Tuesday, August 25, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 1 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
முதல் திருமொழி - வண்ணமாடங்கள்

பாடல் 10

இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்*
மன்னுநாரணன் நம்பி பிறந்தமை*
மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லைபாவமே.

பொருள்:

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் - செந்நெல் நிறைந்த செழிப்பான வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரில் (ஆர் - ஆர்ந்த - நிறைந்த)

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை - எங்கும் நீக்கமற நிலைபெற்று நிற்கும் திருமால், ஆயர்குலத் தலைவனாய் பிறந்ததை (மன்னு - நிலைபெறு; நாரணன் - திருமால்; நம்பி - இறைவன், தலைவன்; பிறந்தமை - பிறந்ததை)

மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த - மார்பில் மின்னுகின்ற பூணூலை அணிந்துள்ள விட்டுசித்தன் விரிவாய் விவரித்த (மின்னு - பொலியும், மின்னுகின்ற; நூல் - முப்புரிநூல், பூணூல்)

இப்பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே - திருக்கோட்டியூரில், திருமாலே கண்ணனாக அவதரித்ததை ஆராய்ந்து சொல்லிய இந்த பாடல்களை மனம் விரும்பி மீண்டும் மீண்டும் பாடும் உள்ளத்தவர்க்கு, எந்த விதமான பாவங்களும் அவர்களைத் தீண்டாது.

பதவுரை:

செந்நெல் விளைந்த செழிப்பான வயல்களால் சூழப்பட்டுள்ள, திருக்கோட்டியூரில், எவ்விடத்தும், எக்காலத்தும் நீக்கமற நிலைத்து நிற்கும் திருமாலே, ஆயர்குலத் தலைவனாய் திருவவதாரம் எடுத்ததை, மார்பில் மின்னுகின்ற முப்புரிநூலினை அணிந்த விட்டுசித்தனாகிய, பெரியாழ்வார் ஆராய்ந்து சொல்லிய பாடல்களை, விரும்பத்துடன், மனமாற மீண்டும் மீண்டும் பாடும் உள்ளத்தவருக்கு எந்தவிதமான பாவங்களும் அவர்களைச் சேராது.

22 comments:

Raghav said...

பாசுரத்தை இருமுறை சேவித்தாயிற்று !

தமிழ் said...

@Raghav...

பாசுரத்தை இருமுறை சேவித்தாயிற்று!//

பாசுரத்தை இருமுறை சேவித்தமைக்கு மிக்க நன்றி! ;-))

Raghav said...

//மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த - மார்பில் மின்னுகின்ற பூணூலை அணிந்துள்ள விட்டுசித்தன் விரிவாய் விவரித்த //

இரண்டு நாள் முன்பு, எனது அண்ணாவுடன் ஒரு சிறு வாக்குவாதம்.. ஆழ்வார்கள் பூணூல், திருமண் காப்பு முதலானவைகளை அணிந்திருப்பரா அல்லது அவர்கள் அவை அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களா என்று எனக்கு ஒரு கேள்வி..எனது அண்ணாவோ கொஞ்சம் கோபக்காரர் :) உடனே இவையெல்லாம் நம்பிக்கைகள் கேள்வி கேக்கக்கூடாது என்று விட்டார்.. இன்று இப்பாசுர வரிகள் பதிலாக அமைந்து விட்டன. பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர்கள் அல்லவா? மற்றைய ஆழ்வார்கள் பஞ்ச சம்ஸ்காரம் பற்றி சொல்லியுள்ளனரா ?

Anonymous said...

Nammalwar paadalgalai mudikkum podu kurgoor thirusadakopan enru tam peyarodu tam oorin peyarum serthukondaar
Aanal peiyalwar tan peyarai mattume kuripidukiraare!!
poduvaga alwargal mudivil peyaraiyum ooraiyum terivikka kaaranam ennavo!

