Tuesday, August 2, 2011

பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 7



பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 7

படர்பங்கயமலர் வாய் நெகிழப் பனிபடுசிறுதுளி போல்*
இடங்கொண்ட செவ்வாயூறியூறி இற்றிற்று வீழநின்று*
கடுஞ்சேக்கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணிகணகணென*
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ.

பொருள்:

படர்பங்கயமலர் வாய் நெகிழப் பனிபடுசிறுதுளி போல் - அகன்று, விரிந்த செந்தாமரை மலரின் வாய் திறக்கப்பெற்று, அதனின்று ஊறி வரும் குளிர்ந்த, இனிமை மிகுந்த தேனின் துளியினைப் போல (பங்கயம் - தாமரை; சிறுதுளி - தேன்)



இடங்கொண்ட செவ்வாயூறியூறி இற்றிற்று வீழநின்று - குட்டிக்கண்ணனின் பெரிய, செந்தாமரை இதழினை ஒத்த வாயினின்று மேலும் மேலும் ஊறி, முறிந்து முறிந்து கீழே ஒழுகி விழ, நின்று...

மழலைகளின் வாயினின்று ஒழுகும் எச்சிலானது, தண்ணீரினைப் போல சொட்டு சொட்டாக விழாது. அதன் பாகுநிலை அதிகம் என்பதால், தேனைப் போல அது ஒரு நீண்ட கம்பி போல விழும்.

கடுஞ்சேக்கழுத்தின் மணிக்குரல்போல் உடைமணிகணகணென- கடும் சே கழுத்தின் - கடுமையான பார்வை, செயல், சுபாவம் கொண்ட காளைமாடு. வலிமை மிகுந்த, கொடுங்கோபமுடைய காளைமாட்டின் கழுத்திலுள்ள மணிகள் ஒன்றையொன்று வேகமாக உரசி எழுப்பும் கனத்த ஒலியினைப் போல, நின் திருவரையில் உள்ள அரைஞாண்கயிற்றில் கோர்க்கப்பட்ட மணிகள் கண கண என சப்திக்க (கடுஞ்சே - கடும் சே - முரட்டுக்காளை; உடைமணி - மணிகள் கோர்க்கப்பட்ட அரைஞாண்கயிறு)

தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ- உன் அகன்ற பாதங்களை மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து, சார்ங்கம் என்னும் வில்லினை ஆயுதமாக உடையவனே தளர்நடை நடவாயோ. (தடந்தாள் - அகன்ற பாதம்; சார்ங்கபாணி - சாரங்கம் என்னும் வில்லினை ஆயுதமாக உடையவன்)

ஒப்புமை:

விரிந்த செந்தாமரை மலர் - கண்ணனின் வாய்
பங்கய மலர் வாய் - கண்ணனின் செவ்விதழ்
பனிபடு சிறுதுளி தேன் - வாயமுதம்
முரட்டுக் காளையின் கழுத்தில் உள்ள மணிகளின் ஒலி - இடுப்பிலுள்ள அரைஞாண்கயிற்றின் மணிகளின் ஒலி

பதவுரை:

சாரங்கம் என்னும் வில்லினை ஆயுதமாக உடையவனே! அகன்ற, பெரிய, விரிந்த இதழ்களை உடைய செந்தாமரை மலரினுள்ளிருந்து ஊறுகின்ற குளிர்ந்த, இனிமை மிகுந்த தேன்துளியினைப் போன்று, உன் பெரிய, செவ்வாயினின்று ஊறி ஊறி, ஒழுகி வீழ, கடுமை மிகுந்த காளைமாட்டின் கழுத்திலுள்ள மணிகள், ஆரவாரித்து எழுப்பும் பேரொலியினை ஒத்த சப்தத்தினை உன் இடையில் கட்டப்பட்ட அரைஞாண்கயிற்றிலுள்ள மணிகள் உண்டாக்கும் வண்ணம், உன் அகன்ற செம்மலர் பாதங்களினைக் கொண்டு தளர்நடை நடவாயோ!

9 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

).....----* மிக்க நன்றி -:)

நாடி நாடி நரசிங்கா! said...

***

தமிழ் said...

மிக்க நன்றி!

குமரன் (Kumaran) said...

பனிபடு சிறுதுளி என்றது தாமரை மலர் மொட்டு பகலவனைக் கண்டு நெகிழும் போது அதன் மேல் படர்ந்திருந்த அதிகாலைப்பனி தெறிப்பதைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது.

தமிழ் said...

படர் பங்கய மலர் வாய் நெகிழ - தாமரை மலர் மலர

பனிபடு சிறுதுளி போல - குளிர்ந்த பனி/தேன் போல...

இடங்கொண்ட செவ்வாய் ஊறிஊறி, இற்று இற்று வீழ நின்று -வாயினுள்ளிருந்து எச்சிலானது ஊறி ஊறி வீழ்கிறது.

அப்படியானால், பனித்துளி மலருக்குள்ளிருந்து ஊறி வராது; தேன்தான் மலரினுள்ளிருந்து ஊறி வரக்கூடியது.

மலரிலிருந்து ஊறிவரும் தேனைப் போல, கண்ணனின் வாயிலிருந்து உமிழ்நீர் ஊறி வருகிறது.

சரீங்களா?! :-)

Rajewh said...

பனிபடு சிறுதுளி என்றது தாமரை மலர் மொட்டு பகலவனைக் கண்டு நெகிழும் போது அதன் மேல் படர்ந்திருந்த அதிகாலைப்பனி தெறிப்பதைக் குறிக்கிறதோ என்று தோன்றுகிறது. :)


குமரன் நான் கூட முதலில் அப்படித்தான் நினைத்தேன் . மேலோட்டமா பார்த்தா அப்பிடித்தான் தெரியுது
ஆனா கொஞ்சம் உள்ள போனா தேன்தான் சரி என்று படுகிறது

www.dravidaveda.org இதிலேயும் தேன் என்றுதான் சொல்லியிருக்காங்க!

Kavinaya said...

மிக அழகாக இருக்கின்றன, உங்கள் பதவுரைகளும் விளக்கங்களும் :) மிக்க நன்றி.

தமிழ் said...

இராஜேஷ், இந்த இணைப்பை ஏற்கனவே மாதவிப்பந்தலில் இரவி போட்டிருக்கிறார். நானும் போய் பார்த்திருக்கிறேன்.

அருஞ்சொற்பொருளுடன் அருமையாக விளக்கியிருக்கின்றனர். நல்ல வலைதளம். அடிக்கடி போய் வாருங்கள்.

தமிழ் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கவிநயா அவர்களே!