Tuesday, October 27, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 6

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 6

 சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் *

உத்தர வேதியில் நின்ற ஒருவனை *

கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட *

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.



பதவுரை: 

சத்திர மேந்தித் தனியொரு மாணியாய் * - பனங்குடையை ஏந்திக் கொண்டு, தனி ஒரு (பிரம்மசரியனாய்) அந்தண சிறுவனாய், 

 (சத்திரம் - Umbrella; குடை;

மாணி - Student; bachelor; பிரமசாரி; Dwarf; குறள்வடிவம்)

உத்தர வேதியில் நின்ற ஒருவனை * - யாகத்தில் இருந்த மாவலிச்சக்கரவர்த்தியை

(உத்தரவேதி - வேள்வி, யாகசாலை; Northern altar made for the sacred fire; யாக அக்கினி இருக்கும் இடம்; 

ஒருவனை - மாவலிச் சக்கரவர்த்தி யை)

 

கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட * - சக்கரவர்த்தியின் கீழ் உள்ள அனைவரின் கண்முன்னே, மாவலிச்சக்கரவத்தியிடம் கேட்ட காணிக்கை முழுவதையும் ஏற்றுக் கொண்ட 

(கத்திரியர் - சத்திரியர்கள்;

காணி - காணிக்கை - Voluntary offering, present to a guru or other great person; 

காணி - நிலம்(மூவுலகம்) என்றும் பொருள் கொள்வர். காணி என்பதை நிலத்தை அளவிடும் ஒரு அளவீடு என்பதனால் மூவுலகம் என்றும் பொருள் கொள்வர்)

பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான். - பேரழகன் என்னை புறம் புல்குவான்; மூவுலகையும் ஈரடியில் அளந்த எம்பெருமான் என்னை புறம்புல்குவான்

(பத்திராகாரன் - Well-built handsome man; அழகிய வடிவினன்; பத்திரம் -  Beauty, grace; அழகு

பார் - உலகம்

**நினைவு கூர்க: முந்தைய பாசுரத்தில், பத்திரம் என்னும் சொல் 'இலை' என்னும் பொருளில் வந்தது )

பொருளுரை:

பெரிய பனங்குடையை ஏந்திக் கொண்டு அந்தண சிறுவனாய்த் தான் மட்டும் தனியே சென்று, யாகத்திலிருந்த மாவலிச்சக்கரவர்த்தியிடம், அவரது அரசுப் பரிவாரங்கள் மற்றும் படை வீரர்களின் கண் முன்னேயே, தான் கேட்ட யாசகம் அனைத்தையும் முழுவதுமாகப் பெற்றுக் கொண்ட பேரழகன் என்னைப் புறம் புல்குவான்; வையமனைத்தும் அளந்த திரிவிக்கிரவாமனன் என்னைப் புறம்புல்குவான்.

** பின்குறிப்பு:

தனியொரு மாணியாய் - மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியிடம் தனியொருவனாய் சிறுவன் உருவில் செல்கிறார்;

சத்திரியர் காண -  தானத்தை, வஞ்சகமாய், ஒளித்து, யாரும் அறியா வண்ணம் கேட்கவில்லை. ஆள், அம்பு, சேனை என்று சக்கரவர்த்தியின் படை முன்னே வெளிப்படையாக யாசிக்கிறார்,

காணி முற்றும் கொண்ட - தனியொருவனாய் சிறிய வடிவில் சென்ற பொழுதும் முழு காணிக்கையையும் ஏற்றுக் கொள்கிறார். 

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 

No comments: