Friday, July 4, 2008

ஆண்டாள்


ஆண்டாள்:

காலம் - ஏழாம் நூற்றாண்டு ( 716 - 732)ஆண்டு - நள
மாதம் - ஆடி
நாள் - செவ்வாயக் கிழமை
நட்சத்திரம் - பூரம்
திதி - பஞ்சமி (சுக்லபட்சம்)

இவை எல்லாம் கோதையின் பிறந்த சாதகக் குறிப்புகள் அல்ல. இவை அனைத்தும் நம்ம விஷ்ணு சித்தர் கோதையைக் கண்டெடுத்த நேரக்குறிப்புகள்.

எவ்வாறு குழந்தை வரம் வேண்டி ஜனகன் யாகம் செய்யும் பொழுது சீதா தேவியைக் கண்டெடுத்தாரோ, அதே மாதிரிதான் கோதையும் நம்ம பெரியாழ்வாருக்குக் கிடைத்தார்.

ஆ! ஆ! அது இல்லங்க, பெரியாழ்வாரும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தாரா என்று குறுக்க நெடுக்க கேள்வி கேட்கப்படாது.

தன் தாயுமான ஆழ்வார் தனியே தவிப்பதைப் பொறுக்காத இறைவன், தன் துணைவியைக் குழந்தையாய் அனுப்பி, அந்த இறைவியை வளர்க்கும் பொறுப்பை பெரியாழ்வாருக்கு அளித்தருளினார்.

பட்டர் பிரான் தன் வழக்கமான மலர்க் கைங்கரிய சேவையைச் செய்ய ஒரு நாள் நந்தவனத்திற்கு சென்று மலர்க் கொய்து கொண்டிருக்கையில், ஒரு துளசிச் செடியின் அடியில் சீதாதேவியின் அம்சமாக, பூதேவியின் புதல்வியாக அந்த குழந்தையைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டு தாயன்போடு, பக்தியையும் ஊட்டி வளர்த்தார்.

கோதையும் ஆழ்வாரின் அரவணைப்பிலும், அங்கு இருந்த பக்திமயமான சூழலிலும் இயல்பு நிலைக்கு அதிகமான பக்தியையும், பாசத்தையும் இறைவன் மேல் வைத்து வளர்ந்தார். கோதை, பெரியாழ்வாருடன் சேர்ந்து இறைவனுக்கு மலர்க்கைங்கரியம் செய்வதிலும், இறைவனுக்குத் தொண்டுகள் புரிவதிலும் துணையாய் இருந்தார்.

பெரியாழ்வார், நாள்தோறும் கோதைக்கு கண்ணனின் குழந்தைப் பருவ குறும்புகள் முதல் அவரது ஒவ்வொரு அருட்செயல்களையும் கதையாய்க் கூறுவார். இதனால் இறைவனைப் பற்றிய சிந்தனையே இறைவியின் உள்ளத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்து, தன் ஒவ்வொரு அசைவிலும் இறைவன் இருப்பதை இதயப்பூர்வமாக உணர்ந்தார்.

cow boy ன் கண்பட்டதும்,
play boyன் கதை கேட்டதும்,
உண்டான love ஆனது,
உள்ளூற பிறை யானது....

காலப்போக்கில், கோதையின் பக்தி, காதலாக மலர்ந்தது. கோதை வளர, வளர, ''தான், அந்த அழகிய கண்ணனுக்கு, தன் காதல் தலைவனுக்கு ஏற்ற துணையாய் இருக்க முடியுமா?'' என்று யோசிக்க ஆரம்பித்தார். 

காதலும் கள்ளத்தனமும் இரட்டைக் குழந்தைகள் இல்லையா! அதுபோலவே கோதையும், இறைவனுக்குச் சூட்டுவதற்காக, பட்டர்பிரான் கோர்த்து வைத்திருந்த பூமாலையை, தன் தந்தைக்குத் தெரியாமலேயே எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வார்.

கண்ணாடியில் தன் மணக்கோலம் தெரியுமோ? இல்லை, மனத்திற்குள் இருக்கும் மன்னவனின் திருக்கோலம் தெரியுமோ? அவர் கண்ணாடியில் தான் காணும் அழகைக் கண்டு, முகம் சிவந்து மெய் மறந்து நின்றுவிடுவாள். பின் சுய நினைவு வந்தவளாய், தன்னுள்ளே மெல்லியதாய் நகைத்து, மீண்டும் மாலையை எடுத்தது எடுத்தபடி, எவருக்கும் அறியாமல் அப்படியே வைத்துவிடுவாள் அந்த அப்பாவி சிறுமி.

அது சரி, கோதை மட்டும் பூமியிலே பிறந்து, மங்கையாய் மண்ணிலே அந்த மச்சக்காரனை (மச்சாவதாரத்தானை) நினைத்து நினைத்து உருகுகிறாளே, ஆனால் நாராயணனைக் காணோமே! அப்படின்னா, கோதை என்னா, ஒரு தலை ஃபீலரா??? ...

கோதையின் காதலும் வளர்ந்தது; கள்ளத்தனமும் தொடர்ந்தது..... ஒரு நாள், மாதவனுக்கான மாலையில் மங்கையின் முடி ஒன்று இருப்பதைப் பார்த்துப் பதறினார், பெரியாழ்வார்.

இறைவனுக்கான சேவையில் எவ்விதக் குறையும் இருக்கக் கூடாது என்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலராய் தானே பறித்து, அவற்றைப் பக்குவாய் புணைந்திருந்தும், அதில் எவ்வாறு பிழை ஏற்பட்டது என்று மனம் பதை பதைத்தார்.

உடனே அவர் அதைக் கண்டறிய வழக்கம் போல், தன் வழக்கமான இடத்தில் மாலையை வைத்து விட்டு மறைந்து நின்று கவனிக்கையில் கள்வனின் காதலியின் கள்ளத்தனம் வெளிப்பட்டுவிட்டது.

உடனே அவர், கோதையைக் கடிந்து கொண்டு, மீண்டும் புதியதொரு மாலையை மாளவனுக்கு அணிவித்தார்.ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை....

திருடிய கனிதானே தித்திக்கும்.... திருடியின் திருக்கரம் பட்ட மாலைதான் கள்வனுக்குத் தித்திக்கும். அதனால், அன்று இரவில் கனவிலே, யார் கனவிலே?.....

பெரியாழ்வாரின் கனவிலே பெருமாள் தோன்றி, தனக்குக் கோதையின் மாலையை அணிவித்தாலே பிடி என்று பிடிவாதம் பிடித்தார். பெரியாழ்வாரும் மகிழ்ந்து அதன்படியே நடந்தார்.

'சூடித் தந்த சுடர்க் கொடியான' கோதை, குமரியானதும் பெரியாழ்வாருக்கு வந்தது பெர்ர்ரிய வேலை. சாதாரண மானிடர்கள் யாரையும் தான் கல்யாணம் கட்டிக்க மாட்டேன். மணந்தால், அந்த மாளவனைத்தவிர வேறு யாரையும் தன் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கோதையும் இங்கு அடம் பிடிக்க..... இப்பொழுதும் பெரியாழ்வாருக்கு பெரிய கவலை....

108 கோயில்ல சீனிவாசன் வாசம் செய்யும் பொழுது, எந்த தலத்திலிருக்கும் தலைவனுக்குத் திருமணம் முடிப்பது என்று....

மீண்டும், நம்ம திருவரங்க நாதர், பெரியாழ்வார் கனவிலே தோன்றி, 'கோதையை மணக்கோலத்துடன் என் சந்நிதிக்கு அழைத்து வரவும். அங்கே நான்
அவளை ஏற்றுக் கொள்வேன்', என்று கூறினார்.

அதன்படியே, பெரியாழ்வாரும் ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் கோதையை மணப்பெண்ணைப் போல் அலங்கரித்து, சுற்றமும் நட்பும் சூழ பல்லக்கிலே ஏற்றி, திருவரங்கப் பெருமானிடத்தில் வந்து சேர்ந்தனர்.

அங்கே திருவரங்கப் பெருமானுடன் ஆண்டவள் சங்கமம் ஆனாள்.

சூடித்தந்த நாச்சியாரான கோதை, இறைவன் மேல் பக்திச் சுவைச் சொட்டச் சொட்ட பாடிய பாசுரங்கள் இரண்டு; அவை,

திருப்பாவை 30 பாசுரங்கள் 
நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள்.

திருப்பாவை:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

ஐயைந்தும் - 5*5 = 25
ஐந்தும் - 5 (25+5 = 30). இந்த 30 பாசுரங்களும் மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலே பாடப்படுகின்றன.
ஓம் நமோ நாராயணாய நம!!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தோ...வந்துட்டேன்!...
தமிழ் கூப்பிட்ட போதெல்லாம் பிசியாக இருந்த நான்..
இப்போ கோதை கூப்பிட்ட போது...ஓடியே வந்துட்டேன்! :))

தமிழ் said...

தெரியும்ல ... எதாச்சும் பேர்ல "அள்" விகுதி வந்தா, எங்க இருந்தாலும் உடனே எந்திரிச்சி வந்திடுவாங்க மக்கள்! ;-)))

தமிழ் said...

//தமிழ் கூப்பிட்ட போதெல்லாம் பிசியாக இருந்த நான்..
இப்போ கோதை கூப்பிட்ட போது...ஓடியே வந்துட்டேன்! :))//

கோதை, கொண்டவனைக் கேட்டதும் தமிழில்தான்,
அவனைக் கொண்டதும் தமிழால்தான்...

ஆண்டாள் அந்த அஷ்டாச்சரனை ஆண்டதே, தமிழால் தான்....

ஆண்டாளுக்கு இறைவன் அடிமையானதும் தமிழால்தான்....

அமிழ்து தமிழை அழகாய் படிப்பதே ஆயிரம் கோடி இன்பம் தரும்...!!

தமிழ் said...

சிரிப்பான் போட மறந்துட்டேன்.... ;-))

அண்ணாமலை..!! said...

ஆண்டாள்..!! தமிழை..ஆண்டாள்..!!!!
தமிழை ஆண்டால் பிறகு சொல்லவும் வேண்டுமோ..!!

தமிழ் said...

வாங்க அண்ணாமலை, வருகைக்கு நன்றிகள். அடிக்கடி வந்துட்டு போங்க! தமிழை சுவைச்சிட்டு போங்க!