Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு

(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 4

வானவர் தாம்மகிழ வன் சகட முருள
வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*

தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*

ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.



பொருள்:

வானவர் தாம் மகிழ - விண்ணுலக தேவர்கள் அனைவரும் மகிழும் வண்ணம், அவர்களுக்கு இடையூறுகள் தந்த அசுரர்களையெல்லாம் வதம் புரிந்த தேவாதி தேவனே!

வன்சகடமுருள, வஞ்ச முலைப்பேயின் நஞ்சமுது உண்டவனே - கண்ணனைக் கொல்வதற்காக, அவன் தாய் மாமனான கம்சனால் பல அசுரர்கள் அனுப்பப்பட்டனர். ஆனால், கண்ணனோ அனைவரையும் வதம் புரிந்து இறுதியில் கம்சனையும் அழித்து, தன் தாய் தந்தையரை சிறைமீட்டான்.

வன் சகடம் உருள: யசோதை அன்னை, குழந்தை கண்ணனை, ஒரு மரநிழலில் படுக்க வைத்து விட்டு அவ்விடம் விட்ட நகர்ந்தாள். குழந்தை கண்ணனோ, உறங்காமல் தன் கால்களை உதைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, சகடாசுரன் என்னும் அசுரன் வண்டியின் சக்கர உருவில் உருமாறி, படுத்திருந்த குழந்தையினை நோக்கி உருண்டு வந்தான். குட்டிக் கண்ணன், தன் கால்களை உதைத்தது விளையாடுவது போல் அந்த சக்கரத்தை நோக்கி,பிஞ்சு கால்களால் ஒரு உதை விடவே, சக்கரம் தூள் தூளாக நொறுங்கிப் போய், அந்த அசுரனும் மாண்டுபோனான்.

வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது உண்டவனே - குழந்தைக் கண்ணனைக் கொல்வதற்காக, கம்சனால் அனுப்பப்பட்டவள் தான் இந்த பூதனை என்னும் அரக்கி. அவள், தன் பேயுருவத்தை மாற்றி மானுடப் பெண்ணைப் போல் உருமாறி கண்ணனின் மாளிகைக்கு வந்தாள். அழுது கொண்டிருந்த பிள்ளையை ஓச்சுவது போல், அவள் குழந்தைக் கண்ணனுக்கு விஷம் கலந்த தாய்ப்பாலைக் கொடுத்து கொன்றுவிடலாம் என்று எண்ணி, குழந்தைக்கு தாயமுது கொடுத்தாள். கண்ணனோ, பூதகியிடம் தாய்ப்பால் குடிப்பது போல் பாவனை செய்து, அவள் உயிரையும் அவ்வழியே குடித்துவிட்டான்.


கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே - காட்டிலிருக்கும், வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல், அம்மரத்தில் ஒரு கன்றினையே எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் கன்றுகுட்டியே!

ஆயர்குலத்தலைவன் என்று எல்லாராலும் வணங்கப்படுகிற இந்த கண்ணனா, ஒரு கன்றுக் குட்டியப் போய் கொன்றார்?? அதுவும் மரத்துல வீசியடித்து கொன்றிருக்காரே?? என்ன இது? அதப் போய் பெரியாழ்வாரும் கருங்கன்றே ன்னு கொஞ்சுறாரு ன்னு கேக்குறீங்களா... மேற்கொண்டு படிங்க உங்களுக்கே புரியும்.

ஒரு முறை, சிறுவன் கிருஷ்ணர் தன் தமையனான பலராமருடன் யமுனை நதிக்கரையில் ஆநிரைகளை மேய்க்கச் சென்றனர். அவைகளை ஓரிடத்தில் மேய விட்டுவிட்டு, இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, வத்சாசுரன் என்னும் அசுரன் கன்றின் உருவெடுத்து அவர்களைக் கொல்லும் நோக்குடன் மற்ற கன்றுகளுடன் மந்தையில் கலந்துவிட்டான். சிறுவன் கண்ணனோ, ஓசைபடாமல் கன்றின் பின்புறமாக சென்று, அதன் இரு பின்னங்கால்களையும் இறுக்கப் பிடித்து, கவண் சுற்றுவதைப் போல் வேகமாக சுழற்றி அங்கிருந்த விளா மரத்தின் மேல் வீசினான். அந்த விளாமரம் யார் தெரியுமா? அதுவும் ஒரு அசுரன் தான். கபிஸ்டாசுரன் என்னும் அசுரனே அங்கு விளாமரமாக உருமாறி நின்றான்.

