Monday, November 9, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 2
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்*
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்*
அஞ்சனவண்ணனோட ஆடலாட உறுதியேல்*
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.


பொருள்:

என்சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான் - எவ்வளோ அழகா, யசோதை அம்மா பாடுறாங்க பாருங்க. குட்டன் னாவே சிறு குழந்தை, அதிலும் சிறு குட்டனாம். ரொம்பவே செல்லமா பாடுறாங்க...

என்னோட இந்த சிறு குழந்தை, எனக்கு எப்படிப்பட்டவன் என்றால், அவன் எனக்குக் கிடைக்கப்பெற்ற ஓர் இனிமையான அமிழ்தத்தினைப் போன்றவன்; என் தெய்வமே அவன்தான்.
(குட்டன் - சிறு குழந்தை)

தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் - எனக்குத் தெய்வமாய், அமிழ்தமாய் இருக்கும் இந்த சிறு பாலகன், தன்னுடைய அழகான சிறிய கைகளால் நிலவினைக் காட்டிக் காட்டித் தன்னுடன் விளையாட அழைக்கின்றான்.

குழந்தைங்க எதையாவது, பிடிவாதமா வேணும்னு கேட்கின்ற அந்த அழகே தனிதான். தன் கால்களை உதைத்துக் கொண்டு, கைகளை உதறிக் கொண்டு, அப்படியே அவர்கள் முகம் செல்லும் போக்கு இருக்கின்றதே எப்பப்பா... ஆனால் கண் மட்டும் அந்த பொருளை விட்டு அசையாது... அப்படியே நம்மளை பார்த்தாலும், அப்ப அவங்க பார்க்கின்ற பார்வைக்கு நம்மால மயங்காம இருக்கவே முடியாது... இவ்வளவையும் ஒரு வரியில சொல்லிருக்காரு பாருங்க ஆழ்வார். அஞ்சனவண்ணனோட ஆடலாட உறுதியேல் - கருமைவண்ணம் கொண்ட என் மைந்தனோட விளையாடி மகிழ்வதற்கு உனக்கும் விருப்பம் உண்டென்றால்

(அஞ்சனம் - கருமை; கண்ணுக்கிடும் மை; இருள்)

மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா -
வெக்கங்கொண்டு மேகத்தினிடையே சென்று ஒளிந்து கொள்ளாதே, இளநிலவே! சொக்க வைக்கும் கொஞ்சலுடன் உன்னை அழைக்கும் என் மகனுடன், மகிழ்ச்சியுடன் ஓடி வந்து விளையாடு.
(மஞ்சு - வெண்மேகம்; மாமதீ - முழு நிலவு)

பதவுரை:

யசோதை அன்னை நிலவினைப்பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல் இது:

என்னுடைய இந்த சிறிய பாலகன், எனக்குக் கிடைக்கப்பெற்ற ஓர் இனிய தெவிட்டாத தெள்ளமிழ்தம் போன்றவன்; என்னுடைய தெய்வம் அவன்; அப்படிப்பட்ட என்னுடைய புதல்வன், தன்னுடைய சிறிய கைகளால் உன்னையேக் காட்டிக் காட்டி மிகுந்த ஆவலுடன் உன்னை விளையாட அழைக்கின்றான். பௌர்ணமி நிலவே! கருமை வண்ணங்கொண்ட என் சுந்தரனோட விளையாடுவதற்கு உனக்கும் விருப்பமுண்டாகில், மேகங்களில் சென்று ஒளிந்து கொள்ளாதே; விரைந்து ஓடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக.

2 comments:

Radha said...

//மஞ்சு - வெண்மேகம்;//
கருமேகத்திற்கு இது போல சொல் ஏதேனும் உண்டா?

//தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்* //
அருமை. பிள்ளைத் தமிழ் படிக்கவே இனிமையாக இருக்கிறது.

தமிழ் said...

Radha said...

//மஞ்சு - வெண்மேகம்;//
கருமேகத்திற்கு இது போல சொல் ஏதேனும் உண்டா?

தெரியவில்லை இராதா ஐயா. கார் முகில் ன்னு சொல்லலாம். கார் என்றால் கருமை. முகில் - மேகம்

//தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்* //
அருமை. பிள்ளைத் தமிழ் படிக்கவே இனிமையாக இருக்கிறது.

இந்த புகழ்ச்சி எல்லாம் பெரியாழ்வார்க்கே!