Monday, November 16, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை


பாடல் 6

தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்*
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்*
உண்டமுலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில்*
விண்தனில் மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.

பொருள்:


வெகு நேரமாகக் குட்டிக் கண்ணன் அழைத்துப் பார்த்தும், குழந்தையுடன் விளையாட அம்புலி வரவே இல்லை. நேரமும் நகர்ந்து கொண்டே இருக்கின்ற படியால், நிலவிடம், 'கண்ணன் தூங்க வேண்டும். அவன் தூங்குவதற்கு முன்னம் வந்துவிடு' என்று சந்திரனை விரைவுபடுத்துகிறாள்.

தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் - இந்த சிறு பிள்ளை, தன்னிடம் விளையாடுவதற்கு ஏதும் இல்லாதபடியால் உன்னை அழைக்கவில்லை; தன் வலிமையான பெரிய பிஞ்சு கைகளில் கௌமோதகி என்ற கதாயுதத்துடன்(கதையுடன்), உன்னினும் பொலிவான சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருக்கின்றான்.

கண்துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் - குட்டிக் கண்ணனுக்குத் தூக்கம் வருகின்றபடியால், அதற்கு அடையாளமாய் கொட்டாவி விடுகின்றான். இத்துனை நேரம் உன்னை அழைத்தும் நீ வரவில்லை வெள்ளி நிலவே! அவனும் உன்னை அழைத்து அழைத்துப் பார்த்துவிட்டு, அயர்ந்து போய்விட்டான். தூக்க மயக்கமும் அவனைத் தழுவிக் கொண்டது; நீயும் இன்னும் வாராமையால் மிகவும் வாட்டத்துடன் அவன் கொட்டாவி விடுவதைப் பார். (கொட்டாவி - தூக்க மயக்கம், பசி மயக்கம் போன்றவற்றால் வாய் வழியாக வெளியிடும் நெட்டுயிர்ப்பு)

உண்ட முலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில் - உறங்காவிடில் உண்ட முலைப்பால் அறா கண்டாய் -
சரியான நேரத்திற்கு அவன் உறங்காவிட்டால், அவன் உண்ட தாய்ப்பாலும் சரியாக செரிமானமாகாது, பாத்துக்கோ! (அறா - செரிமானம் ஆகாது; அறு - செரிமானமாதல், செரித்தல்)

விண்தனில் மன்னிய மாமதீ! விரைந்தோடிவா -
விண்ணிலே என்றும் நிலைபெற்றிருக்கின்ற முழுமதியே! என்மகன், கண்ணன் கண்ணுறக்கம் கொள்ளவேண்டும் விரைந்தோடிவா. (விண் - வானம்; மன்னிய - நிலைபெற்ற)

பதவுரை:


விண்ணிலே நிலைபெற்ற முழுமதியே! எத்துனை முறைதான் என் மகன் உன்னையேக் கூவி அழைத்துக் கொண்டிருப்பான். தன் வலிமையான பிஞ்சு கைகளில் கௌமோதகி என்கிற கதையுடன், சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருப்பவன், தூக்கமயக்கம் தழுவுவதால் உறங்குவதற்கு நிமித்தமாய் வாய்வழியே நெடுமூச்சு விடுகின்றான். இதோ பார் வெண்மதியே!அவன் சரியான நேரத்திற்கு, உறங்கினால் தான் அவன் நிறைவாய் உண்ட தாய்ப்பாலும் செரிமானமாகும். என் மகன், கண்ணுறக்கம் கொள்ளவேண்டும்; தாமதிக்காமல் விரைந்தோடிவா, வெண்ணிலவே!

4 comments:

Radha said...

முதல் படத்தை பார்த்து சார்ங்கம் எங்கே என்று வியந்து கொண்டு இருந்த பொழுது கீழே வில்லாளியாக மற்றொரு படம்.

குமரன் (Kumaran) said...

சில நூற்றாண்டுகளில் சொற்கள் எப்படி மாறுகின்றன பாருங்கள்? கொட்டாவி கொள்கின்றான் என்கிறார் பெரியாழ்வார். நாமோ கொட்டாவி விடுகின்றான் என்று இப்போது சொல்கிறோம். :-) அவன் கொட்டாவி கொண்டானா விட்டானா? :-)

தமிழ் said...

Radha said...

முதல் படத்தை பார்த்து சார்ங்கம் எங்கே என்று வியந்து கொண்டு இருந்த பொழுது கீழே வில்லாளியாக மற்றொரு படம்.//

இராதா ஐயா,

மற்ற ஆயுதங்களுடன் வில்லும் ஏந்தியவாறு இணையத்தில் கிடைக்கவில்லை. அதனால் தான் தனியாக இன்னொரு படம், சாரங்கபாணியாக! :-)

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

சில நூற்றாண்டுகளில் சொற்கள் எப்படி மாறுகின்றன பாருங்கள்? கொட்டாவி கொள்கின்றான் என்கிறார் பெரியாழ்வார். நாமோ கொட்டாவி விடுகின்றான் என்று இப்போது சொல்கிறோம். :-) அவன் கொட்டாவி கொண்டானா விட்டானா? :-)//

நீங்கள் சொல்வது சரியே!

நாற்றம் என்னும் சொல்லுக்கு இனிய மணம் என்று பொருள். ஆனால், நடைமுறையில் நாற்றம் அடிக்கிறது என்றால் துர்நாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். :-))

மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் குறையும் போது, கொட்டாவி வரும். இதில், காற்றை உள்ளிழுத்தல் வெளிவிடுதல் ஆகிய இரண்டு செயல்களும் நடைபெறும்.

ஆகவே, கொட்டாவி கொண்டாலும், விட்டாலும் ஒரே செயலைக் குறிப்பதாகவே நினைக்கிறேன்.

சரியா குமரன் ஐயா.

எனக்கு என்னமோ, நீங்களும் இரவிசங்கரைப் போல் தெரிந்து கொண்டே, விளையாட்டாகக் கேட்பது போல் தோன்றுகிறது. :-)