Wednesday, October 28, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 7

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 7

 பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி *

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் *

மெத்தத் திருவயி றார விழுங்கிய *

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.


பதவுரை:

பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி * ~ பொத்தை உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி - 

(பொத்த ~ பொத்தை - Anything large, or bulky; பருமையானது

உரல் - Mortar )

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் * - 

(தித்தித்த ~ தித்தித்தல் - To be sweet, savoury, delicious, pleasing; இனித்தல்

தித்தித்த பால் - இனிமையான பால், சுவைமிகுந்த பால்

தடா ~ மிடா - பானை, மிடா - பெரிய பானை,  Pot

வெண்ணெய் - Butter, தயிரைக் கடைந்த பின் கிடைக்கும் திடப்பொருள் - வெண்ணெய், திரவப்பொருள் - மோர்)

மெத்தத் திருவயி றார விழுங்கிய * - மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய - இவ்வடியில் மிகுதி என்னும் பொருள் தரும் மெத்த என்னும் சொல்லும, ஆர என்னும் சொல்லும் வருகிறதை கவனித்தீர்களா?

மெத்த என்னும் சொல்லை, முந்தைய அடியிலுள்ள, பாலையும் வெண்ணெயையும், 

ஆர என்னும் சொல், திருவயிறு ஆர என்று வயிறு நிறைவையும் குறிக்கிறது

(மெத்த -  மிகவும், Much, abundantly, greatly;

திருவயிறு -  உதரம், Belly, stomach, paunch;

ஆர -  மிக, Fully, abundantly;

விழுங்கிய - உண்ட, விழுங்குதல் - கவளீகரித்தல், To devour, consume; to absorb; to exhaust;)

அத்தன்வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான். 

(அத்தன் - தலைவன்;

ஆழியான் - திருவாழிச் சக்கரத்தைக் கையில் ஏந்தியவன்)

பொருளுரை:

இப்பாடல் மிகவும் எளிமையான, மிக மிகச் சுவையான ஒரு பாசுரம்! பாலும் வெண்ணெயும் வருவதால் மட்டுமல்ல... :-)

நம் அனைவரின் வீட்டிலும், குழந்தை கண்ணன் மண்டியிட்டு, பானையில் உள்ள வெண்ணெயை உண்பது போல் படம் வைத்திருப்போம். நமக்கு, குழந்தை கண்ணன் வெண்ணெய் உண்பது மட்டும் தெரியும்....

ஆனால், அந்த வெண்ணெய் எடுக்க கண்ணன் பட்ட பாடு... பெரியாழ்வாருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது!! 



பருத்த, பெரிய உரலைக் கவிழ்த்து... ஏன் கவிழ்க்க வேண்டும்?.... உரலின் மேல்பாகத்தில்  குழிவான பகுதி இருக்கும்... அதில் தான் தானியத்தை போட்டு இடிப்பர். ஆனால், உரலின் அடிப்பாகம் சமமாக இருக்கும்.  உரலைக் கவிழ்க்காமல், அப்படியே அதன் மேல் ஏறினால், கண்ணனோ சிறு பிள்ளை... அவன் மேலே எக்கும் பொழுது, தன் கால்கள் உரலின் மேல்பாகத்தில் உள்ள குழிக்குள் சென்றால், தன் சமநிலைப் பாதிக்கப்படுமல்லவா.... ஆகையினால்தான், உரலைக் கவிழ்த்துப் போட்டு, தன் கடமையைச் செய்கிறார்! :-)) 

உருட்டி அதை வெண்ணெய் பானை இருக்கும் இடத்திற்கு நகர்த்தி சென்று, அதன் மேலேறி, எக்கித் தாவி, பானைகளில் வைத்திருந்த இனிமையான பாலையும், சுவையான வெண்ணெயையும்... வயிறு முட்ட உண்டாராம்! 

எவ்வளவு பாலையும் வெண்ணெயையும் உண்டார்? - மெத்த ~  நிறைய, நிறைய பாலையும், வெண்ணெயையும் உண்டாராம்...

எந்த அளவுக்கு உண்டார்? திருவயிறு ஆர ~ தன் திருவயிறு முட்ட முட்ட உண்டாராம்....

இப்பாசுரத்தில், யசோதை அன்னைக் கவனிக்காத ஒன்றையும் பெரியாழ்வார் கவனித்திருக்கிறார்... 

பருத்த உரல் எப்படி வெண்ணெய் பானையின் அடியில் வந்தது என்று!

 .... '' பொத்த வுரலைக் கவிழ்த்துஅதன் மேலேறி '' .... 

இதை, யசோதை அன்னை கவனித்திருந்தால், அந்த உரலிலேயே கண்ணனைக் கட்டிப் போட்டிருப்பாரா??!!

பெரிய, பருத்த உரலைக் கவிழ்த்து, அவ்வுரலின் மேல் ஏறி, பானைகளில் வைத்திருந்த இனிமையான பாலையும், வெண்ணெயையும் மிகுதியாகத் தன் திருவயிறு நிறைய, நிறைய  உண்ட தலைவன் வந்து என்னைப் புறம் புல்குவான்! தன் திருக்கைகளில் திருவாழிச்சக்கரத்தை ஏந்திய எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்!

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 

No comments: