Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 7

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை*
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடுபரமன்தன்*
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும்*
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர்! வந்துகாணீரே.

பொருள்:

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனை - நீண்ட, கரிய துதிக்கையையுடைய மதங்கொண்ட யானையையும், அதைக் கட்டுபடுத்தி செலுத்தும் பாகனையும் (இரு - கரிய; கை - யானையின் தும்பிக்கை; களிறு - யானை, ஆண்யானை; ஈர்க்கின்றவனை - இழுப்பவனை, கட்டுப்படுத்துபவனை)

பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடுபரமன்தன் - பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன் - அவர்களைக் கொன்று யானையின் தந்தங்களைப் பறித்துக் கொண்டு ஓடிய பரம்பொருளின் (பருங்கி - கொன்று ~ பருங்குதல் - கொல்லுதல்; )

கதைச்சுருக்கம்:

கம்சன், கோகுலத்திலிருந்த கண்ணனை தந்திரமாக மதுரா நகருக்கு, கம்சனின் தனுர் யாகத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்து, கண்ணனை மதுரையிலேயேக் கொன்றுவிட எண்ணினான்.

கண்ணனும் ஆயர்பாடி மக்களை ஆற்றுபடுத்திவிட்டு, வடமதுரை மாநகருக்கு வந்தான். அங்கே, கம்சனின் அரண்மனைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த, குவலயாபீடம் என்னும் பட்டத்து யானையினை வம்புக்கிழுத்து, அதை சினங்கொள்ளச் செய்து, யானையையும், யானைப் பாகனையும் கொன்றுவிட்டு, யானையின் தந்தங்களைப் பறித்துக் கொண்டு கம்சனை நோக்கி விரைந்தோடினான்.

அதன் பிறகு, சாணூரன், முஷ்டிகன் ஆகிய இரண்டு மல்லர்களையும் கொன்றுவிட்டு, கம்சனையும் வதம் செய்துவிட்டு தன் பெற்றோர்களை சிறைமீட்டான் கண்ணன்.

நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும் - பவளமும் முத்தும் நெருக்கமாய் கோர்க்கப்பட்ட நீண்ட அழகிய அரைஞான் கயிறும் (நேர் நாண் - அரைஞான்கயிறு)

மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர்! வந்து காணீரே - முத்தும் பவளமும் நெருக்கமாய்க் கோர்க்கப்பட்ட அழகிய அரைஞான் கயிறும், இப்பிள்ளையின் இடையில் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள்! பவளமும், முத்தும், பொன் மருங்கும் ஒருங்கு இருக்கும் அழகினையும், அவற்றில் எது சிறப்பாய் பொலிகிறதென்பதனையும் வந்து பாருங்கள். ஒளி பொருந்திய நெற்றியினையுடைய பெண்களே இந்த பரமனின் பவளக்கொடி அணிந்த இடையினை வந்து பாருங்கள்! (மருங்கு - இடை; வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்கள்)

பதவுரை:

நீண்ட, கரிய, பெரிய மதங்கொண்ட குவலயாபீடம் என்னும் கம்சனின் பட்டத்து யானையையும், யானைப் பாகனையும் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்துக் கொண்டு கம்சனை நோக்கி விரைந்தோடிய பரம்பொருளான கண்ணனின், பவளமும் முத்தும் நெருங்கக் கோர்த்த அரைஞாண்கயிறு மின்னுகின்ற அவனின் அழகிய இடையினை வந்து பாருங்கள். ஒளிபொருந்திய நெற்றியினையுடைய பெண்களே, பவளமும் முத்தும் நெருங்கக் கோர்த்து அணிந்திருக்கும் பொன்னிடையில் மின்னுவதனைத்தும் வந்து பாருங்கள்.

6 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்ன இது அக்குறும்பா இருக்குதே! ஆறாம் பதிவைப் படிச்சி, பின்னூட்டம் இட்டு முடிச்சா, Refresh ஆகி ஏழாம் பதிவு வந்து நிக்குது! :)

அடப் பாவிங்களா!
ஆசு கவி தெரியும்! ஆசு பதிவு இன்னிக்கி தான் பாக்குறேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்கள்//

வாள் + நுதல் = வாணுதல்
ல, ள மெலி மேவின் ன ண-வும்! :)

