பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
தரவு கொச்சகக் கலிப்பா
பாடல் - 11
குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை*
அச்சோ வருகவென்று ஆய்ச்சி யுரைத்தன*
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்*
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே.
பதவுரை:
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை* - நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை (நச்சுவார் - விரும்புவர், நச்சுதல் - விரும்புதல்)
அச்சோ வருகவென்று ஆய்ச்சி யுரைத்தன* - அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாடப் புதுவைக்கோன் பட்டன்சொல்* - மச்சணி மாடப் புதுவைக் கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள்விசும் பாள்வரே. - நிச்சலும் பாடுவார் நீள்விசும்பு ஆள்வரே. (நிச்சலும் - எப்பொழுதும்; விசும்பு - வைகுந்தம், சுவர்க்கம், விண்ணுலகம்)
பொருளுரை:
தன்னை விரும்பி நினைப்பவர் முன் தோன்றி நிற்கும் பரம்பொருளான நாராயணனை அணைத்துக் கொள்ள வருமாறு ஆய்ச்சியான யசோதை அன்னை அழைத்தமையை அழகிய மாடங்கள் நிறைந்த புதுவை நகர் வேந்தரான பட்டர்பிரான் பாசுரங்களாய் அருளியுள்ளார். அப்பாசுரங்களை நித்தமும் பாடுபவர் விண்ணுலகை ஆள்வரே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
No comments:
Post a Comment