Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

பாடல் 10


பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து* அங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை*
குருமா மணிப்பூண் குலாவித்திகழும்*
திருமார்பு இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து - கண்ணன் குழந்தையாக இருப்பதால், உரலானது அவனைவிடப்பெரியதாகவும், மிகுந்த கனத்துடன் இருந்ததை, பெருமா என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். மிகவும் பெரிய உரலில், கட்டப்பட்டிருந்து, (பெரு - பெரிய, மா - பெரிய, பிணி - கட்டுதல்)

அங்கு இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை - அங்கு, ஒரு சாபத்திற்குக் கட்டுப்பட்டு நெடுங்காலமாய் இருந்த, இரண்டு மருத மரங்களையும் ஒடித்த இந்த சிறுவன்

கதைச்சுருக்கம்:

குபேரனின் மகன்களான, நளகூபரன் (நளகூபன்), மணிக்ரீவன் ஆகிய இருவரும் ஒருமுறை நாரத முனிகளை அவமதித்தக் குற்றத்திற்காக, அவர்களை நாரதமுனி மண்ணுலகில் மரங்களாக இருக்க சாபம் கொடுத்துவிட்டார்.

தங்கள் குற்றத்தை உணர்ந்து இருவரும், முனிவரிடம் மன்னிப்பு வேண்டி, சாபத்திலிருந்து விடுதலைப் பெற வழி சொல்லுமாறும் வேண்டினர். அதற்கு நாரதர், எம்பெருமான் நாராயணன், பூமியில் அவதாரமெடுத்து உங்களை சாபத்திலிருந்து மீட்டருளுவார் என்று கூறினார்.

அதன்படியே, இறைவனின் வருகைக்கும், அருளுக்கும் நெடுங்காலமாகக் காத்திருந்தன அந்த மரங்கள்.

கிருஷ்ணாவதாரத்தில், சிறுபிள்ளையான கண்ணன் செய்த குறும்புத்தனங்களைப் பொறுக்கமாட்டாத யசோதை அன்னை, அவரை ஒரு உரலில் கட்டிவைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு நீளமான கயிறானாலும் அது, இரண்டு அங்குல அளவு குறைவானதாகவே இருந்தது.

வியந்துபோன யசோதை அன்னை, கண்ணனின் திருவிளையாடலைப் புரிந்து கொண்டார். அதன்பின், யசோதை அன்னையின் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி கட்டுப்பட்டார். கயிறு கொண்டு கட்டமுடியாத கண்ணனை, அன்பு கனிந்த உள்ளம் கட்டுபடுத்திவிட்டது.

யசோதை, அவ்விடத்தில் இருக்கும் வரை, ஒன்றும் அறியாத பிள்ளைப்போல் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, அமைதியாக நின்றிருந்தான். அவள், அவ்விடத்தைவிட்டு நகர்ந்ததும், இவனும் அவ்விடத்தை விட்டு நகர ஆரம்பித்தான், உரலுடன். உரலை யும் சேர்த்து இழுத்துக் கொண்டே சென்ற அப்பிள்ளை,எதிரில் இருந்த இரண்டு மருதமரங்களின் இடையில் சென்றான். (இந்தமரங்கள் வந்த கதைதான் தெரியுமல்லவா?)

கண்ணன், மரங்களைக் கடந்து சென்றுவிட்டான். ஆனால், உரல்?? அது மரங்களுக்கிடையில் வர இயலாது மாட்டிக் கொண்டது. கண்ணனும் தன் பலம் கொண்ட மட்டும் வலுவாய் இழுத்தான்.

அவன் வலுவுடன் இழுக்கவும், அங்கு நின்றிருந்த மருதமரங்கள் ஒடிந்து போயின. மரங்கள் ஒடிந்து, சாபவிபோச்சனம் பெற்றனர், நளகூபனும், மணிக்ரீவனும். பின் அவர்களிருவரும் இறைவனை வணங்கிவிட்டு, விண்ணுலகம் ஏகினர்.

இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை - முனிவரின் சாபத்திற்கு கட்டுப்பட்டு, அங்கு இருந்த இரண்டு, பெரிய மருத மரங்களை ஒடித்த இந்த பிள்ளை (இறுத்த - முறித்த) முன்னம், எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ன்னு படிச்சது நினைவுக்கு வருமே! ;-))

குருமா மணிப்பூண் குலாவித் திகழும் - உடம்புல சந்தனம் பூசுவாங்க, குருமா வக் கூடவா பூசிக்குவாங்கன்னு நினக்கப்படாது. ;-))

குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் - இறைவனுடன் என்றும் பிரியாது மிகவும் நெருக்கமாய் இணைந்து இருக்கும், மிகுந்த பேரொளியுடன் மின்னுகின்ற, அழகிய துளசிமாலையும் (திருத்துழாய் மாலை), கனமான இரத்தினமாலையும், திருமாலையே தன்வயப்படுத்தி வைத்திருக்கும் திருமறுவான திருமகளும் ஆகிய மூவரும் பொலிவுடன் விளங்கும் (குரு - ஒளிநிறைந்த; மா - பெரிய; மணி - அழகு, துளசி; பூண் - அணி்தல்; குலாவி - நெருங்கிப் பழகி ~அளவளாவி)

திருமார்பு இருந்தவா காணீரே சேயிழையீர்! வந்துகாணீரே - அழகிய, புனிதத்தன்மையுடைய திருத்துழாய்மாலை, பேரொளி மிகுந்த கனமான இரத்தினமாலை (கௌஸ்துபம்), திருமறுவான திருமகள் ஆகிய மூவரும் சேர்ந்து விளக்கமாய் அமைந்து மின்னுகின்ற இந்த பிள்ளையின் திருமார்பை வந்து பாருங்கள். செம்மையான அணிகலன் பூண்டிருக்கும் பெண்களே வந்து இந்தப் பிள்ளையின் பொலிவான திருமார்பைப் பாருங்கள். (சேயிழை - செம்மையுடைய அணிகலன்)

பதவுரை:

தான் செய்த குறும்புத்தனத்திற்காக, யசோதையால் மிகப்பெரிய உரலில் கட்டப்பட்டு, பின் அந்த உரலை இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களை முறித்துவிட்ட இந்தப் பாலகனின், திருமார்பையும், திருமார்பில் மின்னுகின்ற திருமறுவான திருமகள், கனமான இரத்தினமணி, பொலிவுடைய திருத்துழாய் மாலை ஆகியவற்றையும் வந்து பாருங்கள். செம்மையுடைய அணிகலன் அணிந்திருப்பவர்களே வந்து பாருங்கள்.

4 comments:

Raghav said...

// எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ன்னு படிச்சது நினைவுக்கு வருமே! ;-))//

சரியாகச் சொன்னீர்கள் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உடம்புல சந்தனம் பூசுவாங்க, குருமா வக் கூடவா பூசிக்குவாங்கன்னு நினக்கப்படாது. ;-))//

ஆனா ஊனா உங்களுக்கு குருமா தான் வருது! அன்னிக்கும் என்னை அடியேன், குருமாயேன்-ன்னு சொன்னீக! ஏன்? குருமா-ன்னா ரொம்ப புடிக்குமோ? :)

குருமா மணிப்பூண் குலாவித் திகழும் - பாசுரத்திலேயே குருமா பத்தி வருதா! சூப்பரோ சூப்பர்! :)
********************************

இங்கு கண்ணனின் மார்பில் இவை இருந்ததாகப் பாடவில்லை!
சின்னக் குழந்தையின் மார்பில் கனமான மா மணிப் பூண் யாராச்சும் மாட்டுவாங்களா? மெல்லிய தங்கச் செயின்-ன்னா ஓக்கே! மாமணிப் பூண் என்பதெல்லாம் ரொம்ப வெயிட்டு! கொழந்தை கழுத்து என்னவாகும்? :)

குரு மா மணிப் பூண் = ஒளிரும் பெரிய மணிகளைப் பூண்டு
குலாவித் திகழும் = கொஞ்சிக் குலாவும்
திரு = அன்னை அலைமகள்
மார்பு இருந்தவா காணீரே = அவள் மார்பில் இருக்கும் வாகைக் காணீரே...
என்று பொருள் வரும்!

