Sunday, September 6, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

பாடல் 11


நாள்களோர் நாலைந்து திங்களளவிலே*
தாளைநிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்*
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்*
தோள்கள் இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.


பொருள்:

நாள்களோர் நாலைந்து திங்களளவிலே -
கண்ணன், ஒரு நான்கு அல்லது ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, (திங்கள் - மாதம்)

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் -
தன் மலர் போன்ற மென்மையான பிஞ்சு பாதங்களை நீட்டி, வண்டிச் சக்கரத்தை உதைத்து, சகரவடிவில் வந்த சகடாசுரன் என்னும் அசுரனை வதம்புரிந்தான். (தாள் - பாதம்; சகடம் - வண்டி, சக்கரம்; சாடி - கொன்று)

கதைச் சுருக்கம்:


கண்ணன் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது, அவனை ஒரு மாட்டுவண்டியின் நிழலில் படுக்கவைத்திருந்தனர்.

கம்சன், கோகுலத்தில் இருந்த குழந்தை கண்ணனைக் கொல்ல, முதலில் பூதனை (பூதகி) என்னும் அரக்கியை அனுப்பினான். அவளைக் கண்ணன் கொன்றுவிடவே, இரண்டாவது முயற்சியாக, சகடாசுரன் என்னும் அசுரனை அனுப்பிவைத்தான்.


சகடாசுரன், கண்ணன் படுத்திருந்த வண்டியின் சக்கரத்திற்குள் சென்று, குழந்தை மேலேறிக் கொல்ல முயன்றான். குழந்தை கண்ணனோ, விளையாட்டுத் தனமாகக், காலை உதைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பாவனையில், சக்கரத்தை ஒரு உதை உதைத்தான்.

'மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது' என்பது போல், குழந்தையின் பிஞ்சு பாதம் பட்ட வேகத்தில் வண்டியின் சக்கரத் தூளாக நொறுங்கி, அதனுளிருந்த அசுரனும் கொல்லப்பட்டான். கொல்லப்பட்டான் என்பதையும் விட, இறைவனின் திருப்பாதம் பட்டு முக்தியடைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

வாள் கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான் -
  • கூர்வாள் கொண்டு, கொலைத்தொழில் புரியும், வளைந்த, நீண்ட பற்களை உடைய அசுரர்கள் பலரின் ஆருயிர்களைப் பறித்துக்கொண்டு, அவர்களின் ஆன்மாக்களுக்கு முக்தி அளித்தான்;
  • இதையே வாள்கொள் வளையெயிற்று ன்னு பொருள்கொள்ளலாம், அதாவது, ஒளியுடைய வளைந்த பற்களையுடைய அசுரர்கள் உயிர் வவ்வினான்;
  • மேலும், வளைந்த தந்தமுடைய, குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை பறித்துக்கொண்டவன் என்பதும் பொருத்தமுடையதே.
(வாள் - கூரிய ஆயுதம், ஒளி; எயிறு - பல்; யானைத் தந்தம்)

தோள்கள் இருந்தவா காணீரே சுரீகுழலீர்! வந்து காணீரே - ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோதே, சகடாசுரன் என்னும் அசுரனைத் தன்மலர்ப் பாதங்களால் உதைத்து வதம்புரிந்தான். கூர்வாள்கொண்டு கொலைத் தொழில் புரியும், ஒளியுடைய வளைந்த பற்களை உடைய அசுரர்கள் பல பேரைக் கொன்ற மாவீரனின் தோள்களுடைய வலிமையையும், வனப்பையும் வந்து பாருங்கள; சுருண்ட கூந்தலுடையவர்களே அசுரர்கள் பலரை வதம்புரிந்த இந்த வலிய தோள்களின் வனப்பை வந்து பாருங்கள்.
(சுரி - சுருண்ட; குழலீர் - கூந்தலுடையவர்கள்; சுரிகுழல் - பெண்)


பதவுரை:

பிறந்து, ஒரு நான்கு அல்லது ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, கம்சனால் அனுப்பப்பட்ட, சக்கரவடிவில் வந்த அசுரனை வதம் புரிந்தவனும், அதோடு நில்லாது, கொலைதொழில் புரியும் கூர்வாள் ஏந்திய, ஒளியுடைய வளைந்த பற்களைக் கொண்ட அசுரர்கள் பல பேரைக் கொன்று முக்தி அளத்தவனான, இவனின் தோள்கள் எத்துனை வலிமையானதாகவும், அழகுடையதாகவும் இருக்கின்றன என்பதை வந்து பாருங்கள். சுருண்ட குழலுடைய பெண்களே வந்து பாருங்கள்.

