Sunday, September 6, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக் கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் 7



மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்*
தக்க திதன்றென்று தானம் விலக்கிய*
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய*
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.

பதவுரை:

மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில்* - மூவுலகையும் வென்று பெரும் புகழ் பெற்ற மகாபலிச்சக்கரவர்த்தியின் வேள்விக்கு அந்தண சிறுவனாய் வந்த வாமனனுக்கு பலிச்சக்கரவர்த்தி, அவ்வந்தண சிறுவனின் வேண்டுகோளின் படி மூன்றடி நிலத்தைத் தானமளிக்க முயன்ற போது, (மாவலி - மகாபலிச் சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரன்; வேள்வி - யாகம்)

தக்க திதன்றென்று தானம் விலக்கிய* - மகாபலி அளிக்கப் போகும் தானம் சரியானது அல்ல. மகாவிஷ்ணுவே தேவர்களுக்காக இந்திரலோகத்தை மீட்க வந்திருக்கிறார் என்று அசுரகுரு எச்சரித்த பின்னும் பலிச்சக்கரவர்த்தி தானம் அளிக்க முயன்ற போது, வண்டு உருவில் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துத் தானத்தைத் தடுத்த, (தக்கது இது அன்று என்று - இது சரியான செயல் அல்ல என்று; தானம் விலக்கிய - தானத்தைத் தடுத்த)

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய* சக்கரக்கையனே!  அச்சோவச்சோ- வாமனனிடத்து மகாபலியின் தானத்தைத் தடுத்த அசுரகுருவான  சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் தன் வலக்கரத்திலிருந்த தர்ப்பைப் புல்லால் கிளறிய, வலக்கரத்தில் சக்கராயுதம் தரித்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! (சுக்கிரன் - அசுரர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியார்; துரும்பு - தர்ப்பைப் புல், சக்கரக்கையன் - திருச்சக்கரத்தைக் கரத்தில் ஏந்தியவன்)

சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. - இடக்கரத்தில் திருச்சக்கரம் தரித்தவனே அணைத்துக்கொள்ள வருவாயாக! (சங்கம் இடத்தானே - இடக்கரத்தில் திருச்சங்கைத் தரித்தவனே)




வாமனாவதாரம்: 


மாபெரும் கிருஷ்ண பக்தனாகிய பிரகலாதனின் பேரனான, மகாபலிச் சக்கரவர்த்தி இம்மண்ணுலகிற்கு மட்டுமல்லாது, இந்திரலோகத்தையும் கைப்பற்றி மூவுலகிற்கும் தன்னிகரில்லாத பேரரசராய் தானமும், தவமும் தவறாத தர்ம ஆட்சி புரிந்து வந்தான். 


இந்திரலோகத்தை, மகாபலியிடம் இழந்த தேவர்கள், தங்களின் குலகுருவான பிருஹஸ்பதியிடம்(குரு பகவானிடம்) அடைக்கலம் தேடினர். அவரும் இந்திரன் முதலாய தேவர்களைச் சென்று திருமாலின் திருவடியில் சரண் அடையுமாறு அறிவுரை கூறினார். இந்திரனும் திருமால் திருப்பாதம் சென்று தங்கள் இந்திரலோகத்தை மீட்டத் தருமாறு முறையிடவே, திருமாலும் தேவர்களின் துயர் தீர்க்க கசியப முனிவருக்கும், அதிதி முனி பத்தினிக்கும் புத்திரராக திருவவதாரம் புரிந்தார். 


இந்திரலோகத்தைக் கைப்பற்றிய மாவலிச்சக்கரவர்த்தி, மூவுலகையும் எவ்வித குறையுமின்றி நல்லாட்சி புரிந்து வந்தான். மாவலி உலக நலனுக்காகவும், தான் பெற்ற இந்திரபதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு யாகங்களும், யாகத்தின் நிறைவில் தான தர்மங்களும் புரிந்தான்.


ஒருமுறை மகாபலியின் யாகத்திற்கு, அந்தண சிறுவனான வாமனன் எழுந்தருளினார். வாமனரை மகாபலி பணிவன்போடு வரவேற்று, உபசரித்தார். பின் வாமனருக்குத் தன்னால் அளிக்கவல்லது யாது என்று வினவினார். 


வாமனரோ, தன் திருப்பாதத்தால் அளந்த மூன்றடி நிலம் மட்டும் போதும் என்று கூறவே, மகாபலியோ அது தமக்குப் போதாது இன்னும் வேறு ஏதாவது தரக்கூடுமோ என்று கேட்டார்.


வாமனரும் தன் பாதத்தால் அளந்த மூன்றடி நிலம் மட்டும் போதும் என்று உறுதியாகக் கூறினார். வாமனரின் கோரிக்கைப்படி, அவர் கேட்டதை தானமளிக்க மகாபலிச் சக்கரவர்த்தித் தயாரானார். 


வாமனராய் வந்திருப்பவர் யார் என்பதை அறிந்து கொண்ட அசுரகுருவான சுக்கிராச்சாரியார் மகாபலியை எச்சரித்தார். இந்த அந்தண சிறுவன் யார் என்பதை அறியாது நீ தானமளிக்கப் போகிறாய். இவர் மகாவிஷ்ணு, தேவர்களுக்கான இந்திரலோகத்தை மீட்க வாமன உருவில் வந்திருக்கிறார். ஆகவே நீ செய்யப்போவது உமக்கு உகந்த காரியமல்ல என்று அறிவுரை கூறி மகாபலிச் சக்கரவர்த்தியைத் தடுத்து நிறுத்தினார்.


