Tuesday, October 27, 2020

பெரியாழ்வார் திருமொழி 1 - 9 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

ஒன்பதாம் திருமொழி - வட்டுநடுவே

(தன் முதுகைக் கட்டிக் கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

பாடல் - 4

நாந்தக மேந்திய நம்பி சரணென்று *

தாழ்ந்த தனஞ்சயற் காகி * தரணியில் 

வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர் *

ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்.

பொருளுரை:

நாந்தக மேந்திய நம்பி சரணென்று * - நாந்தகம் ஏந்திய நம்பி! நீயே சரண்! - என்று (நாந்தகம் ~ நந்தகம் என்பது நீண்டு நாந்தகம் ஆனது; வாள், 

பஞ்சாயுதம்:திருமாலின் ஐந்து ஆயுதங்கள்: வில், வாள், தண்டு, சங்கு, சக்கரம்;

சார்ங்கம் (வில்)~ சாரங்கபாணி,

கட்கம் (நந்தகம், வாள்)~ கட்கபாணி, 

கௌமோதகி (கதை),

 பாஞ்ச சன்யம் (சங்கு),

சுதர்சனம் (சக்கரம்)~ சக்கரபாணி;

நம்பி -  The elite among men, used as a term of respect; ஆணிற் சிறந்தோன்; சரண் - அடைக்கலம், புகலிடம்)

தாழ்ந்த தனஞ்சயற் காகி * தரணியில் - தாழ்ந்த தனஞ்சயனுக்காக, தரணியில் (போர்க்களத்தில்)  (தாழ்ந்த - பணிந்த, தனஞ்சயன் - அர்ச்சுணன், தரணி - புவியில் (குருசேத்திரத்தில்))

வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர் * ஊர்ந்தவன் - வேந்தர்கள் உட்க விசயன் மணித்திண் தேர் ஊர்ந்தவன் ~ கௌரவர்கள் தரப்பில் உள்ள மன்னர்கள் அனைவரும் அஞ்சி, மனம் கலக்கமுறும் வண்ணம், விசயனின் மணித்திண் தேர் ஊர்ந்தவன் (வேந்தர்கள் - மன்னர்கள், உட்க -உள்ளழிய; உள்ளம் கலக்கமுற ~ உள்குதல் ~ உட்குதல் - To be disheartened, dispirited; விசயன் - அர்ச்சுணன், மணித் திண் தேர் - மணி போன்ற அழகும், உறுதியும் கொண்ட மிகவும் திண்மையான தேர்)



என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான். - விசயனின் மணித்திண் தேரை ஓட்டிய பார்த்த சாரதி என்னைப் புறம்புல்குவான்; தேவாதி தேவன் என்னைப் புறம்புல்குவான் (ஊர்ந்தவன் - விசயனின் மணித்திண் தேரைத் திறமாக ஓட்டிய பாரத்தனின் சாரதி; உம்பர் கோன் - தேவாதி தேவன், உம்பர் - மேலுலகம், விண்ணுலகம், தேவலோகம்; கோன் - அரசன், தேவன் )


பொருளுரை:

நாந்தகம் என்னும் வாளினை ஏந்திய நம்பி! நீயே சரண்! - என்று சிரம் தாழ்ந்து, பணிந்து அன்புடன் வேண்டிய தனஞ்செயனுக்காக, குருசேத்திரத்தில் நடைபெற்ற மகாபாரதப் போர்க்களத்தில், எதிர்த் தரப்பில் நின்ற மன்னர்கள் அனைவரும் உள்ளம் கலங்க, விசயனின் மணித் திண்தேர் ஊர்ந்த பார்த்தசாரதி என்னைப் புறம் புல்குவான், தேவர்களின் தேவன் என்னைப் புறம் புல்குவான். 

** பின்குறிப்பு:

நாந்தகம் ஏந்திய நம்பி - திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் இருந்தபோதும், இப்பாசுரத்தில் நாந்தகம் என்று வாளினைக் குறிப்பிட்டுள்ளது, ஆயர்களின் கோன் என்பதை அறிய வைக்கிறார் பெரியாழ்வார்.

தரணி - தரணி என்னும் சொல் புவி என்பது நேரடியான பொருள் என்றாலும், இங்கு தரணி என்னும் சொல், மகாபாரதப் போர் நடைபெற்ற குருசேத்திர போர்க்களத்தையே குறிக்கிறது.

மணித் திண் தேர் - (மணிப் போன்ற திண்மை )மணியை உடைக்க இயலாது, ஆகையால், மணியைப் போல் அழகும், உறுதியும் உடைய திண்மையான தேர்





No comments: