Thursday, July 10, 2008

தொண்டரடிபொடி ஆழ்வார்

தொண்டரடிபொடி ஆழ்வார்:

பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு (740 - 800)
ஆண்டு - பிரபவ
மாதம் - மார்கழி
நட்சத்திரம் - கேட்டை
கிழமை - செவ்வாய்
அம்சம் - வைஜெயந்தி வன மாலை
பிறந்த ஊர் - திருமண்டலங்குடி.

தொண்டரடிபொடி ஆழ்வார், திருமண்டலங்குடி என்னும் ஊரில், 'குடுமி சோழியப் பிராமணர்' என்று அழைக்கப்படும் விப்ர இனத்தில் பிறந்தவர். அவர்களது பணியே எம்பெருமானைப் பற்றியப் புகழினைப் பாடுவதே ஆகும்.

தொண்டரடிபொடி ஆழ்வார் பிறந்த 12 ம் நாள், அவருக்கு 'விப்ரநாராயணர்' பெயரிடப்பட்டார். சிறு வயதிலே அவருக்கு முறையான கல்வியும், வேதமும் போதிக்கப்பட்டு, அவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். அவர் பெரியவரானாலும் சிறு வயதினரானாலும் ஒரே மாதிரியாகவே மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி வந்தார்.

ஒரு நாள், ஸ்ரீமன் நாராயணனின் சேனைத்தலைவரான, விஸ்வக்சேனன் இப்பூவுலகிற்கு வந்து, விப்ர நாராயணர் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தையும், அவர் முக்தி அடைவதற்கான வழிமுறையையும் எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்ட பிறகு, விப்ர நாராயணனுக்கு ஸ்ரீ மன் நாராயணனின் மேல் அன்பும் பக்தியும் மிக ஆரம்பித்தது. அவர், இறைவன் மேல் தாம் கொண்ட பக்தியை, எம்பெருமான் குடி கொண்டிருக்கும் எல்லா திருத்தலங்களுக்கும் சென்று அவரின் சேவையைக் கண்ணாரக் காண்பதன் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி அவர்,

மூவுலகத்திற்கும் முதல்வனானவனின் திருத்தலங்களில் முதன்மையானது, திருவரங்கம். எனவே, திருவரங்கத்தில் இருந்து துவங்கினார். அங்கே,

மூலவர் சந்நிதியில் திருவரங்கப் பெருமான் ஆதிசேஷனின் மேல் சயனத்திருக்கோலத்தில் வீற்றிருக்கும் திருத்தோற்றத்தைக் கண்டு அந்த அழகிலே மயங்கித் தன்னையும், தரணியில் மற்றுமுள்ள யாவற்றையுமே மறந்தார்.

இனி, இவ்வுலகில் இறைவன் அரங்கனைத் தவிர வேறு எதையும் தன் கண்ணாலும் காணாமல், அரங்கன் ஒருவனுக்கேத் தான் அடிமையாய் இருந்து தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்குச் சேவை செய்தே கழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன் பிறகு, அவர் திருவரங்கத் திருத்தலத்திலேயேத் தங்கி, இறைவனுக்கு நாள்தோறும் புதுமலர்களைக் கொய்து, பெருமாளுக்குப் பூமாலை அணிவித்து அழகுப் பார்த்துவிட்டுத் தான், தன் பணிகளைத் துவங்குவார்.

அதற்காக அவர், அத்திருத்தலத்திலே ஒரு அழகிய, புது பூங்காவனத்தையே உருவாக்கி, அதன் மத்தியில் தனக்காக ஒரு சிறு குடிலையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு அவர் உலகில் எதையும் காணாமலும், எப்பொருள் மேலும் இச்சைக் கொள்ளாமலும், யாரையும் விரும்பாமல் வாழ்ந்து வந்தார். இவர் இப்படியேதான் தன் வாழ்நாள் முழுவதும் இருந்தாரா???

