Tuesday, October 27, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 5

 பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 5

 வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி *

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ் *

பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப * பண்டு

மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

(~ செய்த - பெய்த அல்லது பெய்து)


பதவுரை:

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி * - பண்டு வெண்கலப் பத்திரம் கட்டி, விளையாடி 

(பண்டு - Former time, previous time; முற்காலம், 

வெண்கலம் - Bell-metal, bronze, an alloy of copper and tin; செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி யுண்டாக்கும் கலப்பு உலோகம்; 

பத்திரம் - இலை,)

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ் * - பல கண் செய்த கருந்தழைக் காவின் கீழ் ~ பெரிய பனங்குடையின் கீழ்; இவ்வடி மிகவும் இரசனை மிகுந்த ஒன்று; 

உருவமோ குறுகிய அந்தண சிறுவன், ஆனால் அவர் கையில் உள்ள பனங்குடை எப்படிப்பட்டது எனில் ....

பலக் கண் செய்த - பீலி - The first leaf or shoot of a palmyra; பனங்குருத்து 

கருந்தழை - தழை என்பதனால், அது காய்ந்த பனை மரம் அல்ல, பசுமையானது

பல குருத்துகள் விட்ட பனை மரச்சோலையவே குடையாக ஏந்திக் கொண்டு அதன் கீழ்... 

அப்பாடி, நினைத்துப் பார்க்கும் போது எவ்வளவு பிரமிப்பாக உள்ளது; 

.... பசுமையான, பல குருத்துகளை விட்ட, நுனியில் அதன் ஓலைகள் பெரும் சோலைகளாக இருக்க, அதனைக் குடையாக ஏந்திக் கொண்டு அதன் கீழ்  

(கண் பல செய்த கருந்தழைக் கா - பசுமையான பனைமரம்

தழை - Sprout, shoot; தளிர்,  Leaf, foliage; இலை )

பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப * பண்டு - பண் பல பாடி, பல்லாண்டு இசைப்ப, ~ 

(பண் - இசை, 

பல்லாண்டு - மங்களாசசனம்,)




மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான். - மூன்று உலகையும் பெற்றவன் புறம் புல்குவான்; வாமனன் என்னைப் புறம் புல்குவான் 

(மண் பல - மூன்று உலகம்)

பொருளுரை:

பெரியாழ்வார் கண்ணபெருமானின், மழலையாய் எவ்வாறு இரசித்திருக்கிறார், அதில் எந்த அளவு இலயித்திருக்கிறார் என்பதற்கு இப்பாடல் மற்றுமொரு சான்று... 

வீட்டில் சிறு பிள்ளைகள், சில சமயம் தந்தையின் சட்டை, செருப்பை அணிந்து கொண்டு தந்தையைப் போல் அதிகாரத் தொனியில் பேசுவர்...  சில சமயம் வீட்டில் உள்ள திருமணமாகாத அத்தைமார்களின் தாவணியைத் தன் ஆடை மேல் பொருத்தமே இல்லாமல் அணிந்து கொள்வர், சில சமயம் அன்னையின் புடவையை தன் மேல் பல்வேறு சுற்றுகள் சுற்றி அணிந்து கொண்டு வெக்கத்தோடு நகைப்பர்.... இப்படி தன் வயதுக்கு மீறிய சேட்டைகளைப் பிள்ளைகள் செய்வது எவ்வளவு அலாதியானதோ... அதை அப்படியே இங்கு எடுத்துக் காட்டுகிறார்.... 

சிறு குழந்தையாய் ஆடை கூட அணியாமல், தன் இடையில் வெறும் அரைஞாண் கயிற்றில் ஒரு இலையை மட்டும் அணிந்து பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தையாய் விளையாடிக் கொண்டிருந்த கண்ணன், ஏராளமான குருத்துகளைக் கொண்ட, சோலைகள் நுனியில் இருந்து நிழல் தர, பசுமையான பனைமரத்தையே குடையாய் ஏந்திக் கொண்டு... அப்பனங்குடையின் கீழ் நடந்து சென்று ... தேவர்கள், பல்வேறு இன்னிசைக் கருவிகளின் இன்னிசையோடு, பல்லாண்டு பாடி வாழ்த்த .... மாவலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தன் காலால் அளந்த மூவடி மண்ணே போதும் என்று கூறி, மூவுலகையும் ஈரடியிலே அளந்த பெருமான் என்னைப் புறம் புல்குவான்.... வாமனன் என்னைப் புறம் புல்குவான்.... 

** குறிப்பு:

பீலி என்பது மயில்தோகையையும் குறித்தாலும், ஈற்றடியில் வாமனன் என்று குறிப்பிடுவதன் மூலம் அது நிச்சயம் பனைமரக் குருத்தையே குறிக்கிறது என்று அறியலாம். 

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! ஓம் நமோ நாராயணாய! 

No comments: