Friday, August 5, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 9

வெண்புழுதி மேல் பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறுபுகர் படவியர்த்து*
ஒண்போதலர் கமலச் சிறுக்காலுறைத்து ஒன்றும் நோவாமே*
தண்போது கொண்டதவிசின் மீதே தளர்நடைநடவானோ.

பொருள்:

வெண்புழுதி மேல் பெய்து கொண்டளைந்ததோர் வேழத்தின் கருங்கன்று போல்- வெண்மையான, மணல் புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்டு, அந்த மணலிலேயே உருண்டு, புரண்டு அனுபவித்து விளையாடி மகிழும், சிறிய யானைக்குட்டியினைப் போல (வெண்புழுதி - வெண்மையான புழுதி; அளை - அனுபவித்தல், மகிழ்தல், விளையாடுதல்; வேழம் - யானை)

தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறுபுகர் படவியர்த்து - மூன்றடியில் உலகளந்த எம்பிரான், தெளிந்த புழுதியில், வியர்த்து விறு விறுக்க விளையாடி. நெடுநேரம் விளையாடினமையில், அவன் மேனியெங்கும் வியர்வைத் துளிகள் பூத்து சிறு சிறு அருவியினைப் போல் வழிகின்றனவாம். (தெண் புழுதி - தெளிந்த புழுதி; புகர் - அழகு, அருவி)

ஒண்போதலர் கமலச் சிறுக்காலுறைத்து ஒன்றும் நோவாமே- கதிரவன் உதயமாகிக் கீழ்வானம் வெளுத்து ஒளிரும் இளங்காலைப் பொழுது. அவ்வழகிய காலை வேளையில் தாமரைமொட்டுகள் அனைத்தும், மலரத் தயாராகி இருக்கின்றன. போது நிலையில் உள்ளன. சூரியனின் ஒரு கதிரின் ஒளியும் வெப்பமும் பட்டாலும் போதும், உடனே மலர்ந்து விடும். அத்தகைய நிலையிலுள்ள செந்தாமரை மலரின் போதுவினைப் போன்ற உன் அழகிய சின்னஞ்சிறு பாதங்களுக்கு, சிறு துரும்பு, கல், முள் போன்ற எத்தகைய ஒரு கடினமான பொருளினாலும் தீங்கு விளைந்திடாமல் இருக்கும் வண்ணம் (ஒண்போதலர் - ஒண்+போது+அலர் - ஒளிரும் பொழுது மலரும்; சூரிய உதயத்தின் போது இருக்கும் மலரின் நிலை; கமலம் -தாமரை; உறைத்து -உறுத்துதல், துன்பம்நேர்தல்; நோவாமே - வலிக்காமல் இருக்க)

தண்போது கொண்டதவிசின் மீதே தளர்நடைநடவானோ- அன்னச்சிறகினை ஒத்த மென்மையான மெத்தையில் குளிர்ந்த, முதிர்ந்த, போது நிலையிலுள்ள தண்மையான, மணம் மிகுந்த மலர்களை எங்கும் பரப்பி வைத்துள்ள இந்த தாழ்வான உயரமுடைய, பெரிய கட்டிலின் மேல் தளர் நடைநடவாயோ! (தண்போது - தண்மையான போது - குளிர்ந்த போது நிலையிலுள்ள மலர்; தவிசு - மெத்தை, இருக்கை, ஆசனம், கட்டில் )

புழுதியில் புரண்டது போதும், இந்த மலர் மஞ்சத்தின் மேல் மகிழ்ந்து வா! என்று அழைக்கிறார் பெரியாழ்வார். முன்னம் ஒரு பாடலில் பகைவர்களின் தலைகளின் மேல் நடந்து வராப் போல பாடினவர், இப்போ பூப்பாதையில நடந்து வர்ராப் போல பாடறார்.

"பாத மலர் நோகுமுன்னு, நடக்கும் பாதை வழி பூவிரிச்சேன், திரிவிக்கிரமா!"

பதவுரை:

மண்ணையும் விண்ணையும் ஈறடியில் அளந்து, மூன்றாவது அடிக்கு மன்னவன் தலையினையே அளந்த மன்னாதி மன்னவனே! வெண்மையான புழுதி மணலை, தன் மேனியெங்கும் அள்ளி இறைத்துக் கொண்டும், அம்மணலிலேயே உருண்டு, புரண்டு விளையாடும், சிறிய, கரிய யானைக்குட்டியினைப் போல் தெளிந்த புழுதி தேகமெங்கும் படர, நெடுநேரம் விளையாடியதினால் உன் மேனியில் வியர்வைத்துளிகள் சிறு, சிறு அருவியினைப் போல் வழிந்தோடுகின்றன. கீழ்வானில் சூரிய ஒளி உதயமாகும் பொழுது மலரும் செந்தாமரை மலரினை ஒத்த உன் பாதக்கமலங்களில், ஏதும் உறுத்தாமல், காலுக்கும் வலி ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அன்னச்சிறகினை ஒத்த மென்மையுடைய இந்த மெத்தையில் குளிர்ச்சி மிகுந்த, போது நிலையிலுள்ள இளம் மலர்களைப் பரப்பிவைக்கப்பட்டுள்ள இந்த தாழ்ந்த, பெரிய கட்டிலின் மேல் தளர்நடை நடவாயோ, திரிவிக்கிரமா!