***
(tirupaalaandu 3rd il ramanujar patriya sandekattirku vilakkam alikkadadu eno sir!!!)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆழ்வார்கள் பூணூல், திருமண் காப்பு முதலானவைகளை அணிந்திருப்பரா அல்லது அவர்கள் அவை அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களா என்று எனக்கு ஒரு கேள்வி..எனது அண்ணாவோ கொஞ்சம் கோபக்காரர் :) உடனே இவையெல்லாம் நம்பிக்கைகள் கேள்வி கேக்கக்கூடாது என்று விட்டார்..//

ஹா ஹா ஹா
உங்க அண்ணா கோபக்காரரா? நான் எங்கேப்பா ஒன் மேல கோபப்பட்டேன்? :)

//மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு//

இங்கே இதற்கு இரண்டு பொருள் உண்டு!
மின்னு நூல் = ஒளிர்ந்திடும் நூல் (புத்தகம்) என்றும் பொருள்!
அதாச்சும் மின்னு நூலான பெரியாழ்வார் திருமொழியில், விரித்த இப்பன்னு பாடல்-ன்னும் கொள்ளலாம்!

மின்னு நூல் = முப்புரி நூல் என்றும் கொள்ளலாம்!
பன்னிரு ஆழ்வார்களில் மூவர் அந்தண குலத் தோன்றல்கள் = பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி, மதுரகவிகள்!

தமிழ் said...

@Raghav...


இரண்டு நாள் முன்பு, எனது அண்ணாவுடன் ஒரு சிறு வாக்குவாதம்.. ஆழ்வார்கள் பூணூல், திருமண் காப்பு முதலானவைகளை அணிந்திருப்பரா அல்லது அவர்கள் அவை அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களா என்று எனக்கு ஒரு கேள்வி..எனது அண்ணாவோ கொஞ்சம் கோபக்காரர் :) உடனே இவையெல்லாம் நம்பிக்கைகள் கேள்வி கேக்கக்கூடாது என்று விட்டார்.. இன்று இப்பாசுர வரிகள் பதிலாக அமைந்து விட்டன. பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர்கள் அல்லவா? மற்றைய ஆழ்வார்கள் பஞ்ச சம்ஸ்காரம் பற்றி சொல்லியுள்ளனரா ?//

பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுதான் இறைவனைத் துதிக்க வேண்டும்; நினைக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை....

எந்நாளும், எவ்விடத்தும் இறைவனை உளமாற நினைத்திருக்க வேண்டும்... அதற்கு எவ்வித சம்பிரதாயங்களும் தேவையில்லை...

சாத்திரங்களும், சம்பிரதாயங்களும் மனிதனால், மனிதனை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டவை.... அவை மண்ணுலகில் வாழும் போது மட்டுமே தேவையானவை...

இறைவன், எல்லாவற்றையும் கடந்து நிற்பவன்... அவனை அடையப் போவது ஆன்மா மட்டுமே.. ஆன்மா இறைவனை ஒத்தது...

அதற்கு உருவம் கிடையாது... ஆன்மா இறைநிலையை அடைவதற்கு, நம் மெய்யினை அது கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும்...

பன்னிரு ஆழ்வார்களும் பிராமணர்கள் அல்லர்.

தமிழ் said...

@KRS...

ஹா ஹா ஹா
உங்க அண்ணா கோபக்காரரா? நான் எங்கேப்பா ஒன் மேல கோபப்பட்டேன்? :)//

நீங்கத்தான் அந்த கோபக்கார அண்ணாவா....??!!

தமிழ் said...

@KRS..
//மின்னுநூல் விட்டுசித்தன் விரித்த* இப்
பன்னு பாடல் வல்லார்க்கு//

இங்கே இதற்கு இரண்டு பொருள் உண்டு!
மின்னு நூல் = ஒளிர்ந்திடும் நூல் (புத்தகம்) என்றும் பொருள்!
அதாச்சும் மின்னு நூலான பெரியாழ்வார் திருமொழியில், விரித்த இப்பன்னு பாடல்-ன்னும் கொள்ளலாம்!

மின்னு நூல் = முப்புரி நூல் என்றும் கொள்ளலாம்!
பன்னிரு ஆழ்வார்களில் மூவர் அந்தண குலத் தோன்றல்கள் = பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி, மதுரகவிகள்!//

விளக்கங்களுக்கு மிக்க நன்றி, கேயாரெஸ்! ;-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தமிழ் said...
நீங்கத்தான் அந்த கோபக்கார அண்ணாவா....??!!//

அவரு சொன்ன அடுத்த வரியும் படிங்க! அப்போ தெரிஞ்சிடும்!

