Thursday, July 17, 2008

திருப்பாணாழ்வார்.

திருப்பாணாழ்வார்:

காலம் - 7 ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
ஆண்டு - பிரசோத்பதி (தவறென்றால் திருத்தவும்)
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - ரோகிணி
ஊர் - உறையூர்.
அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)

திருப்பாணாழ்வார் பிறப்பு பற்றிய முழுமையான தகவல்கள் அறியப்படவில்லை. இவர் உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார்.

பாணர் என்னும் இனம் உண்மையில் தீண்டத்தகாத இனம் அல்ல. அவர்கள் இறைவன் பேரிலும், மன்னனைப் பற்றியும் பாண் என்னும் இசைக்கருவியினால் இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அத்தகைய இனத்தில் வளர்ந்த நம் திருப்பாணாழ்வாருக்கு பாடல்கள் பாட பயிற்சியும் வேண்டுமோ??

இவர் இறைவனுடன் இரண்டறக் கலந்த அந்த சுவையான தகவலை அறிவோம் வாருங்கள்....

திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை.

அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார்.

ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.

ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். உடனே, தன் சுயநினைவுக்கு வந்த திருப்பாணாழ்வார் விலகி நின்றார்.

பிறகு, திருமஞ்சன நீரை எடுத்துக் கொண்டு, ஆலயத்திற்குள் நுழைந்த இலோக சாரங்க முனி, அங்கே திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து பதறிய அர்ச்சகர், மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார்.

இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.

மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.

கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.

அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்து, இறுதியில்.....

அவர் திருவழகைக் கண்ட கண்கள் இனி உலகில் வேறு எதையும் காணாது என்று அக்கணமே, திருவரங்கப் பெருமானின் திருவடியில் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

தீண்டத்தகாதவர் என்று ஊராரால் ஒதிக்கவைக்கப்பட்டவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அந்த பரம்பொருள்.

தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது...

திருப்பாணாழ்வார், பாண் என்னும் இசைக்கருவியில் வல்லவராயும், எப்பொழுதும் பெருமாளைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பதாலும், அவர் பாண் பெருமாள் எனவும்,
இலோக சாரங்க முனியின் தோளில் ஏற்றிச் சென்றதால், முனிவாகனன் எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும்.

அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.
ஓம் நமோ நாராயணாய நம!!
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!!

2 comments:

CVR said...

மிக நல்ல முயற்சி!!
எனக்கு தமிழ் ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணமே சிறு வயதில் நான் தெரிந்தும் தெரியாமலும் உச்சரித்த திவ்யப்பரபந்தங்கள் தான்..
:)

தமிழ் said...

தாங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள்!

அப்படியே, உங்களுடைய "தமிழில் புகைப்படக்கலை" மிக அருமை! நான் விரும்பி படிக்கும் மற்றொரு வலைப்பூ!