அதுதான் இல்லை. என்ன இல்லையா? ஆம், ஐயா! அவர் வாழ்விலும் வீசியது வஞ்சியரின் வாடைக் காற்று!

திருக்கரம்பனூர் என்னும் ஊரில் தேவி, தேவதேவி என்று அக்காள், தங்கையர் இருவர் இருந்தனர். அவர்கள் மன்னர்கள் முன் நடனமாடி பரிசில் பெறும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரு முறை உறையூர் மன்னன் முன் ஆடிப் பரிசில் பெறுவதற்காக வந்திருந்தனர்.

பரிசில் பெற்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பும் வழியில், திருவரங்கப் பெருமானை வழிபடலாம் என்று எண்ணி அத்திருத்தலத்திற்குச் சென்றனர். அப்பொழுது, அங்கிருந்த பூங்காவனத்தின் அழகும், அமைதியும் அவர்கள் இருவரையும் மிகவும் கவர்ந்தது. நாம் இப்பொழுது இருப்பது பூலோகத்திலா? இல்லை, இந்திரலோகத்திலா என்று அதிசயித்து, இந்த அழகிய நந்தவனம் எவருக்கு சொந்தமானது? என்று வினவினாள்.

அதற்கு அவள் அக்காள், 'இது விப்ர நாராயணர் என்னும் மிகப்பெரிய விஷ்ணு பக்தன் உருவாக்கியது. அவர் இறைவனுக்கு நாள்தோறும் பூமாலை அணிவிப்பதற்காகவே இதை உருவாக்கினார்,' என்று பதிலளித்தாள்.

'தான் அவரைக் காண வேண்டும்' என்று தன் தமக்கையிடம் கூறினாள். அதனால், இருவரும் அவரைக் காண அவர் குடிலுக்குச் சென்றனர். அங்கே அவரின் அழகைக் கண்டு இருவரும் மயங்கினர். முதல் பார்வையிலேயே, தேவதேவி விப்ர நாராயணரை விரும்ப ஆரம்பித்தாள்.

உடனே தேவதேவி தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். ஆனால், அவர் அவளை உதாசினப்படுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தேவதேவி, தான் இக்குடிலிலேயே தங்கி மிக விரைவில் அவரின் மனத்தை மாற்றுவதாக உறுதிக் கொண்டாள்.

மூத்தவளான தேவி, தேவதேவியை ஆசிர்வதித்து விட்டு, தன் ஊருக்குப் புறப்பட்டார். தேவதேவியும், தன் பொருளையெல்லாம் இறைவனுக்கு அளித்து விட்டு, முனிவர்களைப் போல் உடையணிந்து இனியாவது வரை வந்து, விப்ர நாராயணனிடம், ' தான் இது எவருக்கும் உபயோகமில்லாமல், ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்ததாகவும், தான் அவருடன் இணைந்து அவருக்குத் துணையாய் உதவிகள் புரிந்து இறைவனுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினாள்.

இயல்பாகவே அன்புள்ளம் கொண்ட விப்ர நாராயணரும் அவளின் பேச்சுக்கு மனமிரங்கி, தேவதேவியின் விருப்பத்திற்கு சம்மதம் அளித்தார். அன்று முதல் இருவரும் இணைந்து இறைவனுக்குப் பூசை, தொண்டுகள் செய்தனர்.

தேவதேவியின் அன்பில் மெச்சிய விப்ர நாராயணரின் மனம் மெதுமெதுவாக தேவதேவியின் பக்கம் திரும்பியது. அவள் கூறியபடி, விப்ர நாராயணனை முழுவதுமாக மாற்றி, இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

ஒருநாள், தேவதேவி தான் தன் பெற்றோரையும், தமக்கையையும் பார்க்க விரும்புவதாகக் கூறினாள். உடனே, விப்ர நாராயணனும் உடன் வருவதாகக் கூறினார். இருவரும் திருக்கரம்பனூர் வந்து சேர்ந்தனர்.