//எனது அண்ணாவோ கொஞ்சம் கோபக்காரர் :) உடனே இவையெல்லாம் நம்பிக்கைகள் "கேள்வி கேக்கக்கூடாது" என்று விட்டார்//

Cool Guy - Question Guy - நான் "கேள்வி கேக்கக்கூடாது"-ன்னு என்னிக்காச்சும் சொல்லுவேனா? :))

Raghav said...

//பன்னிரு ஆழ்வார்களும் பிராமணர்கள் அல்லர்.//

இவ்விஷயம் அடியேனுக்கும் தெரியும் தமிழ்.. நான் கேட்க விழைந்தது ஸ்ரீவைஷ்ணவர்களாகிய ஆழ்வார்கள் பஞ்ச சம்ஸ்காரம் பற்றி சொல்லியுள்ளனரா என்றே :)

Raghav said...

//இறைவன், எல்லாவற்றையும் கடந்து நிற்பவன்..//

அதே போன்று ஆழ்வார்களும், அனைத்தையும் கடந்து நின்றவர்கள்.. நித்யகடமைகளாக சொல்லப்பட்டிருந்தவை அவர்களுக்கு அவசியமில்லை என்பது என் கருத்து.. என் அண்ணாவோ (என் பெரியப்பா மகன்) அப்படிஅன்று ஆழ்வார்களும் ஸ்ரீவைஷ்ணவ லக்‌ஷணங்களை கொண்டிருந்தனர் (உ.ம்: திருமங்கை, பெரியாழ்வார்) என்றே சாதிக்கிறார்.. இன்னொன்று நான் பூணூல் மட்டும் சொல்லவில்லை.. திருமண்காப்பினை எடுத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் said...

@Raghav....

இவ்விஷயம் அடியேனுக்கும் தெரியும் தமிழ்.. நான் கேட்க விழைந்தது ஸ்ரீவைஷ்ணவர்களாகிய ஆழ்வார்கள் பஞ்ச சம்ஸ்காரம் பற்றி சொல்லியுள்ளனரா என்றே :)//

அடியேனுக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன்... பிழையிருப்பின் மன்னிக்கவும்...

பெரியாழ்வார் திருப்பல்லாண்டில்,

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்... என்று கூறுகிறார்.

இங்கு மண் என்பது திருமண்காப்பு என்று கேயாரெஸ் அந்த பாசுரவிளக்கத்தில் கூறினார்.

அதே திருப்பல்லாண்டில்,

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல ன்னு சொல்லுவதும் இந்த திருமண் காப்புத்தான்.

பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தில், நாலாம் திருமொழியில்

தாமோதரா! சதிரா! என்னையும் என்னுடைமையையும் உன் சக்கர பொறியொற்றிக் கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே?

என்று பாடுகிறார்.

Raghav said...

//தாமோதரா! சதிரா! என்னையும் என்னுடைமையையும் உன் சக்கர பொறியொற்றிக் கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே?//

நன்றி தமிழ்..

தமிழ் said...

தீயில் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்...

-திருப்பல்லாண்டு

அடியேன், இப்பொழுதுதான் பாசுரங்களைப் படிக்கத் துவங்கியுள்ளேன். அதனால், உங்க கேள்விக்கு என்னால் இன்னும் ஆழமாய்ச் சென்று பதில் சொல்ல அறியவில்லை. மன்னிக்கவும்!!

Raghav said...

தமிழ், என் கேள்விகளைக் கண்டு நீங்க கோவிச்சுக்காம இருக்குறீங்களே அதுவே எனக்கு பரம சந்தோஷம். :)

நான் மாதவிப்பந்தலின் கீழ் வளர்பவன்.. அதான் கொஞ்சம் விவகாரமான கேள்விகளும் வருது :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
நான் மாதவிப்பந்தலின் கீழ் வளர்பவன்..//

அடப்பாவி! இது எப்போத்தில் இருந்து? :)

//அதான் கொஞ்சம் விவகாரமான கேள்விகளும் வருது :)//

அடிங்க! விவகாரமா? அப்படீன்னா என்ன ராகவ்?
விவா காரமாவா இருக்கும்? குடிக்க நல்லா டேஸ்ட்டா இருக்குமே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
//பன்னிரு ஆழ்வார்களும் பிராமணர்கள் அல்லர்.//

இவ்விஷயம் அடியேனுக்கும் தெரியும் தமிழ்.. நான் கேட்க விழைந்தது ஸ்ரீவைஷ்ணவர்களாகிய ஆழ்வார்கள் பஞ்ச சம்ஸ்காரம் பற்றி சொல்லியுள்ளனரா என்றே :)//

இங்கு ஒரு சின்ன விடயம் தெளிவுபடுத்த விழைகிறேன்!

கண்டிப்பாக ஆழ்வார்களில் அந்தணர்களும் உள்ளனர்! அவர்கள் பங்கும் மகத்தானது!

ஆழ்வார்களையோ நாயன்மார்களையோ, சாதி மற்றும் சமயக் குறுக்கலில் அடக்கிட முடியாது என்றாலும்...
அவர்கள் பிறந்த குலங்களால், ஆழ்வார்களில் யாவரும் வரலாம், என்பதற்கு இதோ சில தகவல்கள்!

1. பொய்கை ஆழ்வார் = சாதி இல்லை (கருவில் தோன்றாத அயோனிஜர்கள் என்பதால்)
2. பூதத்து ஆழ்வார் = சாதி இல்லை
3. பேய் ஆழ்வார் = சாதி இல்லை

4. திருமழிசை ஆழ்வார் = பஞ்சமர் (பறையர் என்று சொல்லப்பட்டவர்)

5. நம்மாழ்வார் = நான்காம் வருணம். வேளாளர்!
6. மதுரகவி ஆழ்வார் = அந்தணர்

7. குலசேகராழ்வார் = மன்னர் (க்ஷத்ரியர்)

8. பெரியாழ்வார் = அந்தணர்
9. ஆண்டாள் = பிறப்பறியாது, துளசி மாடத்திற் கிடந்த கோதை

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார் = அந்தணர்
11. திருப்பாணாழ்வார் = பாணர் (பஞ்சமர்)
12. திருமங்கை ஆழ்வார் = மன்னர் (கள்ளர்)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆழ்வார்கள் பூணூல், திருமண் காப்பு முதலானவைகளை அணிந்திருப்பரா அல்லது அவர்கள் அவை அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களா என்று எனக்கு ஒரு கேள்வி..எனது அண்ணாவோ கொஞ்சம் கோபக்காரர் :) உடனே இவையெல்லாம் நம்பிக்கைகள் கேள்வி கேக்கக்கூடாது என்று விட்டார்...//

ஆழ்வார்கள் அனைவரும் பூநூல் அணிந்து இருக்கவில்லை!
அந்தந்த இல்லங்களில் பிறந்த மூன்று ஆழ்வார்கள் மட்டும் அணிந்து இருந்தனர்!

இதில் அணிந்த மதுரகவி, அணியாத நம்மாழ்வாரிடம் கைகட்டி நின்று பாடம் கேட்டார்! பின்னாளில் அவர் பாசுரங்களைத் தானே முன்னின்று பரப்பினார்!

தாம் பூநூல் அணியவில்லை என்பதை திருமழிசை, பாட்டிலேயே சொல்லி விடுகிறார்!
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்;
நலங்களாய நற்கலைகள் நாளிலும் நவின்றிலேன்!

//பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர்கள் அல்லவா? மற்றைய ஆழ்வார்கள் பஞ்ச சம்ஸ்காரம் பற்றி சொல்லியுள்ளனரா//

தமிழ் சில பெரியாழ்வார் பாசுரங்களைக் கொடுத்து விட்டார் பாருங்கள்!
//என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு//
//திகழ் தரு சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு//

திருமங்கை மன்னன், மனைவி குமுதவல்லியின் அறிவுரையின் பேரில், இந்தப் பஞ்ச சம்ஸ்காரத்தை, நாச்சியார் கோயில் இறைவனான, திருநறையூர் நம்பியிடமே செய்து கொண்டார்!

பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்படும் போது பூநூல் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் வழக்கம் இல்லை!
அதே போல், அனைவரும், பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ளத் தான் வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!

