Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 9
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர*
கோலநறும் பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளி முளைப்போல் சிலபல்லிலக*

நீலநிறத் தழகா ரைம்படையின் நடுவே
நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ*

ஏலுமறைப் பொருளே! ஆடுக
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.
பதவுரை:

பாலொடு நெய்தயிர் - வேதநாயகனே! நீ உண்ட பால், தயிர், நெய் கலந்த அன்னம் எல்லாம் அவற்றின் நறுமணத்தை உன் தேகத்தின் மேல் விட்டுவிட்டு வயிற்றினுள் சென்றன. அந்த நறுமணம் எங்கும் பரவி வர...

செண்பகமலர்:

ஒண்சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர -
நீலமணிவண்ணத் தேகத்துக்கு எடுப்பாக அமைந்த, குழைவாய் அரைத்து உன் மேனியில் பூசிய சந்தனம் கமகமக்க, மணக்கும் செண்பகமலரும், மாதவனைப் பார்த்து சிரிக்கும் செந்தாமரை மலரும், நல்ல மணத்துடன், மருத்துவக்குணமும் நிறைந்த பச்சைக் கற்பூரமும் உன் மேனியில் ஒய்யாரமாய் படர்ந்து மணம் வீச...

பச்சைக்கற்பூர பழம்:


(ஒண் -பொருந்துதல்; சாந்து - சந்தனம்; சண்பகம் - செண்பக மலர்; பங்கயம் - தாமரை மலர்; கருப்பூரம் - பச்சைக் கற்பூரம்; நாறி வர - இனியமணம் வீசி வர)

பச்சைக்கற்பூரம்:( செடியும், மலரும்)








கோலநறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளைப்போல் சிலபல்லிலக -
வடிவான, இனிய மணங்கமழும் உன் செம்பவள வாயினுள்ளே, அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம், வெள்ளி முளைத்ததைப் போன்று அமைந்த பால்பற்கள் கண்ணைப் பறிக்க...

நீலநிறத் தழகா ரைம்படையின் நடுவே நின்கனி வாயமுதம் இற்று முறிந்துவிழ - நீலமணிவண்ணனே! நீ சிரிக்கும் பொழுது சிந்தும் உன் வாயமுதத்தில் நனைந்து முக்தி பெற்ற ஐம்படைத்தாலியின் நடுவே உன் முகம் பூத்திருக்க... காக்கும் கடவுளுக்கே காப்பா...?? - ஐம்படைத்தாலி! (ஐம்படை - வில், வாள், தண்டு, சங்கு, சக்கரம் ஆகிய பஞ்சாயுதங்களையும் சிறு சிறு வடிவமாக பொன்னிலோ, வெள்ளியிலோ செய்து குழந்தைகளின் கழுத்தில் அணிவிப்பர் - ஐம்படை குழந்தைக்குக் காப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.)

ஏலுமறைப் பொருளே! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே -
வேதங்களுக்குள் பொருந்திய பொருளானவனே! ஏழுலகும் ஆள்பவனே செங்கீரை ஆடுவாயாக!(ஏலும் - பொருந்துதல்)

பொழிப்புரை:

வேதத்தின் வித்தானவனே! விளங்கும் பரம்பொருளே! உன் திருமேனி மேல், நீ உண்ட பாலும் தயிரும் நெய்யும் ஆகியவற்றின் சுகந்தமணம் வீசிவர, அரைத்த சந்தனமும், மணக்கும் செண்பக மலரும், அழகிய செந்தாமரையுடன் நல்ல பச்சைக்கற்பூரமும் உன் மேனியில் படர்ந்து மணம் பரப்ப, வடிவான செம்பவள வாயினுள் வெள்ளி முளைத்ததைப் போன்று விளங்கும் பால்வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம், உன் இதழில் புன்னகை தவழ, உன் வாயமுதத்தில் நனைந்து நனைந்து வீடுபெறு கொள்ளும் திருமார்பில் தவழ்ந்தாடும் ஐம்படையின் நடுவே பூத்திருக்கும் உன் பூமுகம் காற்றிலாட, அதைக் கண்டு என் மனமாட நீலமணிவண்ணனே செங்கீரை ஆடுவாயாக! ஏழுலகும் ஆள்பவனே, அன்னைக்கொரு முறை செங்கீரை ஆடிக்காட்டி அருள்வாயாக!

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர்! செண்பகப் பூ எனக்கு ரொம்ப பிடிக்கும்! :)
மணம் அதிகம்! விலை அதிகம்! முழமாகத் தராமல் எண்ணித் தருவார்கள் இத்தினி பூ-ன்னு!

இப்படிப் பூ/செடி படங்களை இட்டுப் பதிவு எழுதுவது, பின்னாளைய தலைமுறைக்கு, இந்தப் பூக்களை எல்லாம் பார்க்க முடியாதவர்களுக்கு, லயிக்க ஏதுவாய் இருக்கும்!

//ஏலுமறைப் பொருளே!// - ஏலு மறையா? அப்படீன்னா?

நாடி நாடி நரசிங்கா! said...

அழகான படங்கள், அழகான விளக்கம் ,

நாடி நாடி நரசிங்கா! said...

One doubt:-
முக்தி என்ற வரி பாசுரத்தில் எதை குறிக்கிறது :)

தமிழ் said...

நன்றி கேயாரெஸ்!

ஏலு மறைப் பொருளே ன்னா - வேதங்களின் சாரமாய்ப் பொருந்தியிருப்பவனே; வேதத்தின் உட்பொருளாய் இருப்பவனே ன்னு அர்த்தம்.

தமிழ் said...

@ நரசிம்மரின் நாலாயிரம்:

நன்றி!

முக்தி என்னும் சொல் பாடலில் மேலோட்டமானதாக வரவில்லை. வாயமுதம் என்னும் சொல்தான் பாடலில் வந்துள்ளது.

அமிழ்தம் என்பது சாவா வரம் தரவல்லது. இறைவன் வாயிலிருந்து வரக்கூடியது, சாகா வரத்தை மட்டுமல்ல அதன்பால் தொடர்புடைய அனைவருக்கும் முக்தியையும் தரவல்லது. அதனால் அப்படி சொன்னேன். தப்பா?? :-)

நாடி நாடி நரசிங்கா! said...

உன் வாயமுதத்தில் நனைந்து முக்தி பெற்ற ஐம்படைத்தாலியின் நடுவே உன் முகம் பூத்திருக்க:)

இல்லை :)

நீங்கள் கொடுத்த விளக்கம் உள்ளம் கவர்ந்தது (Realy Heart Touch line)
பாசுரத்தில் எங்கே ஒளிச்சி வச்சிருக்கர்னு தெரில பெரியாழ்வார் . :)

Now iam understand.. thanks :)

குமரன் (Kumaran) said...

அனுபவித்து எழுதிய விளக்கங்கள். அருமை.

தமிழ் said...

@ நரசிம்மரின் நாலாயிரம்...

மிக்க நன்றி!

@ குமரன்...

மிக்க நன்றி!