Friday, March 28, 2008

பொய்கையாழ்வார்; பூதத்தாழ்வார்; பேயாழ்வார்.

உங்களுக்கெல்லாம், ஒரே வருடத்துல, ஒரே மாதத்துல, ஒரே வாரத்துல செவ்வாய், புதன், வியாழன் என்னும் அடுத்தடுத்த மூன்று நாட்கள்ல அவதரித்த மூவேந்தர்கள பத்தி சொல்லட்டுமா?

மூவேந்தர்கள் -ன்னு நான் சொன்னது நம்ம சேரன், சோழன், பாண்டியன் இவங்கள இல்ல. நான் சொன்னது மூவுலகத்தையும் ஆளும் பிரானின் பிரியமான மூவரைப் பத்தி. அவங்க மூணு பேரும் யாரென்றால், அவங்கதான், நான் சொன்ன பன்னிரு ஆழ்வார்களில் முதல் மூவர். தெரிஞ்சுடுச்சா! அவங்களேதான்



1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்.

இம்மூன்று பெரியவர்களும் அவதரித்த ஆண்டு - கி. பி. 460 - 540 (5 ம் நூற்றாண்டு)

பொய்கையாழ்வார்:

பொய்கையாழ்வாரின் அவதாரத் திருக்குறிப்புகள்:

ஊர் - காஞ்சி
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - திருவோணம் (ஷ்ரவணம்)
திதி - சுக்லாஷ்டமி(செவ்வாய்)

பொய்கையாழ்வார் பிறப்பு பற்றிய உண்மை அறியப்படவில்லை. தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார்.

பூதத்தாழ்வார்:

ஊர் - மகாபலிபுரம்
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - அவிட்டம்(தனிஷ்டம்)
திதி - நவமி (புதன் கிழமை)

மகாபலிபுரம் - இத்திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். (ஸ்தல ஸயன பெருமாள்)
பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் - குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும்.

அம்சம் ல்லாம் மென்மையா, மணமா, அழகாத்தான் இருக்கு; ஆனா பேர் மட்டும் ஏன் பூதம் ன்னு வெச்சி இருக்காங்க? அதாவது, பூதம் ன்னா, அது மாத்ரூ பூதமோ, இல்ல வேற ஆவிப் பூதமோ கிடையாது. பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.

பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

பேயாழ்வார்

ஊர் - மயிலாப்பூர்
ஆண்டு - சித்தார்த்த
மாதம் - ஐப்பசி
நட்சத்திரம் - சதயம்
திதி - தசமி(வியாழன்)

பேயாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களில் ஒன்றான வாளின்(நாதங்கம்) அம்சமாவார். இவரும் மயிலாப்பூரில் உள்ள திரு ஆதி கேசவ பெருமாளின் திருத்தலத்தில் இருக்கும் திருக்கிணற்றில் மலர்ந்திருந்த செவ்வல்லி மலரிலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இவர் பெயர் ஏன் பேய் ஆழ்வார் என்று வந்தது என்று தெரியுமா? இவர், ஊர் ஊராக... எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு பேயைப் போல் திரிந்து வந்ததால், அவருக்கு 'பேய் ஆழ்வார்' என்று பெயர் வந்தது.

இம்மூவரும் 'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை நம்மாழ்வார், 'இன்கவி பாடும் பரம கவிகள்' என்று போற்றுகிறார்.

பொய்கையாழ்வார், தத்துவ ஞானத்திலிருந்து எவ்வாறு பர ஞானம் உருவாகிறது என்றும்,
பூதத்தாழ்வார், பர ஞானம் எவ்வாறு பர பக்தியாக மலர்கிறது என்றும்,
பேயாழ்வார், பரபக்தி எவ்வாறு பரம பக்தியாக நிறைகிறது என்றும் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் மூவரின் பிரபந்தமும் ஒன்றாக இணைந்து 'இயற்பா' என்று அழைக்கப்படுகிறது.

இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர். ஆனால் வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை. பின் எப்படி? இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன. இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல! இம்மூன்று அன்புக்கடலையும் எம்பிரான் சங்கமிக்க வைத்த இடம் திருக்கோவிலூர் ஆகும்.

ஓம் நமோ நாராயணாய நம!!
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!

6 comments:

Rajewh said...

What a fentastic fentastic how tell.,, amazing explanation about alwars.,, thank you

தமிழ் said...

மிக்க நன்றிகள் கலவை! உங்கள் வருகையும், வாழ்த்துக்களும், மென்மேலும் பல முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

அண்ணாமலை..!! said...

அருமை தமிழ்..!! அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்..!!
நன்றி..!!

palliator said...

DIVINE...SIMPLE....INFORMATIVE,,,,

palliator said...

DIVINE...SIMPLE....INFORMATIVE,,,,

Unknown said...

really its an amazing infos thankxxxxxxxxxxxx