திருப்பல்லாண்டு - பாடல் 2
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர்புக்கு முழங்கும்அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர்புக்கு முழங்கும்அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!
பொருள்:
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு- உம் அடியார்களாகிய நாங்கள் உன்னோடு எந்நாளும் பிரிவின்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும் இறைவனே! (நின்னோடும் - உன்னோடும்)
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு- எந்நாளும் பிரிவின்றி உன் வலபக்க மார்பினுள் இதயத்தாமரையில் வீற்றிருக்கும் அழகிய இளநங்கையான திருமகளும் பல்லாண்டு வாழ்வதாக! (வடிவு - அழகு)
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு- நின் வலக்கரத்தில் தாங்கிய பேரழகு பொருந்திய பொன்னொளி வீசும், அதன் செஞ்சுடரே எதிரிகளை எல்லாம் எரித்து சாம்பலாக்கவல்ல சக்கரமும் பல்லாண்டு வாழ்வதாக!
எதிரிகளை அழிப்பதில் மட்டுமல்ல, அடியவர்களுக்குதவுவதிலும், ஆபத்திலிருந்து காப்பதிலும் தாமோதரன் தாமதித்தாலும் இந்த சுதர்சன ஆழ்வார் தாமதிக்கவே மாட்டார்.
திருமால், தானே திருக்கஞ்சனூர் என்னும் ஊரில் வாசுதேவருக்குப் புத்திரராக சுதர்சனராக அவதரித்தார். அவருக்கு சுதர்சனர் என்று பெயரிட்டனர், பெற்றோர். அவரே இந்த சக்கரத்தாழ்வார் ஆவார்.
ஒருநாளும் தவறாமல் கமலக்கண்ணனுக்கு கமலப்பூவினைச் சூட்டிவிடுவான் கஜேந்திரன் என்னும் யானை. ஒரு நாள் அவனை கூகு என்னும் (crocodile) முதலை கவ்விக் கொண்டது. அப்போது முகுந்தனுக்கு முன்னமேயே விரைந்து வந்து முதலையின் தலையை வாங்கியது, இந்த சக்கரத்தாழ்வாரே.
கிருஷ்ணாவதாரத்தில் அசுய யாகம் நடத்த கண்ணனுக்கு முதல் மரியாதை செய்யும் வேளையில் கண்ணன் உட்பட அங்கிருந்த பீஷ்மன், யுதிர்ஷ்டிரன் என்று அனைவரையும் மிகவும் மோசமாக ஏசிக்கொண்டிருந்தான் சிசுபாலன். அதைப் பொறுக்க இயலாத கண்ணனும் தன் சக்கரத்தை ஏவிவிட்டு சிசுபாலைனைக் கொன்று முக்தி அளித்து, தன் துவாரபாலகராக்கிவிட்டார்.(ஆழி -சக்கரம்(சக்கரத்தாழ்வான்) வலத்துறையும் - வலப்பக்கம் உறையும்)
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!- அனைவரையும் எப்போதும் விழிப்பாய் வைத்திருக்கும், படைகள் போர்க்களத்தில் செல்லும்போது அங்கு முழங்கும் சங்கும் பல்லாண்டு வாழ்வதாக! (புக்கு - புகுந்து, அப்பாஞ்ச சன்னியம் - சங்கு)
பாஞ்ச சன்னியம் என்பது சங்கு வடிவிலிருந்த பாஞ்ச ஜனன் என்னும் அசுரனை, சீனிவாசன் அடக்கி அவருக்கு முக்தி தந்து சங்கு வடிவில் எந்நாளும் தன்னுடன் இருக்கும் படி வைத்துக் கொண்டார்.
கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
என்று ஆண்டாள் மாதவனின் திருவாய், பச்சைக் கற்பூரம் போல் இனிதாய் மணக்குமா? இல்லை, கமலப்பூவினைப் போன்று கம கம வென்று மணக்குமா? பவளம் போன்று சிவந்த நிற வாய் இதழ்கள் எப்படி தித்தித்திருக்கும்? அந்த செவ்வாயின் சுவை எவ்விதம் இருக்கும்? என்று பூவராகனின் பூவிதழ்களின் நாற்றமும் மணமும் அறிந்துக் கொள்ள வெண்சங்கிடம் விழைந்து கேட்கிறாள் ஆண்டாள். இறைவனின் திருவாய் சுவை, மணம், திடம் எல்லாம் அறிந்த, அறியக்கூடிய பேறு பெற்றவர் இந்த பஞ்ச சான்னியம் என்னும் சங்கே!
பால்வெண்சங்கும், சுதர்சன சக்கரமும் எக்காலத்தும் இறைவனுடன் இணைபிரியாமல் இறைவனுக்குக் காவலாய் இருப்பவர்கள்! சங்கு எப்போதும் விழிப்பாய் இருக்கவும், சக்கரம் தீமைகளை அழிக்கவல்லதாயும் இருந்து இறைவன் கண்ணயர்ந்தாலும் இவைகள் ஒருகணமும் இமைக்காமல் விழிப்புடன் இறைவனைப் பாதுகாக்க வேண்டுமென பெரியாழ்வார் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்!
ஆபத்பாந்தவனுக்கே ஆபத்தா! காக்கும் கடவுளுக்கே காக்கும் கரங்களா! இங்குதான் நம் விஷ்ணு சித்தர் தாயாய் மாறி தனியாய் தெரிகிறார். ஆளுயர வளர்ந்த பிள்ளை, ஆணைக்கால் குவளையில் அன்னமிட்டாலும் பத்தாதென்று உண்பவனுக்கு, இன்னும் உணவு உண்ணத் தெரியவில்லை என்று இடித்துரைத்து, உணவூட்டம் தாயுள்ளம்! இந்த அக்கறை உணர்வு அன்னையைத் தவிர வேறு எவருக்கும் வராத உணர்வு!
பதவுரை:
பரிவுள்ளம் கொண்ட பரிமள நாதா, எம் பெருமானே! உன்னோடும் உம் அடியவர்களோடும் நாங்கள் எந்நாளும் பிரிவின்றி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேணும்; எந்நாளும் உன் வலப்பக்கமார்பினில் இதயத்தாமரையில் பூத்திருக்கும் அழகிய திருமகளும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும்; உன் வலக்கையில் வீற்றிருக்கும் பேரொளி வீசும் சக்கரத்தாழ்வானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்; படைகள் போர்க்களத்தில் நுழையும் போது அங்கே ஊதப்படும் வெண் சங்கும் பல்லாண்டு் பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்வதாக!
4 comments:
முதல் பாசுரத்தில் திருவடியைச் சொன்னார்! இந்தப் பாசுரத்தில் நம் அனைவரையும் முதலில் சொல்லி விட்டுத் தான், அடுத்து திருமகள், சக்கரம், சங்கு என்று பேசுகிறார் பாருங்கள்! அருமை! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
//இந்தப் பாசுரத்தில் நம் அனைவரையும் முதலில் சொல்லி விட்டுத் தான், அடுத்து திருமகள், சக்கரம், சங்கு என்று பேசுகிறார் பாருங்கள்! //
ஆமாம் திரு.கேயாரெஸ், சரியாகச் சொன்னீர்கள்! திருமகள், சக்கரம், சங்கு எல்லாம் எப்பொழுதும் எம்பிரானுடன் இருப்பவர்கள்!
ஆனால் எம்பிரான் எப்பொழுதும் அடியவர்களிடத்தில் தான் அடியானுக்கு அடியனாய் இருப்பான்!
இறைவனிடம் இருப்பவர்களைவிட, இறைவன் இருக்குமிடமே முன்னிலையானது. சரிதானே?!
தமிழ்
சங்கு, ஆழி இருவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்தது மிகச் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.
//சங்கு, ஆழி இருவரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்தது மிகச் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.//
வாங்க திரு.குமரன், வருகைக்கு மிகுந்த நன்றி!! தொடர்ந்து வருகைத் தர வேண்டுகிறோம்!!
தமிழ்
Post a Comment