வாளைப் போல் ஒயிலாக வளைந்த நெற்றியை உடைய பெண்கள் :)
அதுவும் நடு வகிடு எடுத்து, நல்லாத் தூக்கித் தலை சீவினா, அப்போ இந்த வாள் நெற்றி ரொம்ப நல்லா இருக்கும்! அகலமாவும் இருக்கும்! அன்பு மழை பொழிய வசதியாவும் இருக்கும்! :)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்ன இது அக்குறும்பா இருக்குதே! ஆறாம் பதிவைப் படிச்சி, பின்னூட்டம் இட்டு முடிச்சா, Refresh ஆகி ஏழாம் பதிவு வந்து நிக்குது! :)

அடப் பாவிங்களா!
ஆசு கவி தெரியும்! ஆசு பதிவு இன்னிக்கி தான் பாக்குறேன்! :)//

நீங்க பாராட்டுறீங்களா?? கிண்டல் பண்றீங்களா??

ஆசு பதிவுன்னா அவங்களே எழுதறதா இருக்கணும்; நாங்களே ஆழ்வார்கள் எழுதினத copy tiger அடிச்சுட்டு இருக்கோம் .... ;-))

அதிகப்பட்சம் மூணு ஆண்டுக்குள்ளயாவது முடிக்கனும் ங்கற ஒரு எதிர்பார்ப்பினாலத்தான்...

அதுக்காக, அவசர அவசரமா பிழைகளோட எழுத விரும்பல... அதான் பின்னூட்டங்களுக்குப் பதிலளித்துவிட்டே பதிவுகள் போடப்படுகின்றன...

இதுக்கெல்லாம், உங்களுக்கும், உங்களைப் போன்று வலைப்பூவுக்கு வருகைத்தரும் மற்ற வாசகர்களுக்கும், இறைவனுக்கும் தான் எங்கள் நன்றிகள்!!

மேலும் பணித் தொடர இறைவனை இறைஞ்சுவோம்!!

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வாணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்கள்//

வாள் + நுதல் = வாணுதல்
ல, ள மெலி மேவின் ன ண-வும்! :)

வாளைப் போல் ஒயிலாக வளைந்த நெற்றியை உடைய பெண்கள் :)
அதுவும் நடு வகிடு எடுத்து, நல்லாத் தூக்கித் தலை சீவினா, அப்போ இந்த வாள் நெற்றி ரொம்ப நல்லா இருக்கும்! அகலமாவும் இருக்கும்! அன்பு மழை பொழிய வசதியாவும் இருக்கும்! :)//

வாள் என்னும் சொல் கத்தியைக் குறிக்கும் இது வழக்கு.

ஆனால் தொல்காப்பியர், உரியியல் ல்ல, வாள் ன்னா ஒளி ன்னு பொருள் சொல்றாரு. வாள் என்பது ஒளி என்னும் பொருளைத் தரக் கூடிய ஒரு உரிச்சொல்.

'மழவும் குழவும் இளமைப் பொருள்' 14 ம் பாடல்...

'வாள் ஒளி ஆகும்' 69 ம் பாடல் உரியியல் ...

குமரன் (Kumaran) said...

அந்தக் காலத்துல இருந்து (2005ல இருந்து) நானும் வாணுதல்ன்னா ஒளி பொருந்திய நெற்றின்னு தான் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கேன். இராகவனும் (இப்ப இரவிசங்கரும்) அது வாள் போன்ற நெற்றின்னு தான் பொருள்ன்னு சொல்லிக்கிட்டுத் தான் இருக்காங்க. :-)

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

அந்தக் காலத்துல இருந்து (2005ல இருந்து) நானும் வாணுதல்ன்னா ஒளி பொருந்திய நெற்றின்னு தான் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கேன். இராகவனும் (இப்ப இரவிசங்கரும்) அது வாள் போன்ற நெற்றின்னு தான் பொருள்ன்னு சொல்லிக்கிட்டுத் தான் இருக்காங்க. :-)


தொல்காப்பியர் சொன்னதைத்தான் நான் தரவாகத் தந்துள்ளேன்.

மற்றபடி, இந்த ச்ச்ச்சின்னப்பையனுக்கு உலகம் அவ்வளவாகத் தெரியாததால, உங்ககிட்டயே ஒப்படைகிறேன்.

விவாதிப்போம்! விடைகாண்போம்!

கூப்பிடுங்க இரவியவும், இராகவனையும்...

குமரன், நீங்க நம்ப கட்சி...

ஆர்வலர்களும் வந்து விவாஜிக்கலாம்...

நிறைய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் புழக்கத்தில் கொண்டுவருவதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த வலைப்பூ!!