Thursday, September 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 18

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 18

மண்ணும்மலையும் கடலும் உலகேழும்*
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு*
வண்ணமெழில்கொள் மகரக் குழையிவை*
திண்ணம் இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

மண்ணும் மலையும் கடலும் உலகேழும் - புவியின் நிலமும், பெரிய பெரிய மலைகளும், பெருங்கடலும், ஏழு உலகங்களும்... பூமியிலுள்ள மலைகள், பெருங்கடல்கள் கொண்ட பூமியோடு சேர்த்து ஏழு உலகங்களையும்

உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு - பூமியோடு சேர்த்து ஏழு உலகங்களையும், வெண்ணெய் உண்பது போல் எளிமையாக, அவற்றை விரும்பி உண்ணக்கூடிய இந்த குழந்தைக்கு

வண்ணமெழில்கொள் மகரக் குழை இவை - பொன்வண்ண ஒளி எங்கும் சிதறுகின்ற அழகுடைய மீன்வடிவ குண்டலங்களான இவை ஒவ்வொன்றும் (மகரம் - மீன், சுறாமீன்; குழை - குண்டலம்) {கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர்!}

திண்ணம் இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே - அவன் காதுகளுக்கு எத்துனைப் பொருத்தமாய், குண்டலங்களால் காதுக்கழகா? காதால் குண்டலங்களுக்கு அழகா? என்று ஆராயத்தக்க வண்ணம் ஒன்றுக்கொன்று பொருத்தமாய் அமைந்திருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். செம்மையான அணிகலன் பூண்ட பெண்களே வந்து பாருங்கள்.

பதவுரை:

மண்ணும், மலையும், பெருங்கடல்களும் நிறைந்திருக்கின்ற இந்த பூவுலகத்தோடு சேர்த்து ஏழு உலகங்களையும், வெண்ணெய் உண்பது போல் எளிதாய், இலகுவாய் விரும்பி உண்ணக்கூடிய இந்த பிள்ளைக்கு, பொன்னொளி சிதறித்தெறிக்கின்ற மீன்வடிவ குண்டலங்கள் ஒவ்வொன்றும் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள். செவ்விய அணிகலன் அணிந்துள்ள பெண்களே, இங்கே வந்து, இந்தபிள்ளையின் காதுகளுக்குப் பொருத்தமாய் அமைந்திருக்கின்ற இந்த மகரக் குண்டலங்களின் அழகினை வந்து பாருங்கள்.

3 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ரொம்ப நாளாக் கேக்கணும்-ன்னு நினைச்சேன்! அது என்ன மகர மீன்? ஏன் மகரக் குழை? மகர குண்டலங்கள்?-ன்னு சொல்கிறார்கள்? மீனைப் போல காதுல கம்மலா? அது மாதிரி கம்மலை நானும் எந்தப் பொண்ணு கிட்டயும் பார்த்ததில்லை! :))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ரொம்ப நாளாக் கேக்கணும்-ன்னு நினைச்சேன்! அது என்ன மகர மீன்? ஏன் மகரக் குழை? மகர குண்டலங்கள்?-ன்னு சொல்கிறார்கள்? மீனைப் போல காதுல கம்மலா? அது மாதிரி கம்மலை நானும் எந்தப் பொண்ணு கிட்டயும் பார்த்ததில்லை! :))//

பெண்டுகள் போட்டிருக்கின்றனரா என்று எனக்கும் தெரியவில்லை... ;-)) ஆனா, அந்த டிசைன் ல்ல சின்னதா இருக்கலாம்...

இப்பலாம் கட்டம் கட்டமா, வட்டம் வட்டமா பிளாஸ்டிக் ல்லதானே போட்டுட்டு சுத்துதுகள்... நான் என் தங்கமணிய சொல்லலனு சொன்னா நம்பனும்... ;-))

சரி கதைக்கு வருவோம்....

ஒருதடா, பூதேவி அம்மணிக்கூட பெருமாள் இருந்தாராம். அதனால சீதேவி அம்மணி கவலைப்பட்டு துர்வாச முனிவர்ட்ட போயி கண் கலங்கி கவலைப்பட்டு நின்னாளாம்.

சரிம்மா, இத நான் டீல் பண்ணிக்கிறேன்னு அவரும் பெருமாள்ட்ட போகச் சொல்லோ...

அங்கன இருந்த பூதேவி அம்மணி முனிவர கண்டுகிடலயாம்.


இதனால கோவப்பட்ட துர்வாசர், பூதேவி அம்மணிய சீதேவி அம்மணியாட்டம் உருமாறிவிடுவதற்கு சாபம் தந்துட்டாராம்.


அய்யய்யோ! தப்பு பண்ணிட்டோமே ன்னு வருத்தப்பட்ட பூதேவி அம்மணி, தான் மறுபடியும் பழைய உருவத்தை அடைவதற்கு உபாயம் கேட்டாங்களாம்...

சரின்னு துர்வாசரும் அவங்கள மன்னிச்சு, சாபத்துக்கு விமோசனம் சொன்னாராம்.

அவர் சொன்ன மாதிரியே, அஷ்டாட்சர மந்திரத்தைச் சொல்லிகிட்டே, பங்குனி மாதம், பவுர்ணமி அன்னிக்கு, தாமிரபரணி ஆத்துக்குள்ள மூழ்கி எழுந்ததும் அவங்களுக்கு பழைய உருவம் கிடைத்து, இயல்பான பூதேவி அன்னையா மாறுனாங்களாம்.

அவங்க அந்த மாதிரி மூழ்கி எழுந்திரிக்கும் போது, அவங்க கையில இரண்டு மகரமீன் வடிவக் குண்டலங்கள் மாட்டுச்சாம்.

அத உடனே கொண்டு போய், அவங்க கண் கொண்ட கண்ணாளன், மனங் கொண்ட மணாளன் கிட்ட கொடுத்தாங்களாம்.

அவரும் அத ஆசையா வாங்கிப் போட்டுட்டாங்களாம்...

மகரக்குண்டலம், மாதவனோட 'காதல்பரிசு' -- அதனால கிண்டல் பண்ணப்படாது... ;-))

குமரன் (Kumaran) said...

மகரநெடுங்குழைக்காதன் கதையை நல்லா சொல்லியிருக்கீங்க. :-)