Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 6

காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!
கானக மாமடுவில் காளிய னுச்சியிலே*
தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!
துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே!*
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்!*
ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

காயமலர் நிறவா! கருமுகில் போல் உருவா! கானக மாமடுவில் காளியன் உச்சியிலே - அடர்நீல வண்ணமுடைய காசா மலர் வண்ண தேகங்கொண்டவனே! குளிர் மழை பொழிகின்ற, கடல் நீருண்டு கருவுற்ற கருமேகங்களைப் போல் கண்ணுக்கும், மனத்தினுக்கும் குளிர்ச்சித் தரத்தக்க உருவங்கொண்டவனே! (காயமலர் - காயாமலர், காசாமலர்; கானகம் - வனம், காடு; மடு - ஆற்றின் உட்பள்ளம், குளம்)காளிங்க நர்த்தனம்:

பிருந்தாவனத்தை ஒட்டி செல்லுகின்ற, யமுனை நதியின் ஒரு பகுதியில் இருந்த மடு ஒன்றில் , கடுமையான விடத்தைக் கக்கக் கூடிய கருநாகம் ஒன்று வசித்து வந்தது. அதன் பெயர் காளியன்.
(அவனுக்கு நூறு தலைகள் இருந்ததாகவும், ஐந்து தலைகள் இருந்ததாகவும் இருவகைகளாகக் கூறுகின்றனர். பெரியாழ்வார் ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே ன்னு சொல்லிருக்காரு. கதைகள் ல்ல, அவனுக்கு நூறு தலைகள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் வந்து தெளிவுபடுத்துங்களேன்.) அவன் கக்கின விடமானது, அப்பகுதியின் நிலம், நீர், காற்று ஆகியவற்றில் எல்லாம் கலந்து விடவே, அப்பகுதி முழுவதும் விடத்தன்மை எய்திப் போனது.

எனவே மக்களும், கால்நடைகளும் எவரும் அப்பகுதிக்குச் செல்வதில்லை. ஒருநாள், சிறுவன் கண்ணன், தன் தோழர்களுடன் பிருந்தாவனத்தில் பந்து விளையாடிக்கொண்டிருக்கையில், பந்து தவறிப் போய் காளியன் வாழ்ந்து கொண்டிருந்த மடுப்பகுதியில் விழுந்து விட்டது.

சிறுவனான கண்ணபிரானோ, அப்பந்தை தான் எடுத்து வருவதாகக் கூறி மடுவின் கரைப்பகுதியில் இருந்த கடம்ப மரத்தில் ஏறி, மடுவை நோக்கிப் படர்ந்திருந்த கிளை வழியாக மடுவினுள் குதித்து விட்டான்.

கண்ணபெருமான் மடுவிற்குள் குதித்ததால் ஏற்பட்ட, நீரின் சலசலப்பானது, காளிங்கனை நடுங்குறச் செய்யத்தக்கதாய் இருந்தது. சினந்து, சீறிட்டெழுந்த காளிங்கனை அடக்கி, அவன் தலைமீதேறி நர்த்தனம் புரிய ஆரம்பித்தான் இறைவன்.

கண்ணனைத் தாக்க முயன்ற ஒவ்வொரு தலைகளின் மீதும், தாவித் தாவி மிதித்து, அத்தலைகளை அடக்கி அவற்றின் மீது நடனமாடி, காளிங்கனை ஆட்கொண்டான். கண்ணனின் திருவடிகள் படக்கூடிய பெரும்பேறு பெற்ற, காளிங்கன் அம்மடுவை விடுத்து வேற்றிடம் சென்றான்.தூய நடம் புரியும் சுந்தர என் சிறுவா! துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே! - பிருந்தாவனத்திற்கருகில் இருந்த கானகத்தில் இருந்த பெரிய மடுவில் வசித்து வந்த கொடிய விடத்தைக் கக்கி அங்கிருந்த பூமியையும், பூங்காற்றையும், தேன்புனலையும் தீதாக்கிக் கொண்டிருந்த காளிங்கன் என்னும் கருநாகத்தினை அடக்கி, அதன் தலைகள் மீதேறி நன்னடனம் புரிகின்ற அழகனே என் மைந்தனே! அரச குலத்தவரையும், அவர்களுக்கொப்பானவர்களையும் மட்டுமே ஏந்திச் செல்லக்கூடிய பெருமையுடைய பட்டத்து யானையை, - மதுராபுரியின் பட்டத்து யானையான குவலயாபீடத்தின் கொம்புகளை சீறிப் பாய்ந்து பறித்தவனே! (நடம் - நடனம், நர்த்தனம்; துங்கம் - உயர்வு, பெருமை; கரி - யானை; கொம்பு - தந்தம்)

ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்தாடிய தாளிணையாய்! - கம்சனிடமிருந்து பெறக்கூடிய ஆதாயத்திற்காக, கம்சனுக்கு ஆதரவாக கண்ணபெருமானிடமும் பலராமரிடமும் மல்யுத்தம் புரிய வந்தவர்களை எல்லாம் சிறிதும், பதற்றப்படாமல் பரபரப்பில்லாமல் அவர்களை அழித்தாடிய வலிமைமிகுந்த, அதேசமயம் மலரினும் மெல்லிய, செவ்விய திருவடிகளைக் கொண்டவனே! (ஆயம் - ஆதாயம்; பொருவான் - ஒப்புவான்; மல்லு - மற்போர்; அந்தரம் - பதற்றம்; தாள் - பாதம்; இணை - இரண்டு)

ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - நல்லவர்களுக்குக் குளிர் மழையாகவும், அல்லவர்களுக்குக் கொடும்புயலாகவும் தோன்றவல்லவனே, என்றும் வெற்றித்திருநடனம் புரிபவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒருபொழுது, செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை:

கருநீல காயாமலரின் வண்ண தேகங்கொண்டவனே! குளிர்மழைப் பொழிகின்ற கருமேகத்தைப் போன்ற உருவங்கொண்டவனே! பிருந்தாவனத்திற்கருகில் உள்ள காட்டிலிருந்த பெரியமடுவில் வசித்து வந்த நூறு தலைகளைக் கொண்ட காளியன் என்ற பெரிய கருநாகத்தை அடக்கி, அதன் தலைகளின் மேல் நல் நடனம் புரிந்த அழகனே! என் மைந்தனே! அரச குலத்தவரை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய பெருமைமிகுந்த பட்டத்து யானையின் கொம்புகளைப் பறித்தவனே! கம்சனிடமிருந்து பெறக்கூடிய நன்மைக்காக, உன்னை எதிர்க்க வந்த மல்யுத்தவீரர்களை எல்லாம்,மிகவும் எளிமையாக, எவ்வித பதற்றமோ பரபரப்போ இல்லாமல் அழித்து, உன் இரு திருவடிகளாலும் மதுராபுரியில் வெற்றித் திருநடனம் புரிந்தவனே! உன் கருமேக தேகம், காண்பவரைப் பொறுத்தது. நல்லவர்களுக்குக் குளிர்மழையாகவும், பொல்லாதவர்களுக்குக் கடும் புயல் மழையாகவும் பொழிய வல்லவனே, எனக்கு ஒரு பொழுது செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! காளியன் மீதும், மதுராபுரியிலும் வெற்றித்திருநடம்புரிந்த வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

8 comments:

Anonymous said...

Happy new year 2010!

தமிழ் said...

srikamalakkanniamman said...

Happy new year 2010!//

Thank you, Kamalakkanniamman.

Sri Kamalakkanni Amman Temple said...

Tamizh iyaa happy new year unga padivukkutaan innum varala. he.. he..

தமிழ் said...

:-))

அண்ணாமலை..!! said...

வேதம் நான்கும் உரை கூறும் துணைவனுக்கோ பாதகங்குறைப்பதிலே பயம்..!!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

In Love With Krishna said...

Beautiful!!! :)
Thanks!!!