Friday, October 2, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே
(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 2

கிங்கிணி கட்டிக் கிறிகட்டி * கையினில்

கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி *

தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து *

என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்.

(~ கிங்கிணி - கிண்கிணி)



பொருளுரை:

கிங்கிணி கட்டிக் கிறிகட்டி * கையினில் - காலில் கிண்கிணி சதங்கை கட்டி, முன்கையினில் பவள வடம் அணிந்து கொண்டு (கிண்கிணி - பாதச் சதங்கை; கிறி - பவள வடம், wristlet;)

கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி * - பவள வடம் மட்டுமல்லாது, காப்பும் தரித்து, கழுத்தில் பொன் சங்கிலி அணிந்து (கங்கணம் - {தங்கக் காப்பு}காப்பு; தொடர் - சங்கிலித் தொடர், chain)

தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து * - பொன்னாலும் மணியினாலும் ஆன பல்வேறு திருவாபரணங்களின் கணத்தினாலே, ஆடி ஆடி நடந்து வந்து (கணம் - கூட்டம், collections, )

என்கண்ணன் என்னைப் புறம்புல்குவான் எம்பிரான் என்னைப் புறம்புல்குவான். - என் கண்ணன் என்னைப் புறத்தே அணைத்துக் கொள்வான்; என் தெய்வம் என்னை அணைத்துக் கொள்வான். 

பதவுரை:

என் கண்ண பெருமான், தன் திருப்பாதத்தில் கிண்கிணிச்சதங்கை கட்டிக் கொண்டும், கையில் பவளவடமும், பொன்னாலான காப்பும் (கங்கணம்) அணிந்து கொண்டு, கழுத்தில் பொன்னாலும் மணியாலும் செய்த சங்கிலிகளை அணிந்து கொண்டும்,  அந்த திருவாபரணங்களின் கூட்டத்தில் தானும் ஒரு விலைமதிப்பற்ற மணியான என் முகில்வண்ணன், அணிகலன் ஒரு புறம் ஆட ஆட, தன் திருப்பாதம் ஒரு புறம் ஓட ஓட, கண்கள் என்னைத் தேட தேட, தேனினும் இனிய தன் குரலில் 'அம்மா, அம்மா' என்று பாட பாட, ஓடி வந்து என்னைப் புறம் புல்குவான்! என் தெய்வமான என் பிள்ளைக் கண்ணனும் என்னிடத்து ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்வான்!

No comments: