Monday, November 16, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 8

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்*
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.




பதவுரை:

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் - என் சிங்கக்குட்டியை சிறு குழந்தை தானே, இப்பொடியனால் என்ன செய்து விட முடியும் என்று சிறுமையாய் எண்ணிவிடாதே

சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள் - சிறுமையின் வார்த்தைக்கு முழுமையான விளக்கத்தை மாவலி (மகாபலி)ச் சக்கரவர்த்தியிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்.

சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் - சிறுமதி கொண்ட முழுமதியே! இவனை சிறுவனாக எண்ணி, அவமதித்து, அழிந்துவிடாதே! இப்பிள்ளை மட்டும், விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவாய். ஆகையால், என் பாலகனுடன் வந்து விளையாடி, நற்பலன் பெற்றுக் கொள்வாயாக.

நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் - முழுநிலவே! என் நெடுமால் வேகமாய், பலமுறை உன்னைக் கூவி அழைக்கின்றான். விரைந்து வருவாயாக!

பதவுரை:


முழுநிலவே! என் மகன், நெடுமால், உற்சாகத்துடன் வேகமாக, பலமுறைக் கூவி அழைக்கின்றான். சிறுமதி கொண்ட முழுமதியே! தோற்றத்தில், சிறிய பாலகனாக இருக்கிறானென்று என் சிங்கக் குட்டியை சிறுமையாய் எண்ணிவிடாதே. இச்சிறுமையின் வலிமையை மாவலிச் சக்கரவர்த்தியிடம் சென்று கேட்டுப்பார், தெரியும். இச்சிறு பிள்ளை மட்டும் விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ இருக்கும் இடம் தெரியாது போய்விடுவாய். சமரசமாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து, என் பாலகனுடன் விளையாடி நற்பலன் பெற்றுக் கொள்வாயாக! விரைந்து நெடுமாலிடம் வருவாயாக, வெண்ணிலவே!

7 comments:

Radha said...

//நீயும் உன் தேவைக்குரியை காண் //
இன்னும் கொஞ்சம் விளக்கம், ப்ளீஸ்.

தமிழ் said...

Radha said...

//நீயும் உன் தேவைக்குரியை காண் //
இன்னும் கொஞ்சம் விளக்கம், ப்ளீஸ்.//

இன்னும் கொஞ்சமாஆஆ...

அதாவது, கண்ணனைப் பகைத்துக் கொள்ளாதே! அவனுடன் நட்பாக பழகினால், உனக்கு அவன் வேண்டியதை எல்லாம் தருவான்! அதனால், இப்பொழுது இங்கு வந்து என் மகனுடன் விளையாடி உனக்கு வேண்டியவைகளைப் பெற்றுக் கொள் என்று பொருள்.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் - வாவ். எத்தனை ஆழமான மிரட்டல்!

Radha said...

ஆகா ! இப்பொழுது நன்றாக புரிகிறது. நான் நிறைய பாசுரங்களை அப்படியே டப்பா தட்டி வைத்துள்ளேன், பொருள் ஒன்றும் புரியாமல். :)

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் - வாவ். எத்தனை ஆழமான மிரட்டல்!//

வாங்க குமரன் ஐயா! அன்பு எப்போதுமே ரொம்ப ஆழமானது... :-))

தமிழ் said...

Radha said...

ஆகா ! இப்பொழுது நன்றாக புரிகிறது. நான் நிறைய பாசுரங்களை அப்படியே டப்பா தட்டி வைத்துள்ளேன், பொருள் ஒன்றும் புரியாமல். :)//

வருகைக்கு நன்றி இராதா ஐயா!

ஒரு சின்ன கேள்வி! நீங்கள் சிறு வயதிலேயே பாசுரங்கள் முழுவதையும் மனனம் செய்து விட்டீர்களா?? அல்லது பாசுரங்களின் அறிமுகம் தங்களுக்கு எப்பொழுது கிடைத்தது?