பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 9
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய*
பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான்*
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண்*
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய*
பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான்*
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண்*
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.
பொருள்:
தன் பிள்ளையை யாரேனும் அவமதித்தால், அப்பிள்ளையை விட அதன் அன்னைக்கு மிகுந்த கோபம் வந்து விடும். யசோதை அன்னையும் இப்பொழுது அந்த நிலையில் தான் இருக்கின்றாள். கைவலிக்க, தொண்டை ஆவி போக யசோதை இளஞ்சிங்கம் அழைத்தும் அம்புலி வாராமையால், அவள் நிலவின் மேல் மிகுந்த கோபங்கொண்டு, ' முழு நிலவே! நீ இப்ப வராவிட்டால், என் மகனே உன்னைக் கொன்றுவிடுவான்' என்று மிரட்டுகிறாள்.
தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய - மோர்ப் பானையில் வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கைகளால் எடுத்து, ஒரே வாயாக விழுங்கி உண்ட
பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான் - பெரிய வயிறுடைய, என் தெய்வம், அம்புலியே உன்னைக் கூவி அழைக்கிறான் பார்.
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண் - தானே எழுந்து, உன்னைத் தாவிப் பிடிக்கவேண்டும் என்று இல்லை. இங்கிருந்தபடியே, தன் சக்கராயுதத்தை ஏவி விட்டாலே போதும். நீ இல்லாமல் போய்விடுவாய். எங்கள் குலதெய்வம் பலமுறை, உரக்கக் கூவி அழைத்தும் நீ வரவில்லை. ஆதலால், சந்தேகமே இல்லை. அவன் தன் சக்கராயுதத்தினால் உன்னைக்
கொல்லப்போகிறான் பார்.
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா - இறுதியாக அழைக்கிறேன், உனக்கு வாழ விருப்பம் இருந்தால், மாமதியே மகிழ்ந்தோடி வந்து என் மகனுடன் விளையாடுவாயாக.
பதவுரை:
மோர்ப் பானையில் வைத்திருந்த, வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கையால் எடுத்து, ஒரே வாயில் விழுங்கி உண்ணுமளவினுக்குப் பெரிய வயிறுடையவன்; எங்கள் குல தெய்வம் உன்னைக் கூவி அழைக்கின்றான். அவன் பல முறை அழைத்தும் நீ வராததால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, நிச்சயமாக உன்னைக் கொல்லப் போகிறான்.இதில் சந்தேகமே இல்லை. உயிர் வாழ விருப்பம் கொண்டாயானால், மாமதியே! மகிழ்ந்தோடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக.
5 comments:
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண்*
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா:)))
யசோதை தாயார் மிரட்டலுக்கு பயந்து கண்ணன் ஹாயாக சுற்றி பார்க்க மாமதி அன்போடு வந்தாச்சு சந்திர பிரபை வாகனமாக ! :)
தாழி, பேழை, ஆழி, வாழ...என்று "ழ" கர சொற்கள் எப்படி கொட்டுகிறது !!
"ஆழி எழ, சங்கும் வில்லும் எழ, திசை
வாழி எழ, தாண்டும் வாழும் எழ, அண்டம்
மோழை எழ, முடிபாதம் எழ, அப்பன்
ஊழி எழ, உலகம் கொண்டவாறே."
என்ற திருவாய்மொழி பாசுரத்தை நினைவு படுத்துகிறது.
srikamalakkanniamman said...
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண்*
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா:)))
யசோதை தாயார் மிரட்டலுக்கு பயந்து கண்ணன் ஹாயாக சுற்றி பார்க்க மாமதி அன்போடு வந்தாச்சு சந்திர பிரபை வாகனமாக ! :)//
இந்த சந்திரனை எப்படியெல்லாம் மிரட்டிக் கூப்பிட வேண்டியிருக்கு :-)
Radha said...
தாழி, பேழை, ஆழி, வாழ...என்று "ழ" கர சொற்கள் எப்படி கொட்டுகிறது !!
"ஆழி எழ, சங்கும் வில்லும் எழ, திசை
வாழி எழ, தாண்டும் வாழும் எழ, அண்டம்
மோழை எழ, முடிபாதம் எழ, அப்பன்
ஊழி எழ, உலகம் கொண்டவாறே."
என்ற திருவாய்மொழி பாசுரத்தை நினைவு படுத்துகிறது.///
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.
பாசுர புலியே வருக! பாசுர மழைப் பொழிக! பொழிக!! :-)
இவனும் பேழை வயிற்றன் தானா? குமரனின் அண்ணன் மட்டும் தான் பேழை வயிற்றன் என்று நினைத்தேன். :-) தாழியில் வெண்ணெயை தடங்கை ஆர விழுங்கினால் பேழை வயிறு தான் வரும்; ஏதோ கொஞ்சமே கொஞ்சம் வெண்ணெய் தின்னும் எனக்கே பேழை வயிறு இருக்கிறதே! :-)
Post a Comment