கண்ணன், விளா மரத்தின் மேல் கன்றினை வீசி எறிய, அந்த மரமும் முறிந்து விழுந்தது. கன்றாக வந்தவனும், மரமாக நின்றவனும் மாண்டுபோயினர்.



தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை - தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்கள் அனைவரும் அழிந்து போகும் வண்ணம், அவர்களுக்கெல்லாம் மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்யும் வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே!

தேனுகனும்:

சிறுவனான கண்ணபிரானும், பலராமனும் அவர்களது தோழர்களுடன் ஆநிரைகளை மேய்க்கச் சென்றனர். ஒரு நாள் அவர்கள் அனைவரும் சிரித்து பேசி மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கையில், ஒரு சிறுவன், இந்த விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் என்று ஒரு காடு உள்ளது. அந்தக் காட்டில் நிறைய ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்களும் மிகுதியாக உள்ளன. ஆனால், அந்த காட்டிற்குள்தான் எவராலும் செல்ல இயலவில்லை என்று கூறினான். கண்ணனும், பலராமனும் அவர்களிடம் காரணம் கேட்டறிந்தனர். அந்தக் காட்டில், தேனுகாசுரன் என்னும் அசுரன் கழுதை வடிவில் அங்கு இருப்பதாகவும், அவனுடன், இன்னும் பல அசுரர்களும் இருக்கின்றனர். அவர்கள் வனத்தில் விலங்குகள் கூட இருக்க முடியாதபடி அனைத்தையும் கொன்றுவிடுகின்றனர் என்று கூறினர். அதுமட்டுமில்லாமல், இவர்களைத்தவிர வேறு யாராலும் அந்த அசுரர்களை அழிக்க இயலாது என்றும் கூறி, அவர்களை அழித்தால், நாம் அனைவரும் அங்கே சென்று அப்பழங்களை சுவைத்து மகிழலாம் என்று சொல்லவே, சிறுவர்கள் படை கிருஷ்ணர் - பலராமர் தலைமையில் காட்டை நோக்கிப் புறப்பட்டது.

அனைவரும், தாளவனத்திற்குள் நுழைந்தனர். அண்ணனார், மரத்தைப் பிடித்து உலுக்க, பழங்கள் கீழை உதிர்ந்தன. அவற்றை எல்லாம் சிறுவர்கள் பேராவலுடன் பொறுக்கி சேர்த்தனர். பழங்கள் உதிரும் ஓசை கேட்ட அசுரன், வேகமாக வந்து பலராமனைத் தாக்கினான். ஆதிசேஷனான பலராமன் அசையாமல் நிற்க, அவன் மீண்டும் தாக்க வந்த போது, அவனைத் தடுத்து, அவன் கால்களைப் பிடித்து சுழற்றி வீசிஎறிந்தார்.

உடனே, அங்கிருந்த மற்ற அசுரர்கள் வந்து கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்கினர். ஆனால், அவர்கள் இருவரும் ஒவ்வொரு கழுதையாக அவற்றின் கால்களைப் பிடித்து வீசி எறிந்து அனைத்து அசுரக்கழுதைகளையும் கொன்றனர்.

முரனும், வெந்நரகனும்:

முராசுரன் என்பவன், நரகாசுரனின் தமையன். இவன் ஐந்து தலைகளைக் கொண்டவனாவான். நரகாசுர வதத்தின் போது, இவனையும், இறைவன் கண்ணபரமாத்மா, தன் சக்கராயுதம் எறிந்து கொன்றார். முராசுரனைக் கொன்றதால் இறைவனுக்கு முராரி என்றொரு பெயரும் உண்டு.

நரகாசுர வதம் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்குமே! பட்டாச சுட்டுச் சுட்டுப் போடட்டுமா!! :-)) நரகாசுரனையும் வதம் புரிந்தவர், கண்ணபெருமான் தான்.

இந்த நரகாசுர வதத்தை வைத்துதான், இராமன் தல தீபாவளிய எங்க கொண்டாடினாங்க? அயோத்திலயா, காட்டுலயா ன்னு கூட புதிரா கேப்பாங்களே....


எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - வானுலக தேவர்கள் அனைவரும் மகிழும் வண்ணம், அசுரர்களனைவரையும் அழித்த, வலிமை மிக்க ஆண் யானையைப் போன்றவனே! எனக்கு, ஒரு முறை செங்கீரை ஆடிக் காட்டுவாயாக! போர்செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பதவுரை:

விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

13 comments:

Anonymous said...

நரகாசுரன் கதை வெறும் டுபாகூர் கதை என்றுதான் நினைதிருந்தேன்
ஆழ்வாரே கூறி இருக்கிறார் என்றால் உண்மை என்று இப்போ நம்புகிறேன்

ஒரு பாசுரத்தில் இதனை விசயங்களா. பாடின பெரியாழ்வாருக்கும், வெளக்கம் சொன்ன ஒங்களுக்கும் என் நன்றிகள்.

Anonymous said...

புளிச்ச கீரை , சிறு கீரை என்றெல்லாம் உள்ளது . அது என்னாப்பா செங்கீரை என்று நினைதேன் . இப்போது புரிந்து விட்டது
ஆனா வேற கண்ணன் ஆடும் செங்கீரை பதில் வேறு பேரை விட்டு இருக்கலாம்.

Anonymous said...

காணாமல் போனவங்க எல்லாம் மாதவி பந்தல்ல இருங்கங்கன்னோவ்!
நானும் அங்கதான் கூவிட்டு இருந்தேன். இப்பதான் பறந்து வந்து இங்க உட்கார்ந்தேன்

Anonymous said...

இராமன் தல தீபாவளிய எங்க கொண்டாடினாங்க? அயோத்திலயா, காட்டுலயா ன்னு கூட புதிரா கேப்பாங்களே....:))

ஏலே அது எப்படிலே! ராம அவதாரம் முடிஞ்ச பிறகுதானே கிருஷ்ணா அவதாரம் . ராமர் எப்படிலே தீபாவளி கொண்டாடி இருப்பாரு !
கொஞ்ச நேரத்துல நம்மையே குழப்பிட்டீரே!

Anonymous said...

முராசுரன் என்பவன், நரகாசுரனின் தமையன். இவன் ஐந்து தலைகளைக் கொண்டவனாவான்:)))

அசுரன் 5 தலை சொல்றீங்க 10 தலைன்னு சொல்றீங்க இப்படி ஒத்து மொத்தமா அசுர குலத்தையே அழித்து விட்டாரு கண்ணன் . ஒரு அசுரனையாவது கண்ணன் விட்டிருந்தால் தலைங்க எப்படி ஒட்டி இருக்குனு
ஆராய்ச்சி பண்ணி இருப்பாங்க நம்ம ஆளுங்க!

தமிழ் said...

srikamalakkanniamman said...

நரகாசுரன் கதை வெறும் டுபாகூர் கதை என்றுதான் நினைதிருந்தேன்
ஆழ்வாரே கூறி இருக்கிறார் என்றால் உண்மை என்று இப்போ நம்புகிறேன்//

வாங்க கமலக்கண்ணியம்மன்

என்னது, டுபாக்கூர்ரா..? அப்போ வருசா வருசம் தீபாவளியெல்லாம் கொண்டாடுறதே இல்லையா... தீபாவளின்னா என்னான்னே தெரியாதா??
----------------
ஒரு பாசுரத்தில் இதனை விசயங்களா. பாடின பெரியாழ்வாருக்கும், வெளக்கம் சொன்ன ஒங்களுக்கும் என் நன்றிகள்//

அதைப்படித்த உங்களுக்கும் எங்களின் நன்றிகள்.

தமிழ் said...

srikamalakkanniamman said...

புளிச்ச கீரை , சிறு கீரை என்றெல்லாம் உள்ளது . அது என்னாப்பா செங்கீரை என்று நினைதேன் . இப்போது புரிந்து விட்டது//

செங்கீரை என்பது கோழிக்கொண்டை ன்னு சொல்வாங்கள் ல்ல அதுதான்.
அதன் கீரையை சமைத்து உண்பர். மருத்துவக்குணம் நிறைந்தது.

ஆனா வேற கண்ணன் ஆடும் செங்கீரை பதில் வேறு பேரை விட்டு இருக்கலாம்.//

என்ன சொல்ல வர்றீங்க ன்னு புரியல. தயவுசெய்து விளக்கவும்.