யாரெல்லாம் பகவத் ஆராதனம் செய்ய நியமிக்கப்படுகிறார்களோ, அவர்கள் செய்து கொள்வது நலம்! அவ்வளவே!
ஆனால் இன்றும் சில ஆலய அர்ச்சகர்கள், செய்து கொள்ளாமல் தான் இருக்கின்றனர்! அதைத் தவறாகவும் கொள்ளக் கூடாது!

திருமண், சங்கு சக்கர முத்திரை என்பதெல்லாம் ஒரு Dress Code போலத் தான்!
பஞ்ச சம்ஸ்காரத்தில் சொல்லப்படும் ஐந்து செயல்களில், இவையெல்லாம் ஆரம்பச் செயல்கள் மட்டுமே! கைங்கர்யம் + பகவத் ஆராதனம் என்பதே முக்கியம்! அதற்குத் தான் மற்ற நான்கும்!

இந்த Dress Code என்பது, சில பணிகளில் இருப்பவர்களின் வசதிக்காக! அதையே எல்லாருக்கும் பொதுமைப் படுத்தி விடக் கூடாது!

அதை விட முக்கியமாக, அப்படிச் செய்யா விட்டால், "ஓ நீயா?" என்பது போல் பார்க்கும் பாவத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது! இதனால் எம்பெருமான் மனம் வாடும்!

கூரேசர் தன் கண் போன போது, இதையே தான் சொன்னார்! "ஸ்ரீ வைஷ்ணவச் சின்னங்களை ஒழுங்காக அணியாமல், எவரோ ஒரு அடியார், கோணலாக அணிந்து இருப்பார்! அதைக் கேலியாகப் பார்த்தேனோ என்னவோ, கண் போனது" என்று சொன்ன பெருந்தகை அவர்! அதை எண்ணிப் பார்க்க வேண்டும்!

எதை ஒன்றுமே நிறுவி வைத்து, கட்டாயமாக்கித் திணிக்கும் போது, நாளடைவில் சமூகத்தில் அதன் உண்மையான மகத்துவத்தை இழக்கிறது! அதனால் திணிப்பு மனோபாவம் (அ) அந்த aggressivnessஐ விட வேண்டும்! விட்டால் நோக்கம் நிலைக்கும்!

* வெளிபுறச் சின்னமா? நோக்கமா? என்றால் நோக்கம் தான் முதலில்!
* சாஸ்திரமா? பகவானா? என்றால் பகவான் தான் முதலில்!

சாஸ்திரம் பகவான் மேல் கால் படக் கூடாது என்று சொல்லும்!
ஆனால் கண்ணன் தலைவலி, கால் தூசால் தான் தீரும் என்றால், அப்போது தாராளமாக மீறலாம்! நரகமே கிட்டினாலும் மீறலாம்! அவன் தலைவலி குணமானால் போதும்! அது தான் திரு உள்ள உகப்பு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதே போன்று ஆழ்வார்களும், அனைத்தையும் கடந்து நின்றவர்கள்.. நித்யகடமைகளாக சொல்லப்பட்டிருந்தவை அவர்களுக்கு அவசியமில்லை என்பது என் கருத்து..//

அப்படியும் இல்லை ராகவ்!
ஆழ்வார்கள் அனைத்தையும் கடந்து நின்றவர்கள் என்று அவர்களை ஒதுக்கி வைத்து விடவும் முடியாது!

அவர்கள் நமக்கு வழி காட்ட வந்தவர்கள்! அதனால் நம் வழியில் வந்து தான் நமக்கும் சொல்லிக் கொடுப்பார்கள்!
வீடு வீடாகச் சென்று ஆண்டாள் எழுப்புகிறாள் அல்லவா? தான் அனைத்தும் கடந்தவள் என்று அவள் நோன்பு நோற்பாமல் இருப்பாளா?

இங்கே கவனிக்க வேண்டியது,
* அவளும் நோற்று, மற்றவர்க்கு Walk the Talk செய்வாள்!
* அதே சமயம் நோற்காதவர்களை வெறுத்தும் ஒதுக்க மாட்டாள்! அது தான் முக்கியம்!

