Tuesday, October 27, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 3

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை
பாடல் - 3


கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் *

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான் *

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய *

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான்.




பொருளுரை:

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்  -  அளவுக்கு அதிகமாக நிறைந்திருந்த பெரும் செல்வம்; , உறவினர்கள், சுற்றத்தவர், சகோதரர்கள், நண்பர்கள், நிலம், பொன், பொருள், அரசு, அரண்மணை என்று எதற்கும் குறை பட முடியாத அளவுக்கு நிறைந்திருந்த பெருஞ்செல்வத்தை (கத்தக் கதித்து - நிறைந்து மிகுந்த; கத்தக்கதித்தல் - நிரம்பமிகுதல்)

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண்ணாள்வான் - ஒருவருக்கொருவர் உடன்பட்டு, ஒற்றுமையுடன் இயைந்து ஒழுகி,  அனுபவிக்காமல் தான் மட்டும் அரசாள வேண்டும் என்னும் சுயநல எண்ணம் கொண்ட (ஒத்துப் பொருந்திக் கொண்டு - To act agreeably to the wishes of another, live in harmony; இசைந்தொழுகுதல். {பொருந்துதல் - To agree, consent; உடன்படுதல்.}; உண்ணாது - அனுபவிக்காது)

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய - நூறு கௌரவ சகோதரர்களில் மூத்தவனான துரியோதனனின் கூட்டத்திலுள்ள அனைவரையும் (நூறு சகோதரர்கள் மற்றும் அவனுடன் இணைந்து போரிட்ட அனைவரும்) தோற்கடித்து, பேராசையும், சுயநலமும் கொண்ட துரியோதனனை அவன் அரசாங்கத்தோடு அழிக்கத் தோன்றிய (கொத்து - குலை ~ குலம் ~ சுற்றமும் நட்பும்; தலைவன் - முதல்வன்; குடி - அரசு, ஊர்; )

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்க ளேறுஎன் புறம்புல்குவான். - தலைவன் வந்து என்னை  அணைத்துக் கொள்வான்! ஆயர் குலத்தின் ஆண் இடபம் போன்ற என் அத்தன் என்னைப் புறம்புல்குவான். (அத்தன் - தந்தை, தலைவன், குரு; ஏறு - இடபம், ரிஷபம், காளைமாடு)

பதவுரை:

எல்லா செல்வமும் நிறைந்து, மிகுந்திருந்த போதும், நல்ல மனச்செல்வம் தன்னிடத்து இல்லாத படியால், தன் உறவினர்களான பஞ்ச பாண்டவர்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து அவற்றை அனுபவிக்காது சுயநல ஆட்சி புரிந்த நூறு கௌரவர்களின் மூத்தவனான துரியோதனனின், சகோதரர்களையும், அவனுடைய சேனைகளையும் தோற்கடித்து அவனது அதர்ம அரசாட்சியை  அடியோடு அழித்துத் தர்மத்தைக் காத்த  தர்மத்தின் தலைவன் என்னைப் புறம்புல்குவான்! ஆயர்கள் ஏறு என்னை வந்து அணைத்துக் கொள்வான்!


No comments: