பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல்5
அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா*
மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்*
குழகன் சிரீதரன் கூவக்கூவ நீபோதியேல்*
புழையிலவாகாதே நின்செவிபுகர் மாமதீ!
பொருள்:
அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா - குட்டிக் கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற உமிழ்நீர் அமுதத்துடன் கலந்து தெளிவில்லாமல் வருகின்ற
மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் - குழந்தைத்தனம் மாறாத மழலைச் சொற்களால் நிலவே! உன்னைக் கூவிக் கூவி அழைக்கின்றான்
குழகன் சிரீதரன் கூவக்கூவ நீபோதியேல் - அழகன், குழந்தையாய் வந்திருக்கின்ற திருமகளைத் தன் உள்ளத்திலேயே என்றும் இருத்தியிருக்கின்ற திருமாலவன் கூவிக் கூவி அழைத்தும் நீ அகன்று செல்கின்றாயே (குழகன் - குழந்தை, அழகன், இளையவன்; குழகு - அழகு, குழந்தை, இளமை ஆகிய மூன்றனையும் குறிக்கும் ஒரு சொல்லாகும்)
புழையிலவாகாதே - உனது செவிகள் அடைக்கப்பெற்றுள்ளனவா?? இப்பாலகன் உன்னைக் கூவி அழைப்பது, நின் செவிகளில் விழவில்லையா? அவை கேட்கும் தன்மையை இழந்துவிட்டனவா?? முழு உருவத்துடன், மிகுந்த பொலிவுடன் பூரண சந்திரனாய் விளங்கினாலும், நீ கேளா செவிகளைக் கொண்டிருப்பதால், நீ முழுமையானவன் அல்லன், பௌர்ணமி நிலவே! (புழை - சிறுவழி, துளை)
நின் செவி புகர் மாமதீ - உனது செவிகள் கேட்கும் தன்மை கொண்டவையாயிருந்தாலும், நீ இம்மழலையினது குரலைக் கேட்காமல் இருப்பதற்காக, உனது செவிகள் கேட்கும் தன்மையை இழந்து போகட்டும் முழுநிலவே! (புகர் - குறை, குற்றம்)
பதவுரை:
குழந்தை கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற எச்சில் அமுதத்துடன் கலந்து, தெளிவுறாத, குழந்தைத்தனம் மாறாமல் வருகின்ற மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கின்றான். அழகன், குழந்தையாயிருக்கின்ற திருமகள் கேள்வன் கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும் நீ விலகி விலகிப் போகின்றாயே வட்டநிலவே. முழுநிலவே! உனது செவிகள் அடைக்கப்பெற்றுவிட்டனவோ?? இந்த பௌர்ணமி நாளில் நீ பூரணமாய் ஒளிவீசி, முழுமைப் பெற்றுத் தோன்றினாலும், கேளா செவிகளைக் கொண்டிருப்பதால் நீ குறையுடையவனே. அப்படியே, நினது செவிகள் கேட்கும் தன்மைக் கொண்டவையாயிருந்தாலும், இப்பாலகனின் மழலைக் குரலுக்கு செவிமடுக்காமையால், இனி, அவை செயலிழந்து போகட்டும், சந்திரனே!
6 comments:
//மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்* //
மிக அழகாகப் பாடியுள்ளார்.
//(புழை - சிறுவழி, துளை)
(புகர் - குறை, குற்றம்) //
புதிய சொற்கள் அறிந்து கொண்டேன். நன்றி.
//புழையிலவாகாதே நின்செவிபுகர் மாமதீ!//
"உனக்கு காது உண்டென்றால் அது குறையுள்ளது போலும் !" என்று பொருள் படும்படி உபன்யாசங்களில் கேட்டுள்ளேன்.
