பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
எட்டாம் திருமொழி - பொன்னியல்
(அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
பாடல் - 8
என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன*
மன்னு நமுசியை வானில் சுழற்றிய*
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ.
பதவுரை:
என்னிது மாயம்? என்னப்பன் அறிந்திலன்* - இது என்ன மாயம்? என் தந்தை இதைப் பற்றி முன்பே அறியவில்லை. மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் தானம் கேட்க வந்த பொழுது மூன்றடி உயரத்தில் வாமனனாய் வந்தார். தானம் தருவதாக வாக்கு அளித்த பின், விண்ணும் மண்ணும் அடங்க நீண்டு உயர்ந்து வளர்ந்த திரிவிக்கிரமனாய் உருவத்தை மாற்றிய உடன், மகாபலிச்சக்கரவர்த்தியின் மகன் நமுசி என்பவன் குறுக்கிட்டு மகாவிஷ்ணுவிடம் தருக்கம் புரியத் துவங்கினான். (என்னிது - என்ன இது; என்னப்பன் - என் அப்பன்~ என் தந்தை; அறிந்திலன் - அறிந்து இலன் )
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன* - முன் என்ன உருவத்தில் நீ வந்தாயோ அவ்வுருவிலேயே இருந்து நீ அளக்க வேண்டும் என்று கூறி (முன்னைய - முன்பு; வண்ணம் - வடிவம்; அளவாயென்ன - அளவாய் என்ற)
மன்னு நமுசியை வானில் சுழற்றிய* - அளக்கவிடாமல், திரிவிக்கிரமனனின் காலைப் பிடித்துக்கொண்டான் நமுசி. அப்பொழுது இறைவன் அளப்பதற்காக தன் திருப்பாதத்தை ஓங்கிய பொழுது காலைப்பிடித்துக் கொண்டிருந்த நமுசி, விண்ணில் பறந்து சுழன்றினான். (மன்னு - பிடி; நமுசி - மகாபலியின் புதல்வன்)
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ. - அவண்ணம் நமுசியை வானில் சுழற்றிய மின்னல் ஒளிப் போன்ற பொலிவான திருமுடியை அணிந்தவனே அணைத்துக் கொள்வாயாக! திருவேங்கடம் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்பவனே அணைத்துக் கொள்வாயாக! (மின்னுமுடியனே - மின்னல் போன்ற ஒளி பொருந்திய திருமுடியை அணிந்தவனே; வேங்கடவாணனே - திருவேங்கடத்தில் வாழ்பவனே)
பொருளுரை:
மகாவிஷ்ணு, மகாபலிச்சக்கரவர்த்தியின் யாகத்திற்கு மூன்றடி உயரமுடைய வாமனனாக வந்து தன் காலால் அளந்த மூன்றடி நிலம் வேண்டும் என்று கூறினார். மகாபலிச்சக்கரவர்த்தியும் தானமளிப்பதாய் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, மூன்றடி உயர வாமனனோ, விண்ணும் மண்ணும் அடங்க உயர்ந்து வளர்ந்த திரிவிக்கிரமனாய் மாறியதைக் கண்டதும் மகாபலியின் புதல்வன் நமுசி என்பவன் இது என்ன மாயம்? என் தந்தை இதைப்பற்றி முன்பு அறியவில்லை. தானம் கேட்ட பொழுது என்ன உருவத்தில் வந்தாயோ, அவ்வுருவிலேயே இருந்து நீ மூன்றடி நிலம் அளந்து கொள்ளவேண்டும் என்று வாதிட்டு, மகாவிஷ்ணுவை அளக்க விடாமல், அவரின் திருப்பாதத்தைப் பற்றிக் கொண்டான்.
மகாவிஷ்ணு அளப்பதற்காகத் தன் திருப்பாதத்தை விண்ணில் ஓங்கிய பொழுது, பாதத்தைப் பிடித்துக் கொண்டிருந்த நமுசியும் விண்ணில் உயரப் பறந்து வானில் சுழன்றான். அவ்வண்ணம் நமுசியை வானில் சுழற்றிய மிகவும் ஒளிபொருந்திய திருமுடியை அணிந்தவனே அணைத்துக் கொள்வாயாக! திருவேங்கடம் என்னும் திவ்விய தேசத்தில் வாழ்பவனே அணைத்துக் கொள்ள வருவாயாக!
No comments:
Post a Comment