அதாச்சும் எல்லா அவதாரங்களிலும் அன்னையும், திருவாழித் திருச்சங்கும் பெருமானுடன் உடன் வருவார்கள்!

அன்னை, இறைவனின் மார்பை விட்டு ஒரு நொடிக்குள் நொடியும் நீங்காது இருப்பவள்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா! திரு மறுவாய், மச்சமாய் அவன் மார்பில் அம்சமாய் பொருந்தி விடுகிறாள்! அதான் குழந்தையாய் இருந்தாலும் கூட, அந்தத் திருமறுவான மச்சமாய் அவன் வல மார்பில் கொஞ்சிக் குலாவுகிறாள்!

கெளஸ்துபம் மிகவும் கனமான மணி! துளசியைக் குழந்தைக்குச் சாற்ற மாட்டார்கள்! எனவே திரு பிரியா மறு மார்வன் என்பது தான் சரி!

தமிழ் said...

Raghav said...

// எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ன்னு படிச்சது நினைவுக்கு வருமே! ;-))//

சரியாகச் சொன்னீர்கள் :)//

ஹி ஹி ஹி

அய்யோ மேலாளரு வர்றாரு...

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உடம்புல சந்தனம் பூசுவாங்க, குருமா வக் கூடவா பூசிக்குவாங்கன்னு நினக்கப்படாது. ;-))//

ஆனா ஊனா உங்களுக்கு குருமா தான் வருது! அன்னிக்கும் என்னை அடியேன், குருமாயேன்-ன்னு சொன்னீக! ஏன்? குருமா-ன்னா ரொம்ப புடிக்குமோ? :)//

அய்ய, சுத்தமா பிடிக்காது!! ஆமா, குருமா ன்னா என்னா?? ;-))
-----------------------------

குருமா மணிப்பூண் குலாவித் திகழும் - பாசுரத்திலேயே குருமா பத்தி வருதா! சூப்பரோ சூப்பர்! :)
********************************

இங்கு கண்ணனின் மார்பில் இவை இருந்ததாகப் பாடவில்லை!
சின்னக் குழந்தையின் மார்பில் கனமான மா மணிப் பூண் யாராச்சும் மாட்டுவாங்களா? மெல்லிய தங்கச் செயின்-ன்னா ஓக்கே! மாமணிப் பூண் என்பதெல்லாம் ரொம்ப வெயிட்டு! கொழந்தை கழுத்து என்னவாகும்? :)

குரு மா மணிப் பூண் = ஒளிரும் பெரிய மணிகளைப் பூண்டு
குலாவித் திகழும் = கொஞ்சிக் குலாவும்
திரு = அன்னை அலைமகள்
மார்பு இருந்தவா காணீரே = அவள் மார்பில் இருக்கும் வாகைக் காணீரே...
என்று பொருள் வரும்!

அதாச்சும் எல்லா அவதாரங்களிலும் அன்னையும், திருவாழித் திருச்சங்கும் பெருமானுடன் உடன் வருவார்கள்!

அன்னை, இறைவனின் மார்பை விட்டு ஒரு நொடிக்குள் நொடியும் நீங்காது இருப்பவள்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா! திரு மறுவாய், மச்சமாய் அவன் மார்பில் அம்சமாய் பொருந்தி விடுகிறாள்! அதான் குழந்தையாய் இருந்தாலும் கூட, அந்தத் திருமறுவான மச்சமாய் அவன் வல மார்பில் கொஞ்சிக் குலாவுகிறாள்!

கெளஸ்துபம் மிகவும் கனமான மணி! துளசியைக் குழந்தைக்குச் சாற்ற மாட்டார்கள்! எனவே திரு பிரியா மறு மார்வன் என்பது தான் சரி!//

துளசி, கௌஸ்தூபம், திருமகள் இவர்கள் மூவரும் இறைவனின் திருமார்பில் என்றும் நிலைத்திருப்பவர்கள்...