பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை
பாடல் 7
பாலகனென்று பரிபவம் செய்யேல்* பண்டொருநாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்*
மேலேழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்*
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
பொருள்:
பாலகனென்று பரிபவம் செய்யேல் - தாய்ப்பாலைக் கூட சீரணிக்க இயலாத சிறு பாலகனென்று இப்பிள்ளையை நீ இழிவாய் எண்ணிவிடாதே. (பரிபவம் - இழிவு, எளிமை)
பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் - இவன் யாரென்று தெரியுமா?? முன்னொரு காலத்தில், மகாப் பிரளயம் வந்தபோது, அண்டசராசங்களனைத்தையும் தன் வயிற்றினுள் வைத்துக் காத்துக் கொண்டு, ஊழிப் பெருவெள்ளத்தில், தன் பாதவிரலை சூப்பிய வண்ணம் ஆலிலைமேல் பால முகுந்தனாக மிதந்துவந்த அந்த சிறுபிள்ளையை நீ அறிவையோ?? அந்த பாலகன் தான் இவன், தெரிந்துகொள் வெண்ணிலவே! (பண்டு - பழைமை; முற்காலம்; சிறுக்கன் - சிறுபிள்ளை, சிறுக்கி என்ற பெண்பாலுக்கெதிரான ஆண்பால்)
மேலேழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் - இந்த சிறுக்கனுக்குக் கோபம் வந்துவிட்டால், ஒரே பாய்ச்சலில் உன்னை எட்டிப் பறித்து, எங்கும் நகரவிடாமல் கெட்டியாகப் பிடித்துத் தன்னிடமே வைத்துக் கொள்வான். (வெகுளுமேல் - கோபம் கொண்டால்)
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா - உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடிக்கக்கூடிய வல்லமையுடைய திருமாலை, அவமதிக்காமல், மகிழ்ச்சியுடன் அவனோட விளையாட ஓடிவருவாயாக.
பதவுரை:
பௌர்ணமி நாளில் பூத்திருக்கின்ற பூரண நிலவே! என்மகனை சிறிய மழலைதானே என்று எளிமையாய் எண்ணிவிடாதே. முன்னொரு காலத்தில், ஊழிப் பிரளயத்தின் போது, அண்டங்களனைத்தையும் தன் வயிற்றினுள் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, பங்கயப் பாதவிரலை பவள இதழால் சுவைத்துக்கொண்டே பிரளய நீரில் ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் இவன். இவனுக்குக் கோபம் வந்துவிட்டால், உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பறித்து, எங்கும் அசையவிடாமல் பிடித்துக் கொள்வான். அதற்காக நீ அச்சம் கொள்ளவும் தேவையில்லை; என்மகன் உன்னுடன் அன்பாக விளையாடுவான் அதனால் விரைந்தோடிவா வெண்மதியே!
3 comments:
ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் என் கண்ணன்.:::)))
ஆலிலைமேல் என்றால் ஆதிசேஷன்! சரியா தமிழ்
srikamalakkanniamman said...
ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் என் கண்ணன்.:::)))
ஆலிலைமேல் என்றால் ஆதிசேஷன்! சரியா தமிழ்//
மிகவும் சரி, கமலக்கண்ணியம்மன் அவர்களே!
திருவனந்தாழ்வான் இல்லாமல், திருமால் அவதாரம் புரிவதா... ஆலிலையாக இறைவனுடன் மிதந்து வந்தது ஆதிசேஷன் தான் ...
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.
அரவு - திருவனந்தாழ்வான்
மாலைமதியாதே என்றால் என்ன பொருள்? காலம் தாழ்த்தாதே என்பதா?
Post a Comment