நோற்பவர்களிடமும் குறை இருந்தாலும், தூங்கிக் கொண்டே இருந்தாலும், விடாது செல்லமா எழுப்பி, அனைவரையும் அரவணைத்து கூட்டிச் செல்வாள்! "எல்லாரும்" போந்தாரோ? போந்தார்! போந்து எண்ணிக் கொள்! :)

//என் அண்ணாவோ (என் பெரியப்பா மகன்) அப்படிஅன்று ஆழ்வார்களும் ஸ்ரீவைஷ்ணவ லக்‌ஷணங்களை கொண்டிருந்தனர் (உ.ம்: திருமங்கை, பெரியாழ்வார்) என்றே சாதிக்கிறார்..//

இதை நான் சொன்னா, என் மேல், ஒரு சிலருக்கு இன்னும் வெறுப்பு தான் வளரும்! பரவாயில்லை! ஊதுகிற சங்கை ஊதி வைக்கிறேன்! :)

ஆழ்வார்களும் ஸ்ரீவைஷ்ணவ லக்‌ஷணங்களை கொண்டிருந்தனர் என்று சாதித்து என்ன வரப் போகிறது? அதுவா முக்கியம்?

ஒரு பேச்சுக்குச் சொல்றேன், Suppose ஒரு ஆழ்வார் ஸ்ரீவைஷ்ணவ லக்‌ஷணங்களைத் தரிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அவரை என்ன செய்து விடுவீர்கள்?

நம்மாழ்வார் ஆறு மாசம் பாட்டு, ஆறு மாசம் எம்பெருமானில் மயங்கிய நிலையில் அசையாது கல்லு போல இருப்பாராம்!
அப்போ எப்படி ஸ்ரீவைஷ்ணவ லக்‌ஷணங்களைத் தரித்திருக்க முடியும்? கொறைஞ்ச பட்சம் ஊர்த்துவ புண்ட்ரம் என்னும் நாமம் போட்டிருக்க கூட முடியாது!

உடனே ஆழ்வார் அனைத்தையும் கடந்தவர் என்று Exception முத்திரை குத்தி விடக் கூடாது! :)
ஆழ்வார்கள் நம்மைப் போலத் தான்! நமக்கு வழி காட்ட எம்பெருமானால் அனுப்பப் பட்டவர்கள்!

தான் வந்து ஒன்றும் நடக்கவில்லை! கீதை சொல்லி, அதை நேரே கேட்டவனே சரணாகதி பண்ணவில்லை! :)
சரி, மானைக் கொண்டு மானைப் பிடித்தாற் போலே, நம்மளைப் போல ஆளுங்களைப் பிடிக்க, நம்மளைப் போலவே தான் அனுப்பணும் என்று ஆழ்வார்களை அனுப்பி வைத்தான்!

எனவே ஆழ்வார்கள் அனைத்தையும் கடந்து நின்றவர்கள் என்று அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது!
They are also like us! தொண்டரடிப்பொடி மயங்காத காதல் வலையா? திருமங்கை பண்ணாத கலாட்டாவா? :)

They are also like us!
But they showed how to rise!
and thatz the key...

தமிழ் said...

//அதான் கொஞ்சம் விவகாரமான கேள்விகளும் வருது :)//


இராகவ், உங்க விவகாரமான கேள்விகளுக்கு வெவரமாமவே அண்ணாச்சி பதில் சொல்லிப்புட்டாரு...

ரொம்ப நன்றிங்க கேயாரெஸ்! ;-))

குமரன் (Kumaran) said...

முப்புரி நூலை முதல் மூவருணத்தாரும் அணியலாம் என்பதால் ஆழ்வார்களில் அந்தணர் மட்டுமின்றி முதல் மூவருணத்தைச் சேர்ந்தவர்களும் அணிந்திருக்கலாம்.

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

முப்புரி நூலை முதல் மூவருணத்தாரும் அணியலாம் என்பதால் ஆழ்வார்களில் அந்தணர் மட்டுமின்றி முதல் மூவருணத்தைச் சேர்ந்தவர்களும் அணிந்திருக்கலாம்.//

ரொம்ப நன்றிங்க குமரன். ஆனா, என்ன சொல்ல வர்றீங்க, இந்த ச்சின்ன குழந்தைக்கு விளக்குங்களேன்... ;-))