பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி*
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்*
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே.
**குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்.
பொருள்: கண்ணனின், திருமேனி அழகைப் பாதம் முதல் கேசம் வரை (அடி முதல் முடி வரை)ஒவ்வொன்றின் அழகினையும் பற்றி, முதல் திருமொழியின் இரண்டாம் பத்தில் இந்த இருபத்திஒரு பாடல்களிலும் கூறியுள்ளார் பெரியாழ்வார்.
சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி - திருப்பாற்கடலில் தோன்றிய தேவர்களுக்கு உணவான சாவாமருந்து என்று சொல்லப்படும் அமிழ்தத்தை ஒத்த தேவகி அன்னை ~ தேவகிப் பிராட்டியானவர், திருப்பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தினைப் போன்றவர். (சீதக்கடல் - திருப்பாற்கடல்; அன்ன - உவமஉருபு)
கோதைக்குழலாள் அசோதைக்குப் போத்தந்த - நறுமணமிகுந்த, செறிவாகத் தொடுக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடையவளான யசோதை அன்னைக்குப் போத்தந்த ~ அதாவது, தேவகி அன்னை தன் திருவயிற்றில் உதித்த கண்ணபிரானை, கம்சனிடமிருந்து குழந்தையைக் காப்பதற்காக யசோதை அன்னையிடம் அனுப்பிவைத்தார். (கோதை - மலர்மாலை~ கோதை என்னும் சொல் பல பொருள்தரும் ஒரு சொல் - இவ்விடத்து அது மலர் மாலை எனும் பொருளைக் கொண்டு வருகிறது; குழல் - கூந்தல்; போத்தந்த - புறப்படவிடுதல், அனுப்பிவைத்தல், போதல்)
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் - பேதையான இந்தக்குழந்தை, தானேப் பிடித்துச் சுவைத்து உண்ணுகின்ற (பேதை - ஏதும் அறியாப் பச்சிளங்குழந்தை; குழவி - குழந்தை)
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்து காணீரே - குழந்தைக்கண்ணன் தன் காலின் விரல்களை எடுத்து வாயில் வைத்து விரும்பிச் சுவைக்கின்ற அந்த அழகிய பாதமலர்களை, வந்து பாருங்கள்! தாமரை இதழ் போன்று மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கின்ற அழகினைப் பாருங்கள், பவளம் போன்று சிவந்த வாயினையுடையவர்களே வந்து பாருங்கள்.(பாதக்கமலங்கள் - தாமரை மலர்போன்ற பாதங்கள்; பவளவாயீர் - பவளம் போன்ற வாயினை உடையவர்கள்)
பதவுரை: திருப்பாற்கடலில் தோன்றிய திருவமுதினை ஒத்த தேவகிப் பிராட்டியாரிடமிருந்து, நறுமணமலர்களை செறிவாய்த் தொடுத்த, மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய, யசோதையான என்னிடம் அனுப்பிவைக்கப்பட்ட பேதைப்பிள்ளையான கண்ணன், தன் பாதத்தை வாயினுள் வைத்து சுவைத்து மகிழும், செந்தாமரை மலரினைப் போன்ற அந்த மென்மையான, இளஞ்சிவப்பு வண்ணப் பாதங்களை, பவளம் போன்று சிவந்த வாயினையுடையவர்களே வந்து பாருங்கள்.
11 comments:
அழகான விளக்கங்கள் தமிழ்!
வெண்டளை, கலித்தாழிசை-ன்னு என்னென்னமோ சொல்லி வேற பயமுறுத்தறீங்க! :)
//சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி - திருப்பாற்கடலில் தோன்றிய தேவர்களுக்கு உணவான சாவாமருந்து என்று சொல்லப்படும் அமிழ்தத்தை ஒத்த தேவகி அன்னை//
இதற்கு இன்னொரு விளக்கமும் உண்டு!
திருப்பாற்கடலில் தோன்றிய அமுதம், தேவாசுரச் சண்டையில் தோன்றியது!
ஆனால் திருப்பாற்கடலில் இன்னொரு அமுதமும் தோன்றியது!
= அன்னை மகாலக்ஷ்மி! அலைமகள்!அது ஆனந்த மயமான அமுதம்! ஆரா அமுது!
சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி = அவளைப் போலக் குணவதியான தேவகி என்பது பொருள்!
//சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி*
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த*//
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளிந்து...
ன்னு இவரு பொண்ணு பாடுற பாசுரம் போலவே இல்ல? :)
//பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்*
பாதக்கமலங்கள்//
குழந்தைகள் பாதங்களை எதற்கு பிடித்துச் சுவைக்குதுங்க? கைவிரல் சூப்புவது சரி! கால் விரலை எட்டிச் சூப்பும் அளவுக்கு? யாராச்சும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
//பவளவாயீர்! வந்துகாணீரே//
இங்கே தான் ஆழ்வார் உள்ளத்தைக் கொஞ்சம் நோக்கணும்!
வந்து காணீரே-ன்னு தானே சொல்றாரு? பனிமலர்க் கண்ணீர் வந்து காணீரே-ன்னு சொல்லலாம்-ல? எதுக்குப் பவள வாய்-ன்னு வாயைச் சொல்றாரு?
ஏன்-ன்னா ஏற்கனவே குழந்தை விரலைப் பிடித்துச் சுவைத்து உண்ணுது! அதன் திருவடிகளை அதுவே உண்ணுது!
அதே போல், பவள "வாயீரே" - வாயால் நீங்களும் வந்து உண்ணுங்கள் என்று ஊக்கம் காட்டி அழைக்கிறார் ஆழ்வார்!
* இப்படி எம்பெருமானுக்கும் உணவாக இருப்பது அவன் திருவடிகள்
* அடியார்களுக்கும் உணவாக இருப்பது அவன் திருவடிகள்!