போதுதல் என்றால் என்ன பொருள் என்ற குழப்பம் இன்னும் எனக்கு இருக்கிறது. திருப்பாவையில் இச்சொல்லின் பல வடிவங்கள் பயின்று வருகின்றன; அங்கெல்லாம் 'வருதல்' என்ற பொருள் தருவது போல் தோன்றுகிறது. 'புக்குப் போதுவார்' என்று பெரியாழ்வாரும் முன்பொரு பாசுரத்தில் சொன்னார். இங்கே போதியேல் என்கிறார். எனக்கென்னவோ கடைசி இரு அடிகளின் பொருள் 'குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ வந்தாயென்றால் புகர் மா மதீ உன் செவியில் புழையில்லை என்ற பழிச்சொல் இல்லாமல் போகும்' என்று பெரியாழ்வார் சொல்வது போல் தோன்றுகிறது.
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில ஆகாதே நின் செவி புகர் மா மதீ!
Radha said...
//மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்* //
மிக அழகாகப் பாடியுள்ளார்.
//(புழை - சிறுவழி, துளை)
(புகர் - குறை, குற்றம்) //
புதிய சொற்கள் அறிந்து கொண்டேன். நன்றி.
//புழையிலவாகாதே நின்செவிபுகர் மாமதீ!//
"உனக்கு காது உண்டென்றால் அது குறையுள்ளது போலும் !" என்று பொருள் படும்படி உபன்யாசங்களில் கேட்டுள்ளேன்.//
வாருங்கள் இராதா ஐயா,
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இன்னும் பல புதிய சொற்களை அறிந்து கொள்வோம்! வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்! :-)
நீங்கள் சொன்னதும் சரியே! நானும் அந்த பொருள் படுமாறு கொடுத்துள்ளவாறே எண்ணுகிறேன். பிழையிருப்பின் சுட்டிக் காட்டவும். :-)
குமரன் (Kumaran) said...
போதுதல் என்றால் என்ன பொருள் என்ற குழப்பம் இன்னும் எனக்கு இருக்கிறது. //
போதல் - செல்லல்
போதுதல் - வருதல்
இங்கே போதியேல் என்பது, போகின்றாயே என்னும் வார்த்தைக்கான வட்டார சொல் என்று எண்ணுகிறேன்.
போதியே (போதியேல்), வருதியே (வருதியேல்) என்று சொல் வழக்கில் கேட்டிருக்கின்றீர்களா?
சரிதானே குமரன் ஐயா.
//நீ இம்மழலையினது குரலைக் கேட்காமல் இருப்பதற்காக, உனது செவிகள் கேட்கும் தன்மையை இழந்து போகட்டும் முழுநிலவே!//
இது ஏதோ சாபம் இடுவது போல உள்ளது. :)
மற்றபடி குறை எல்லாம் ஒன்றும் நான் காணவில்லை. மிக மிக அருமையான பணி செய்து வருகிறீர்கள்.
Radha said...
//நீ இம்மழலையினது குரலைக் கேட்காமல் இருப்பதற்காக, உனது செவிகள் கேட்கும் தன்மையை இழந்து போகட்டும் முழுநிலவே!//
இது ஏதோ சாபம் இடுவது போல உள்ளது. :)//
வாங்க, இராதா ஐயா!
இது மிதமிஞ்சிய பாசத்தினால் வருகின்ற சொற்றொடர்... பலமுறை தாயும் சேயும் அழைத்தும் அம்புலி வாராமையால், யசோதை அன்னை செல்லமான கோபத்துடன் சந்திரனை கடிந்து கொள்கிறார்.
சில சமயங்களில் எழுதப்பட்ட வாக்கியத்தில் உணர்வுகளைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதை நாம் சொல்லும் குரல் ஏற்றத்தாழ்வுதான் நம் உள்ள உணர்வை அவ்விடத்தில் முழுமையாக வெளிப்படுத்துகிறது.
-------------------------
மற்றபடி குறை எல்லாம் ஒன்றும் நான் காணவில்லை. மிக மிக அருமையான பணி செய்து வருகிறீர்கள்.//
மிகுந்த நன்றி, இராதா ஐயா. எல்லாம் இறைவன் செயல். தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment