Monday, November 9, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 3

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதிபரந்தெங்கும்*
எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிதோடிவா.
பொருள்:

எனக்குத் தெய்வமாய் இருக்கின்ற தேனமுது அழைக்கின்றான் அம்புலியே, மஞ்சுக் கூட்டங்களில் மறைந்து கொள்ளாது மகிழ்ந்தோடிவா ன்னு யசோதை அன்னை அன்புடன் அழைத்தும், சந்திரன் வராததால், அவனை சற்று கடுமையாக, என் பிள்ளை அழைத்தும் வரமறுக்கிறாயா? உனக்கு அவ்வளவு மனத்துணிவா? தலைக்கணமா?? என்று சினந்துகொண்டு, நிலவானது அவனுக்கு இணையானதில்லை என்பதை உரைத்து,
தன் மகனின் உயர்வைக் கூறி அம்புலியைக் கண்ணனுடன் ஆட அழைக்கிறாள் அன்னை.



சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் -
ஏ வெண்ணிலவே! உன் முகத்தில் இருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்கள் இவ்வுலகம் முழுதும் பரந்திருந்தாலும்,

எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேரொவ்வாய் - தேய்வதும், வளர்வதும்; ஒரு நாள் முழுமையாய் இருப்பதும், பிரிதொரு நாளில் இல்லாமல் போவதும் போல் பல மாயங்கள் நீ புரிந்தாலும்... மாயக்கண்ணன், என் மழலைச் செல்வன், அடர் வண்ணனவன் முகத்திற்கு முன் நீ எல்லாம் எம்மாத்திரம்.

உன்னிடத்திருந்து சிதறுகின்ற இலட்சனக்கணக்கான குளிர்ந்த வெண்கதிர்களும் என் முகில் வண்ணன் முகத்தின் பொலிவிற்கும், தண்மைக்கும் சிறிதும் ஒப்பாகாது. அண்டம் விழுங்கியவன் தொண்டைக்குள்ளேயே அடங்கிய பொடியன் நீ!

வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற - ஞானத்தின் உருவானவன், வித்தகர்க்கெல்லாம் வித்தகன்; தென்கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு வடவெல்லையாக அமைகின்ற திரு வேங்கட மலை - கருவுற்ற கார்மேகங்கள் தழுவி நிற்கின்ற ஓங்கிஉயர்ந்த செம்மலை; எம் பாவங்களை எல்லாம் வெம்மித்து விடுகின்ற திருமலையில் வாழ்கின்றவன் உன்னை அன்புடன் அழைக்கின்றான்

(வித்தகன் - அறிஞன்; வேங்கடம் - திருவேங்கட மலை, திருப்பதி மலை; வாணன் - வாழ்பவன், வாழ் + நன்; விளி - அழை)

கைத்தலம் நோவாமே அம்புலி! கடிதோடிவா - சிறுபிள்ளை, எத்துனை நேரமாய் உன்னைக் காட்டி காட்டி, தன் பிஞ்சு கைகளை ஆட்டி ஆட்டி அழைப்பான்; அவனுக்குக் கைவலி வந்து விடும்முன் அம்புலியே, அழகு சந்திரனே விரைந்தோடி வருவாயாக

(கைத்தலம் - கை, கரம்; நோவாமே - துன்புறாமல், நோதல் - துன்புறுதல்; அம்புலி - சந்திரன்; கடிது - விரைந்து)

பதவுரை:

'ஏ வெண்ணிலவே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளியூட்டினாலும்; நீ வளர்வதும் தேய்வதும் போல் மாயங்கள் பல புரிந்தாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஒப்பாகாது. வித்தகர்க்கெல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான வேங்கடமலையில் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடிவந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்.

2 comments:

Radha said...

//உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே //
பிள்ளைத் தமிழ் மெய்யாலுமே அருமை.
வித்தகன் - வித்தைகள் புரிவதில் வல்லவன் ??
கைத்தலம் - உள்ளங்கை ??

தமிழ் said...

Radha said...

//உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே //
பிள்ளைத் தமிழ் மெய்யாலுமே அருமை.
வித்தகன் - வித்தைகள் புரிவதில் வல்லவன் ??//

வித்தைகளை அறியாமல் எப்படி அவற்றில் வல்லவனாக முடியும்... எல்லா வித்தைகளை அறிந்தவன் என்றும் சொல்லலாம். சரிதானே இராதா ஐயா. :-))

கைத்தலம் - உள்ளங்கை ??

ஆமாம், ஐயா. :-)