குருவின் வார்த்தையைக் கேட்ட பின்னும் மகாபலிச் சக்கரவர்த்தி, தம்மால் கொடுத்த வாக்கை மீற இயலாது. மேலும் வந்திருப்பது மகாவிஷ்ணு என்றால், அதைவிட பெரும் பேறு தமக்கு வேறு இல்லை, ஆகவே பின்விளைவு யாதாயினும் வாமனரிடத்துத் தன் வாக்கை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறி, கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து தானமளிக்கத் துவங்கினார்.


அசுர குலகுருவான சுக்கிராச்சாரியார், சிறு வண்டாக உருமாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்து, தானத்தைத் தடுக்க முயற்சித்தார். வாமனரோ, தன் வலக்கையிலிருந்த தர்ப்பைப் புல்லைக் கொண்டு துவாரத்தை சரி செய்வது போல் வண்டு உருவிலிருந்த சுக்கிராச்சாரியாரின்  கண்ணைக் கிளறிவிட்டார். வலி பொறுக்காத சுக்கிராச்சாரியாரும் கமண்டலத்திலிருந்து வெளிவந்தார். 


பின் மகாபலி, வாமனர் கேட்ட மூன்றடி நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு கமண்டலத்திலிருந்து நீரை வார்த்துக் கொண்டிருந்த போது, வாமனரோ, திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நீண்டு உயர்ந்தார். குறுமாலவனாய் வந்த திருமால் பெருமாள் ஆனார்.


திரிவிக்கிரமனான பெருமாள், முதலடியில் பாதாளஉலகம் உள்ளிட்ட மண்ணுலகையும், இரண்டாமடியில் விண்ணுலகையும் அளந்துவிட்டார். மகாபலிச் சக்கரவர்த்தியின் மூவுலகையும் இரண்டே அடியில் அளந்துவிட்ட பெருமாள், வாயினுள்ளே அண்டசராசரத்தை அன்னைக்குக் காட்டிய வைகுந்த பிரான், மூன்றாமடியை எங்கு வைத்து அளப்பது என்று மகாபலியிடம் வினவினார். 


மகாபலி, தன்னையே பெருமாளுக்கு அர்ப்பணித்து, மூன்றாமடியைத் தன் சிரசில் வைத்து அளந்தருளுமாறு வேண்டினார். அதன்படியே திரிவிக்கிரமனும், தன் மூன்றாமடியை மகாபலிச்சக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டார்


இந்திரலோகத்தை தேவர்களுக்கும், பாதாள லோகத்தை மகாபலிக்கும் அளித்தார் மகாவிஷ்ணு, அதுமட்டுமல்லாது, மகாபலியின் கொடைத் தன்மைக்கும், பேரன்புக்கும், உயிர்கள் பால் கொண்ட பெருங்கருணைக்கும், பெருந்துன்பம் வரும் என்று அறிந்த பின்னும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மனத்திண்மைக்கும் அசுரகுலச் சக்கரவர்த்தியான மகாபலிக்கு அடுத்து வரும் சாவர்ணி மனுவந்திரத்திலே இந்திரபதவியையும் அளித்தருளினார். 


நீதி:


 இக்கதையில், என்ன இது மகாவிஷ்ணுவே இப்படி வஞ்சகமாக உருமாறி வந்து இந்திரலோகத்தை பலிச்சக்கரவர்த்தியிடமிருந்து பறிக்கலாமா? இது சரியா என்று எண்ணலாம். 


மகாபலியின் பெருமையை நம் அனைவருக்கும் எடுத்துக் காட்டவே இந்த திருவவதாரம். நாம் இறைவனை தேடி, ஓடி ஓடிச் சென்று சரணாகதி அடைய முயல்வோம். ஆனால், இறைவன் தானே அவதாரம் புரிந்து வந்து தன் திருவடியை ஒருவரிடத்து அளிக்க வந்துள்ளார் என்றால் இப்பெரும் பேறு மகாபலியன்றி வேறு எவருக்கும் கிட்டியதில்லை. 


பரம்பொருளான இறைவன், நம்மிடம் வேண்டுவது சொத்தையோ, செல்வத்தையோ அல்ல. பூரண சரணாகதி. தன்னை இறைவனிடம் ஒப்புவிப்பதையே அவர் எதிர்பார்க்கிறார். குலம், கோத்திரம் போன்ற பிறவி சாயங்களைத் தாண்டி, தூய உள்ளமும், பூரண சரணாகதியுமுமே ஒருவருக்கு முக்தியை அளிக்கவல்லது. அத்தகையோரின் உள்ளத்து மலர்மிசை இறைவன் ஏகுவான்.


பொருளுரை:


இந்திரலோகம் உட்பட மூவுலகத்தையும் வென்று, தானத்திலும் தவத்திலும் சிறந்து பெரும் புகழ் பெற்ற மாவலிச் சக்கரவர்த்தியின் வேள்வியில் அந்தண சிறுவனாய் வாமனாவதாரம் புரிந்து சென்று, மாவலியிடம் தான் கேட்ட மூன்றடி நிலத்தைத் தானமளிக்க முயன்ற மாவலிச் சக்கரவர்த்தியை எச்சரித்து, பின்னும் வண்டாக உருமாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துத் தானத்தைத் தடுக்க முயன்ற அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் கண்ணை, வலக்கரத்திலிருந்த தர்ப்பையால் கிளறிய சக்கரக்கையனே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக! இடக்கரத்தில் திருச்சங்கைத் தரித்தவனே என்னை அணைத்துக் கொள்ள வருவாயாக!


No comments: