பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 2
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 2
கோளரியின் னுருவங் கொண்டுஅவுண னுடலம்
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்
கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மைக் கொளக்கருதி
மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர*
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக்
கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
பொருள்:
இப்பாடலில் பெரியாழ்வார், மகாவிஷ்ணுவின் இரண்டு திருவிளையாடல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று, இரணியவதம். மற்றொன்று, குன்றமேந்தி, கல்மழைத் தடுத்தமையும் பற்றிக் கூறியுள்ளார்.
கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் - நரசிம்ம அவதாரத்தில், வலிமை மிகுந்த ஆண் சிங்கத்தினைப் போல் திருவவதாரம் எடுத்து, அசுரனான இரணியனின் உடலில் உள்ள இரத்தம் பொங்கி பொங்கி வெளியில் வருமளவுக்கு, உன் கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக் கிழித்தெடுத்தாய், (கோள் - வலிமை; அரி - ஆண்சிங்கம்; அவுணன் - அசுரன் ~ இரணியன்; உடலம் - உடல்; குருதி - இரத்தம்; குழம்பி - நிலைகுலைதல்; உகிர் - நகம்)
மீள அவன் மகனை மெய்ம்மைக் கொளக் கருதி - இரணியனின் மகனான, பிரகலாதன் கூறிய வார்த்தைகளை மெய்ப்பித்து, இரணியனிடமிருந்து பிரகலாதனைக் காப்பதற்காக நீ இந்த திருவவதாரம் புரிந்தாய். (மீள - தப்பித்தல், தப்பிக்க)
மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர - வானுலகத்திலுள்ள தேவர்களின் தலைவனான, இந்திரன் மிகுந்த கோபங்கொண்டு
இந்த சிறுகதையை முன்னமே, ''மத்தமாமலை தாங்கிய மைந்தன்'' 1-1-8 ம் பாடலில் பார்த்திருக்கிறோம். இந்திரனை சிறப்பிப்பதற்காக, ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரவிழா எடுப்பது வழக்கம். சிறுவன் கண்ணனோ, ஆநிரைகளுக்கும், ஆயர்களுக்கும் தேவையானவற்றை கோவர்த்தன மலைத்தான் தந்து அவர்களை வாழ்விக்கிறது. எனவே, இந்திரனுக்கு விழா எடுப்பதை விட்டு, கோவர்த்தன மலையைக் கொண்டாடுமாறு கூறினான். மக்களும் கோபலன் கூறியதைப் போல் செய்யவே, இந்திரனுக்கோ, கடுஞ்சினம் வந்தது. வந்து... (மேலை - வானுலகம்; அமரர் - தேவர்; பதி - தலைவன்; வெகுண்டு - சினந்து)
காளநன்மேகம் அவை கல்லொடு கால் பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே - பூமிக்கு மழையைத் தந்து வாழ்விப்பது, கருமேகந்தான். அதனால்தான் காள நன்மேகம் ன்னு அடைமொழியோட சொல்லியிருக்கார் ஆழ்வார். சில்லென்று மழைச்சாரல் சிந்தினால் நல்லாருக்கும்.... கல்லாய் பொழிந்தால்?? இப்ப என்ன செய்வது, எங்கே சென்று ஒண்டுவது? கடவுளே! என்று கோபாலக் கண்ணனிடம் அண்டுவதே சரியென்று ஆநிரைகளொடு, ஆயர்களும், அவன்பால் தஞ்சம் புகுந்தனர். கண்ணனோ, சுடர்வெண் ஆழி சுழன்று கொண்டிருந்த விரலில், கோவர்த்தன மலையைத் தாங்கிநின்று, அனைவரையும் காப்பாற்றினான். (காளமேகம் - கார்மேகம், காளம் - கருமை; கால் - காற்றுமழை; வரை - மலை; காலிகள் - பசுக்கள்)
ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை; ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே - அன்று நரசிங்கனாய் வந்து, பிரகலாதனைக் காத்தவனே! கோவர்த்தனக் குடை கொண்டு, ஆயர்களைக் காத்த எங்கள் குலத் தலைவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த, போர் செய்ய வல்லமை கொண்ட காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுவாயாக!
பதவுரை:
உன் பக்தனும், இரணியனின் மைந்தனுமான பிரகலாதனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கவும், அவனை இரணியனிடமிருந்து மீட்கவும், வலிமையான ஆண் சிங்கத்தின் உருவமெடுத்துவந்து, தன் கூரிய நகங்களாலேயே, இரத்தம் பொங்கி எழுமளவுக்கு அசுரனான இரணியனின் உடலைக் கிழித்தாய்! விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களின் தலைவனான இந்திரன் மிகுந்த சினங்கொண்டு பொழிந்த கல்மழையிலிருந்து, ஆநிரைகளையும், ஆயர்களையும் காப்பதற்காக கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தவனே! என் தலைவனே! உன் அன்னைக்கு ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக. ஆயர்கள் குலத்திலுதித்த வலிமைமிக்க காளையைப் போன்றவனே செங்கீரை ஆடுக, ஆடுகவே.
5 comments:
அருமை!
பாசுரங்களை, படித்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பிரித்து எழுதினால் நன்றாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து!
நன்றிகள்! எப்படி இருக்க வேண்டுமென்று, ஒரு சிறு எடுத்துக்காட்டுடன் விளக்குங்களேன்.
பாசுரத்தைப் பிரிக்க வேண்டுமா? அது தவறாகத்தோன்றாதா?
//Blogger தமிழ் said...
நன்றிகள்! எப்படி இருக்க வேண்டுமென்று, ஒரு சிறு எடுத்துக்காட்டுடன் விளக்குங்களேன்.
//
பிரபந்தப் பாசுரங்களைத் தெரிந்து கொள்ள, பெரும்பாலான தமிழ் அன்பர்கள் ஆர்வம் உடையவராக இருப்பர். ஆனால், பாசுரங்களைப் பிரசுரிக்கும் புத்தகங்கள், இலக்கண சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனரே தவிர, படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
இந்தப் பிரச்சினையை, நாச்சியார் திருமொழி மற்றும் பிரபந்த பாசுரங்கள் சொல்லும் ‘கோஷ்டி’களில் உட்கார்ந்தால் கண்கூடாகப் பார்க்கலாம்.
இலக்கணம் வேண்டுமென்றால், அன்பர்கள் எத்தனையோ புத்தகங்களை வாங்கிப் பார்க்கலாம்.
ஆனால், தங்களைப் போல், வலையில் சேவை புரிபவர்கள், எங்களைப் போன்ற அறிவிலிகளுக்குச் செய்யும் உதவி, பாசுரங்களை பதம் பிரித்து எழுதுவதேயாகும்.
சிறு உதாரணம்:
(திருவாய்மொழி 7-4-7)
பாசுரத்தின் இலக்கணம், கலிவிருத்தம். பெரும்பாலான புத்தகங்கள், பாசுரத்தை, கலி விருத்தமாக பிரசுரித்திருக்கும்:
மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்-* இன
நூறு பிணம்மலை போல்புரள* கடல்
ஆறு மடுத்துதி ரப்புனலா* அப்பன்
நீறு படஇலங் கைசெற்ற நேரே!
இந்தப் பாசுரத்தை, சொல்லும் போது வேறு விதமாகப் பதம் பிரித்துச் சொல்ல வேண்டும். புத்தகத்தை எடுத்துச் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து படிக்க முயற்சித்தால்,
சற்றுத் திணரும்.
எனவே, இலக்கணத்தைத் தவிர்த்து, பொருள் புரியுமாறு கீழ்க் கண்டவாறு எழுதலாம்:
மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்* இன-
நூறு பிணம்* மலை போல் புரள* கடல்-
ஆறு மடுத்து* உதிரப் புனலா* அப்பன்-
நீறு பட* இலங்கை செற்ற நேரே!
இப்படி எழுதும் முறைக்கு, 'WYSIWYR' - ’விசிவிர்’ என்று பெயர் - அதாவது, What You See Is What You Read.
இதனை அப்படியே ‘கோஷ்டிகளிலும்’ உட்கார்ந்து சொல்லலாம்.
அடியேன், சில காலமாக, பிரபந்தத்தை இப்படி எழுதும் முயற்சியிலும் இறங்கியுள்ளேன்.
என்னுடைய வலைத் தளத்தில் (www.maayaa.net), நாச்சியார் திருமொழியை இவ்வாறு எழுதியுள்ளேன்.
தாங்களும் இவ்வாறு எழுதினால், தங்கள் சேவை இன்னும் பெருமையுள்ளதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
சிறப்பான அளப்பு (idea).இனிய தமிழை இழைய விடும் பாடல்களை எளிமை கருதி பதம் பிரித்தும் எழுதலாம்னு நினைக்கிறேன்.
நன்றி இரங்கன் ஐயா,
பாடல் அடிகளுக்குள்ளேயே பதம் பிரித்து பொருள் எழுதி வந்தேன்.
இனி நீங்கள் சொல்லும் முறையைப் பின்பற்ற முயல்கிறேன்.
Post a Comment