* அதான் "செவ்வடி" செவ்வித் திருக்காப்பு - என்று அடிகள் ஆண்டவனையே காக்கட்டும் என்று பல்லாண்டு துவங்குகிறது!
திருவடிகளின் பெருமை சொல்லவும் பெரிதே!
ஐயன் வள்ளுவனும் கடவுள் வாழ்த்து முழுக்க, பத்தில் எட்டு குறள், கடவுளைப் பற்றி அல்ல! திருவடிகளைப் பற்றியே!
தமிழ் ! அருமையான விளக்கம் !!
இந்த கண்ணபிரானை எப்படி தான் சமாளிக்கரீங்களோ !! :-)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அழகான விளக்கங்கள் தமிழ்!
வெண்டளை, கலித்தாழிசை-ன்னு என்னென்னமோ சொல்லி வேற பயமுறுத்தறீங்க! :)//
இதல்லாம், அந்தந்தப் பாடல்கள் ல்ல பயின்று வருகின்ற யாப்பிலக்கணம்.
அந்த இலக்கணங்களுக்கு, விளக்கம் தரவேண்டும் என்று திருப்பல்லாண்டு எழுதத் துவங்கிய போதே நினைத்தேன்.
அதை நான் எழுதுவதை விட, இலக்கணப்புலி முகவை மைந்தன் எழுதினா நல்லா இருக்கும் ன்னு நெனச்சேன். அவர் இப்போ கொஞ்சம் பணிப்பளுவுல இருக்கறதால, விரைவில், இலக்கணங்கள் விளக்கங்களுடன்.
தமிழ் பயில்வதுதான் இந்த வலைப்பூவின் முழுமுதற் நோக்கம்!!
இந்த மாத கடைசிக்குள் விளக்கங்கள் தரப்படும்!!
@KRS...
இதற்கு இன்னொரு விளக்கமும் உண்டு!
திருப்பாற்கடலில் தோன்றிய அமுதம், தேவாசுரச் சண்டையில் தோன்றியது!
ஆனால் திருப்பாற்கடலில் இன்னொரு அமுதமும் தோன்றியது!
= அன்னை மகாலக்ஷ்மி! அலைமகள்!அது ஆனந்த மயமான அமுதம்! ஆரா அமுது!//
புதிய செய்தி இரவி!! பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!! ;-))
அமுதமும், விடமும் அறிந்ததுண்டு, அலைமகள் இன்றுதான் அறிகிறேன்...
ஓ... அலைகடல்ல தோன்றிதனாலத்தான் அலைமகளோ..??!! ;-))
@KRS...
//சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி*
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த*//
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளிந்து...
ன்னு இவரு பொண்ணு பாடுற பாசுரம் போலவே இல்ல? :)//
அது எப்படிங்க இரவி, எதப்பத்தி பேசினாலும், தோழிக்கிட்டயிருந்தே தொடுப்பு எடுக்கிறீங்க... ;-))
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்*
பாதக்கமலங்கள்//
குழந்தைகள் பாதங்களை எதற்கு பிடித்துச் சுவைக்குதுங்க? கைவிரல் சூப்புவது சரி! கால் விரலை எட்டிச் சூப்பும் அளவுக்கு? யாராச்சும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! //
அதானே, யாராவது தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்... இரவிக்குத் தெரிஞ்சவங்க யாருப்பா இருக்கீங்க...
இங்கே தான் ஆழ்வார் உள்ளத்தைக் கொஞ்சம் நோக்கணும்!
வந்து காணீரே-ன்னு தானே சொல்றாரு? பனிமலர்க் கண்ணீர் வந்து காணீரே-ன்னு சொல்லலாம்-ல? எதுக்குப் பவள வாய்-ன்னு வாயைச் சொல்றாரு?
ஏன்-ன்னா ஏற்கனவே குழந்தை விரலைப் பிடித்துச் சுவைத்து உண்ணுது! அதன் திருவடிகளை அதுவே உண்ணுது!
அதே போல், பவள "வாயீரே" - வாயால் நீங்களும் வந்து உண்ணுங்கள் என்று ஊக்கம் காட்டி அழைக்கிறார் ஆழ்வார்!//
ஸ்ஸ்ஸ்.. அப்பா முடியல... இப்பவே கண்ணக் கட்டுது... ;-))
Radha said...
தமிழ் ! அருமையான விளக்கம் !!
இந்த கண்ணபிரானை எப்படி தான் சமாளிக்கரீங்களோ !! :-)//
ரொம்ப நன்றிங்க இராதா!!
என்னங்ங்ங்க பண்ண... நடக்கறது நடக்கட்டும்ம்ம்... ;-))
//Radha said...
இந்த கண்ணபிரானை எப்படி தான் சமாளிக்கரீங்களோ !! :-)//
ஹா ஹா ஹா
ராதா - இருக்குங்க ஒங்களுக்கு ஆப்பு! :)
எல்லாம் கண்ணபிரானை எப்படி யசோதை சமாளிச்சாளோ, அப்படித் தான்! :)
//சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி //
"உள்"+அமுது = "வெளி" வந்த அமுது அல்ல! "உள்" இருக்கும் அமுது! அதான் அலைமகள்! அவளைப் போன்ற தேவகி!
//சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி //
"உள்"+அமுது = "வெளி" வந்த அமுது அல்ல! "உள்" இருக்கும் அமுது! அதான் அலைமகள்! அவளைப் போன்ற தேவகி!//
உள் அமுதுன்னா, பாற்கடல் உள்ளயே இருக்கிற அமுதா?? அவங்கத்தான் வெளில வந்து திருமால் இதயம் புகுந்துட்டாங்களே... ;-)))
Post a Comment