17 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

தளர்நடை பாசுரம் எட்டாம் திருமொழி பாடலில் வருமே.
1.8.9 -


pl. check:)

நாடி நாடி நரசிங்கா! said...
This comment has been removed by the author.
நாடி நாடி நரசிங்கா! said...

சப்பாணி பாசுரம் ஒன்றோடு நிறுத்திவிட்டீர்களே !
:)

தமிழ் said...

o.k. will check.

தமிழ் said...

அது இராம்குமார் துவங்கியதினால் அதில் நான் ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு விருப்பமானால், நான் தொடர்வேன். இல்லையென்றாலும் வருத்தமிலை. அதை அவரே நிறைவு செய்யட்டும்.

தமிழ் said...

தளர் நடைப்பருவம் - தொடர்சங்கிலிகை- ஏழாவது திருமொழியிலதானே இருக்கு.

தமிழ் said...

நீங்க எதனால் இப்படி சொல்றீங்க? எனக்கு புரியல...

தமிழ் said...

விக்கிநூல்கள் ல கூட ஏழாவதாகத்தான் இருக்கு.

தமிழ் said...

காப்பு பாடலான, திருப்பல்லாண்டினை முதல் திருமொழியாகக் கொண்டீரோ?!

Rajewh said...

காப்பு பாடலான, திருப்பல்லாண்டினை முதல் திருமொழியாகக் கொண்டீரோ?!

yes.. source:- www.dravidaveda.org

& www.prapatti.com (pdf formet)

:)

நாடி நாடி நரசிங்கா! said...

தண்போது கொண்டதவிசின் மீதே தளர்நடைநடவானோ- அன்னச்சிறகினை ஒத்த மென்மையான மெத்தையில் குளிர்ந்த, முதிர்ந்த, போது நிலையிலுள்ள தண்மையான, மணம் மிகுந்த மலர்களை எங்கும் பரப்பி வைத்துள்ள இந்த தாழ்வான உயரமுடைய, பெரிய கட்டிலின் மேல் தளர் நடைநடவாயோ

:))

SO cuteeee. எப்படி ஜம்மன்னு இருக்கும்

ஐயோ ஐயோ எனக்கு கூட இந்த மாதிரி பூ மேல நடக்கனும்னு ஆசை:)

முகவை மைந்தன் said...

//சப்பாணி பாசுரம் ஒன்றோடு நிறுத்திவிட்டீர்களே !//

//அது இராம்குமார் துவங்கியதினால் அதில் நான் ஒன்றும் செய்யவில்லை//

ஆப்பின் மீதிருக்கும் போது அசைவது கேடு. ஆழ்வார் தமிழாலும் என்னைக் காப்பாற்ற முடியவில்லை. வெளியில் ஒப்புக்கொண்ட பணிகளும் என்னை அழுத்துகின்றன. மன்னிக்கவும்.

பாடல்கள் நான் நினைத்தது போல பொருளுணர்ந்து கொள்வது மட்டுமில்லாது திடீரென ஒருநாள் முழுவதும் ஆட்கொள்வதாக அமைந்து விடுகிறது. அந்த நாளுக்காக காத்திருப்பதா என்ற குழப்பமும் இருக்கிறது.

விரைவில் நிறைவு செய்கிறேன்.

தமிழ் said...

கேழ்வரகு கேப்பில் ஹெலிகாப்டர் ஓட்டறது படு ஜோரு!

காத்திருக்கிறோம்! :-)

முகவை மைந்தன் said...

கேழ்வரகு இடைவெளில வான்பல்லக்கு ஓட்றேனா.. எங்களுக்கும் காலம் வரும்.

குமரன் (Kumaran) said...

அருமையா இருக்கு பாசுரம். அறிமுகத்திற்கும் சிறந்த விளக்கத்திற்கும் நன்றி.

Radha said...

மிகவும் அருமையான விளக்கத்திற்கு நன்றி.

தமிழ் said...

நன்றி குமரன் மற்றும் இராதா!