தேவதேவியின் தாயார், பொருளில்லாத விப்ரநாராயணனை வீட்டிற்குள் அனுமதிக்க விரும்பவில்லை. உடனே, விப்ர நாராயணனும், மிகவும் மனமுடைந்த நிலையில் நந்தவனத்திற்கு வந்தார். அவர், தேவதேவி இல்லாமல் இனி தன்னால் ஒரு வினாடி கூட வாழ முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்.

இக்காட்சியைக் கண்ட எம்பெருமான், விப்ர நாராயணனை அந்த மாயையிலிருந்து விடுவிக்க முடிவு செய்தார்.

உடனே, அருட்பெருஞ்சோதியான பெருமாள், விப்ரநாராயணனின் சீடனைப் போல் உருமாறி, தேவதேவியின் தாயார் வீட்டிற்கு வந்து, ஒரு வெள்ளி வட்டலைக் கொடுத்து, ' இதை என் குரு கொடுத்து வரச் சொன்னார்' என்று கூறி ஒரு வட்டலை அந்த அம்மாவிடம் கொடுத்தார்.

தேவதேவியின் தாயாரும் மிகுந்த மகிழ்வுடன் அதைப் பெற்றுக் கொண்டு, 'உன் குருவை உடனே வரச் சொல், அவர் போனதிலிருந்து என் மகள் உணவு, உறக்கம் இல்லாமல் இருக்கிறாள், என்று கூறி அனுப்பினாள்.

மறுநாள், காலை திருவரங்கக் கோயிலின் அர்ச்சகர், பூசை செய்யும் போது, நாள்தோறும் இறைவனுக்கு பூசை செய்ய உதவும் ஒரு வட்டல் காணாமல் போனதை அறிந்து, மிகப் பதற்றத்துடன் சென்று மன்னனிடம் புகார் செய்தார். உடனே காவலர்கள் சென்று ஊரெங்கும் தேடி, அது தேவதேவியின் வீட்டிலிருப்பதை அறிந்தனர்.

வழக்கு விசாரணையின் போது, தேவதேவியின் தாயார், விப்ர நாராயணனின் சீடன் அளித்தது, என்று கூறினார். அதனால், விப்ர நாராயணன் சிறை வைக்கப்பட்டார். அவர் மிகவும் மன வருத்தத்துடன் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்று மனம் நொந்து இறைவனை வேண்டினார்.

அன்று இரவு, திருவரங்கப் பெருமாள், மன்னனின் கனவில் தோன்றி நடந்தவற்றைக் கூறி, விப்ர நாராயணனை விடுவிக்குமாறு கூறினார். அவ்வாறே மன்னனும் செய்தார்.

மறுநாள் காலை, விடுதலை யான விப்ர நாராயணன், தான் இவ்வுலகில் ஏன் வந்தோம் என்னும் உண்மையை உணர்ந்து, திருவரங்கப் பெருமானின் சந்நிதிக்குச் சென்று பெருமாளை முழுமையாகச் சரணடைந்தார்.

அதன் பின், அவர் திருவரங்கத்திலே இருந்த எம்பெருமானின் பக்தர்கள் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கி, அவர்களின் திருப்பாதம் பட்ட மண்ணை(திருவடிகளின் பொடிகளை) எடுத்து தன் தலையில் இட்டுக் கொண்டு, அரங்கநாதனின் அருமை பெருமைகளை எல்லாம் பாடலாகப் பாடினார்.

அதுமுதலே, விப்ர நாராயணர், தொண்டரடிபொடி ஆழ்வார் என்று அழைக்கப்பெற்றார்.

அவர் பாடிய பாடல்கள்:

. திருப்பள்ளி எழுச்சி
. திருமாலை ஆகியன ஆகும்.

ஓம் நமோ நாராயணயா நம!!
தொண்டரடிபொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

2 comments:

செல்வேந்திரன் said...

ungal muyarchiku paraatukal..

தமிழரசன் said...

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் திரு. செல்வேந்திரன்!