தமிழ் said...

srikamalakkanniamman said...

காணாமல் போனவங்க எல்லாம் மாதவி பந்தல்ல இருங்கங்கன்னோவ்!
நானும் அங்கதான் கூவிட்டு இருந்தேன். இப்பதான் பறந்து வந்து இங்க உட்கார்ந்தேன்//

அது தெரியும். நானும் பந்தலுக்குப் போவதுண்டு. வெளியூர் பயணம் அதிகம் இருப்பதால், இப்பொழுது அதிகம் பதிவிடவும் முடியவில்லை. வேறு வலைப்பூக்களும் செல்ல முடிவதில்லை. :-(

தமிழ் said...

srikamalakkanniamman said...

இராமன் தல தீபாவளிய எங்க கொண்டாடினாங்க? அயோத்திலயா, காட்டுலயா ன்னு கூட புதிரா கேப்பாங்களே....:))

ஏலே அது எப்படிலே! ராம அவதாரம் முடிஞ்ச பிறகுதானே கிருஷ்ணா அவதாரம் . ராமர் எப்படிலே தீபாவளி கொண்டாடி இருப்பாரு !
கொஞ்ச நேரத்துல நம்மையே குழப்பிட்டீரே!//

கண்டுபுடிச்சிட்டீங்களே. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்!

தமிழ் said...

srikamalakkanniamman said...

முராசுரன் என்பவன், நரகாசுரனின் தமையன். இவன் ஐந்து தலைகளைக் கொண்டவனாவான்:)))

அசுரன் 5 தலை சொல்றீங்க 10 தலைன்னு சொல்றீங்க இப்படி ஒத்து மொத்தமா அசுர குலத்தையே அழித்து விட்டாரு கண்ணன் . ஒரு அசுரனையாவது கண்ணன் விட்டிருந்தால் தலைங்க எப்படி ஒட்டி இருக்குனு
ஆராய்ச்சி பண்ணி இருப்பாங்க நம்ம ஆளுங்க!//

எல்லாம் ஃபெவிக்விக் கின் மாயம்தான் வேறென்ன...


இறைவனுக்குப் பல கைகள் இருக்கும் போது, அசுரர்களுக்கு பல தலைகள் இருக்கக் கூடாதா.

Anonymous said...

அப்போ வருசா வருசம் தீபாவளியெல்லாம் கொண்டாடுறதே இல்லையா... :))))

தீபாவளி சிறப்பா கொண்டாடுவோம்ல, ஆனா நரகாசுரன் கதை உண்மையா என்பது... ....doubt
இப்போ நம்புகிறேன் ..

Anonymous said...

Tamizh said...
ஆனா வேற கண்ணன் ஆடும் செங்கீரை பதில் வேறு பேரை விட்டு இருக்கலாம்.//
என்ன சொல்ல வர்றீங்க ன்னு புரியல.:)))

என்ன சொல்ல வர்றேன்னா , குழந்தை கண்ணன் ஆடும் இந்த ஆட்டத்திற்கு செங்கீரை என்ற பெயர்
அல்லவா! செங்கீரை என்ற பெயருக்கு பதில் ஸ்டைலாக கண்ணன் பிரேக் டான்ஸ் , ஸ்டெப் டான்ஸ் , போக் என்றெல்லாம் பெயர் வைத்து இருக்கலாம் என்று சொல்ல வந்தேன் ...

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா!

தமிழ் said...

srikamalakkanniamman said...

செங்கீரை என்ற பெயருக்கு பதில் ஸ்டைலாக கண்ணன் பிரேக் டான்ஸ் , ஸ்டெப் டான்ஸ் , போக் என்றெல்லாம் பெயர் வைத்து இருக்கலாம் என்று சொல்ல வந்தேன் ...

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா!//

ஏன் இல்ல,

மதுராபுரியில, பட்டத்து யானையின் கொம்பை உடைத்தாடினது - பிரேக் டான்ஸ்,

ஆயர்பாடியில் வெண்ணெயத் திருடிட்டு, கள்ளத்தனமா நடந்து போறது - ஸ்டெப் டான்ஸ்,

பிருந்தாவனத்தில், கோபியர்களுடன் ஆடுறது - ஃபோக் டான்ஸ்...