக ஒரு முறை, ஒரே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த போர் செய்ய வல்ல காளையைப் போன்ற வலிமையுடையவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

5 comments:

Radha said...

மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி.

தமிழ் said...

Radha said...

மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி.//

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றி இராதா ஐயா. இவை எல்லாம் இறைவனுக்கே உரித்தானவை.

குமரன் (Kumaran) said...

தாயுமானவன் சிவபெருமான் மட்டுமில்லை திருமாலும் கூட என்பதைப் பெரியாழ்வார் சொல்லி இன்று உணர்ந்தேன்.

தம்மனை என்பதை தம் + அனை (அன்னை என்பதன் குறைதல் விகாரம்) என்று பிரிக்க வேண்டும். தம் + மனை என்று பிரித்தால் தனது வீடு அல்லது தனது மனையாள் என்று பொருள் வரும். பெரியாழ்வார் அப்ப்டி சொல்லவில்லை இங்கே.

வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலை தனுள் வென்று வருமவனே என்பதற்குச் சொன்ன பொருள் சரி தானா? இந்த வரியை இன்று முதலில் படித்த போது 'ஐராவதமும் காமதேனுவும் வந்த பாற்கடலில் இருந்து அமுதத்தை வென்று வருபவனே' என்று பொருள் கொண்டேன். வேலை என்றால் கடல் என்பதால் அப்படி பொருள் கொண்டேன். ஆனால் ஏழ்விடை என்பதற்கு ஏழு எருது என்பது சரியான பொருள் போல் தோன்றுகிறது; அப்படிப் பொருள் கொண்டால் அங்கே வேலை என்பதற்கு என்ன பொருள்?

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலை தனுள் வென்று வருமவனே என்பதற்குச் சொன்ன பொருள் சரி தானா? இந்த வரியை இன்று முதலில் படித்த போது 'ஐராவதமும் காமதேனுவும் வந்த பாற்கடலில் இருந்து அமுதத்தை வென்று வருபவனே' என்று பொருள் கொண்டேன். வேலை என்றால் கடல் என்பதால் அப்படி பொருள் கொண்டேன். ஆனால் ஏழ்விடை என்பதற்கு ஏழு எருது என்பது சரியான பொருள் போல் தோன்றுகிறது; அப்படிப் பொருள் கொண்டால் அங்கே வேலை என்பதற்கு என்ன பொருள்? //

காமதேனு என்பது பசுமாடு; விடை என்பது காளை அல்லது எருது என்று ஆண் இனத்தைக் குறிக்கும் சொல்.

ஆகையால் இங்கு, காமதேனுவைக் குறிக்காது.

வேலை என்னும் சொல் இங்கு பொழுது, காலம் என்று நேரத்தைக் குறிக்கின்ற பொருளில் வந்துள்ளது.

பொதுவாக, நாம் காலத்தைக் குறிக்கும் பொழுது, வேளை என்னும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம்.


"மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

மாலைப்பொழுதே நீ வாழி. நீ முன்பு வரும் மாலைக்காலமில்லை மணந்த மகளிரின் உயிரை உண்ணும் வேளையாயிருக்கிறாய்"

இக்குறளில் வேலை என்னும் சொல் வேளை என்னும் பொருளிலேயே வந்துள்ளது.


அ-து: மதுராபுரியில் குவலயாபீடமும், நப்பின்னையை மணமுடிப்பதற்காக, காளைகளை அடக்கும் போட்டி வைத்த போது வந்த ஏழு காளைகளும், உன்னை மிகுந்த சினத்துடன் எதிர்கொண்டு வந்த வேளையிலேயே அவற்றை எல்லாம் வெற்றிக் கொண்டவனே' என்று பொருள்.

சரிதானே குமரன் ஐயா.

குமரன் (Kumaran) said...

சரி தான். நன்றி தமிழ் ஐயா.