Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


பாடல் 5

மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி* ஒருங்கு
ஒத்தஇணை மருதம் உன்னி யவந்தவரை
ஊருகரத் தினொடும் உந்திய வெந்திறலோய்!*
முத்தினிள முறுவல் முற்ற வருவதன்முன்
முன்னமுகத் தணியார் மொய்குழல்கள் அலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி - என் குட்டிக் கண்ணனே! நீண்ட, அடர்த்தியான கருங்கூந்தலை உடைய, அழகிய, சிறந்த குணங்களைக் கொண்ட, ஆயர்குல பெண்கள் தயாரித்து, சேமித்து வைத்திருந்த தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையெல்லாம் தன் பெரிய கைகளால் அள்ளி, அவற்றை எவரும் கண்டறிவதன் முன்னம் சுவைத்து,ஒரே விழுங்கில் அவசர அவசரமாக உட்கொண்டாய்.


கண்ணனின் கள்ளத்தனத்தைக் கண்டறிந்ததும், கோபங்கொண்ட யசோதையன்னை,அவனை நீண்ட பழந்தாம்புக் கயிற்றால் உரலில் கட்டிப்போட்டாள்.

ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னியவந்த வரை ஊர் உகரத்தினொடும் உந்திய வெந்திறலோய் - பெரிய கனமான உரலில் உன்னைப் பிணைத்திருந்தும், வலிமைமிகுந்த உன் கால்களினால் அந்த உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே, மாளிகையை விட்டு, வெளியே வந்து, ஆங்கே மாளிகையின் பின்புறத்தில், ஒன்றாக அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களுக்கிடையே உரலுடன் ஊர்ந்து செல்ல முயலுகையில், அவற்றை உன் வலிமையான தோள்களினால் இடித்துக் கீழே தள்ளிவிட்டு அவற்றிற்கிடையில் புகுந்து சென்ற மிகுந்த வலிமையுடையவனே! மருதமரங்கள், ஆயர்பாடி வந்த கதை


(உன்னு - இழு; இயவு - வழி, செல்லுதல்; வரை - விலக்கு; உகரம் - இடித்தல், கீழே விழச் செய்தல்; உந்து - தள்ளு; வெந்திறலோய் - மிகுந்த வலிமையுடையவனே)

முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்னமுகத் தணியார் மொய் குழல்கள் அலைய - நீ அசைந்தாடுகையில், உன் செவ்விதழ்கள் சிந்தும் செந்தூரப் புன்னகையை முந்திக் கொண்டு உன் கருங்கூந்தல் நின் திருமுகத்தின் முன் வந்து அலைபாயும்... முத்தினும் சிறந்த உன் வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம் நீ சிரிக்கும் முன்னமேயே, உன் கருங்கூந்தல் ஊர்ந்து உன் முகத்தின் முன் வந்தாடும் வண்ணம் எனக்காக ஒரு தடவை செங்கீரை ஆடுவாயாக

அத்த! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே - என்னைப் பெற்ற என் அப்பனே! எனக்கு ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக. போர்செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே

பொழிப்புரை:

என் குட்டிக் கண்ணனே! அடர்த்தியான, நீண்ட கருங்கூந்தலை உடைய, சிறந்த குணங்களைக் கொண்ட ஆயர்குல பெண்கள் சிரத்தையுடன் தயாரித்து, சேமித்து வைத்திருந்த தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையெல்லாம் தன் பெரிய கைகளால் அள்ளி, அவற்றை எவரும் கண்டறிவதன் முன்னம் சுவைத்து,ஒரே விழுங்கில் அவசர அவசரமாக உட்கொண்டாய்.உன் கள்ளத்தனத்தைக் கண்டறிந்ததும், கோபங்கொண்ட யசோதையன்னை, உன்னை நீண்ட பழந்தாம்புக் கயிற்றால் உரலில் கட்டிப்போட்டாள்.பெரிய கனமான உரலில் உன்னைப் பிணைத்திருந்தும், வலிமைமிகுந்த உன் கால்களினால் அந்த உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே, மாளிகையை விட்டு, வெளியே வந்து, ஆங்கே மாளிகையின் பின்புறத்தில், ஒன்றாக அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களுக்கிடையே உரலுடன் ஊர்ந்து செல்ல முயலுகையில், அவற்றை உன் வலிமையான தோள்களினால் இடித்துக் கீழே தள்ளிவிட்டு அவற்றிற்கிடையில் புகுந்து சென்ற, மிகுந்த வலிமையுடையவனே!என்னைப் பெற்ற என் அப்பனே! முத்தினும் சிறந்த உன் வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம் நீ சிரிக்கும் முன்னமேயே, உன் கருங்கூந்தல் ஊர்ந்து உன் முகத்தின் முன் வந்தாடும் வண்ணம் எனக்காக ஒரு தடவை செங்கீரை ஆடுவாயாக. போர்செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

6 comments:

Radha said...

பதங்களை மட்டும் பார்த்தால் கடினமான பாசுரம் போல தெரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் அழகு,
அவன் குழல் அழகு,அவன் சிரிப்பழகு.
செங்கீரை ஆடச் சொல்லும் பெரியாழ்வாரின் பாசுரமும் அழகு. மிகவும் நன்றி.

தமிழ் said...

Radha said...

பதங்களை மட்டும் பார்த்தால் கடினமான பாசுரம் போல தெரிகிறது.//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை இராதா ஐயா.

சொல் வழக்கு சற்று அறிமுகமில்லாதது போல் இருக்கலாம். மற்றபடி, குழந்தையின் நடையைப் போல் ரொம்ப அழகா வருது வரிகள்.

தமிழ் said...

வல்லிசிம்ஹன் said...

கண்ணன் அழகு,
அவன் குழல் அழகு,அவன் சிரிப்பழகு.
செங்கீரை ஆடச் சொல்லும் பெரியாழ்வாரின் பாசுரமும் அழகு. மிகவும் நன்றி.//

குட்டிக் கண்ணனும் குறும்பும் போல, குழந்தையும் அழகும் இணைபிரியாதவை.

தொடர்ந்து வாருங்கள், வல்லி அக்கா! :-)

பித்தனின் வாக்கு said...

படங்கள் மிக அழகு,அதை வீட பாசுரங்களின் விளக்கங்கள். மிக்க நன்றி.

தமிழ் said...

மிக்க நன்றி பித்தன் ஐயா,

தொடர்ந்து வாருங்கள்!