Sunday, September 6, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 14

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 14

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு*
அந்தொண்டை வாயமு தாதரித்து* ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப்பருகும்* இச்
செந்தொண்டை வாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு - என் தொண்டைவாய்ச்சிங்கம் வா! என்று எடுத்துக் கொண்டு - என் தங்கம், என் செல்லம், என் பட்ட்டுக் குட்டி ... என்றெல்லாம் குழந்தையைக் கொஞ்சி அழைப்பதுபோல், கோவை (கொவ்வை)ப் பழம் போல் செக்கச் செவேறென்று சிவந்துள்ள வாயினையுடைய என் சிங்கமே, இங்கேவா, அன்புகூர்ந்து அழைக்கும் என்னிடம் வாடா என்று அழைத்து, அவன் வந்ததும், தன்இருகைகளாலும் வாரி எடுத்துக் கொண்டு (தொண்டை - கோவைப்பழம் )

அந்தொண்டை வாயமுது ஆதரித்து - மிகுந்த அன்போடு அவன் வாயோடு முத்தம் வைத்து, அவன் செவ்விதழில் ததும்புகின்ற தேனை, விருப்பத்துடன் சுவைத்து (ஆதரி - மிகுந்த அன்பு)

ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் - அவன் செவ்வாயில் ஊறுகின்ற தேனமுதினை, ஆய்ச்சியர்கள், தங்கள் இதழ்களால் முத்தமிடும் வேளையில் அப்பிள்ளையின், திருவாய் அமுதினையும் செருக்குடன் பருகும் (தருக்கு - செருக்கு)

இச்செந்தொண்டை வாய் வந்து காணீரே சேயிழையீர்! வந்து காணீரே - ஆய்ச்சியர், இந்த சிறுபிள்ளையின் வாயமுதினைக் கிடைக்காத அமுதம் தங்களுக்கு கிடைத்தவிட்ட செருக்குடன் பருகுவர். அத்தகைய தித்திக்கும் தேனமுது தத்தளிக்கும், கொவ்வைப் பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள். செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே வந்து பாருங்கள். (சேயிழையீர் - செவ்விய அணிகலன் அணிந்திருப்பவர்கள்; இழை - புன்னகை)

பதவுரை:

''கொவ்வைப் பழம் போல் சிவந்த நிறமுடைய என் சிங்கமே'', என்னிடம் வாடா என்று அழைத்து, அவனை அள்ளி அணைத்துக் கொண்டு, ஆய்ச்சியர் மிகுந்த அன்போடு தங்கள் இதழ்களால் முத்தமிட்டு, கிடைக்காத அரிய செல்வம் கிடைத்துவிட்ட செருக்குடன் அவனின் திருவாயமுதினை விரும்பி சுவைப்பர். அத்தகைய தித்திக்கும் தேனமுது தத்தளிக்கும், கொவ்வைப் பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள். செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே வந்து பாருங்கள்.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தொண்டை கிழியப் பேசுறது-ன்னு சொல்வாய்ங்க! தெரியும்!
இங்கே ஆழ்வார் தொண்டை தொண்டை-ன்னு பாசுரம் ஃபுல்லா அடுக்கிட்டாரு! :)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தொண்டை கிழியப் பேசுறது-ன்னு சொல்வாய்ங்க! தெரியும்!
இங்கே ஆழ்வார் தொண்டை தொண்டை-ன்னு பாசுரம் ஃபுல்லா அடுக்கிட்டாரு! :)//

அருணகிரிநாதரோட தகரவரிசைப் பாடலைவிடவா...

அந்த பாட்டை மனப்பாடம் பண்ணவே எனக்கு அரைநாள் ஆச்சுது...