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சுரிகுழல் - பேரு நல்லா இருக்கே! :)

//நாள்களோர் நாலைந்து திங்களளவிலே//

நாலைந்து திங்கள்-ன்னா = 4x5 = 20 மாதமா? :)
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை-ன்னு வரும் போது, ஐயைந்துக்கு = 5X5 = 25-ன்னு தானே எடுத்துக்கறோம்? இங்கே மட்டும் எப்படி? :)

அதான் "ஓர்" நாலைந்து திங்கள்-ன்னு, "ஓர்" முன்னொட்டு கொடுக்கிறார்! சுமாரா "ஒரு" நாலஞ்சு மாசம்! :)

//தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்//

கள்ளச் சகடம் கலக்கு அழிய கால் ஓச்சி-என்பாள் என் தோழி! :)
பொண்ணு கால் ஓச்சி என்கிறாள்!
அப்பா தாளை நிமிர்த்து என்கிறார்!

ஓச்சல் = உயர்வு! நிமிர்தல்!

இப்படி திருவடிகள் தான் கண்ணனையும் காக்கிறது, நம்மையும் காக்கிறது, சகடன் போன்ற அசுரர்களையும் காத்து வீடு அளிக்கிறது!

அதான் ஓச்சி, நிமிர்ந்து என்று உயர்வைத் தரக் கூடிய அடிகளாகப் பாடுகிறார்கள் அப்பாவும் பொண்ணும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்//

குவலயா பீடம் என்னும் யானையின் எயிறு (தந்தம்) என்று பொருள் கொள்ள முடியாது! ஏன்னா வளை எயிறு! யானையின் தந்தம் வளைந்து இருக்காது! நீண்டு தான் இருக்கும்!

அசுரர்கள் என்றும் ஒருவாறு கொள்ளலாம்! அதை விடப் பொருத்தம் பூதனை தான்! அப்படித் தான் உரையாசிரியர்களும் கொண்டுள்ளனர்!

வாள் கொள் வளை எயிறு = வளைந்த பற்கள் = பேய்க்கு வாய்க்கு ரெண்டு பக்கமும் வளைஞ்ச பல்லு இருக்கும்-ல்ல? அது போல் வந்த பூதனையின் ஆருயிர் வவ்வினான், குடித்தான், கவர்ந்தான்!

சகடனை வதைத்த போது, அதுக்கு ஒரு மாசம் முன்னாடி தான் பூதனையை வதைத்ததும் நினைவுக்கு வருகிறது! இரண்டையும் சேர்த்துப் பாடுகிறார்!

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சுரிகுழல் - பேரு நல்லா இருக்கே! :)

//நாள்களோர் நாலைந்து திங்களளவிலே//

நாலைந்து திங்கள்-ன்னா = 4x5 = 20 மாதமா? :)
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை-ன்னு வரும் போது, ஐயைந்துக்கு = 5X5 = 25-ன்னு தானே எடுத்துக்கறோம்? இங்கே மட்டும் எப்படி? :)

அதான் "ஓர்" நாலைந்து திங்கள்-ன்னு, "ஓர்" முன்னொட்டு கொடுக்கிறார்! சுமாரா "ஒரு" நாலஞ்சு மாசம்! :)

//தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்//

கள்ளச் சகடம் கலக்கு அழிய கால் ஓச்சி-என்பாள் என் தோழி! :)
பொண்ணு கால் ஓச்சி என்கிறாள்!
அப்பா தாளை நிமிர்த்து என்கிறார்!

ஓச்சல் = உயர்வு! நிமிர்தல்!

இப்படி திருவடிகள் தான் கண்ணனையும் காக்கிறது, நம்மையும் காக்கிறது, சகடன் போன்ற அசுரர்களையும் காத்து வீடு அளிக்கிறது!

அதான் ஓச்சி, நிமிர்ந்து என்று உயர்வைத் தரக் கூடிய அடிகளாகப் பாடுகிறார்கள் அப்பாவும் பொண்ணும்! :)//

ஆண்டாள் பாசுரங்கள் எழுதும் போது, நீங்க பின்னூட்டத்துல சொன்னதெல்லாம் சேர்த்து தேநீர் - பசை செய்துட்டாவே போதும் போலிருக்கு....

நீங்களே எல்லா பாசுரமும் சொல்லிடறீங்க... ;-))

சோக்குக்குத்தான், சீரீயசா எடுத்துக்காதீங்க!! தொடர்ந்து கோதை குரல் ஒலிக்கட்டும்!!

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்//

குவலயா பீடம் என்னும் யானையின் எயிறு (தந்தம்) என்று பொருள் கொள்ள முடியாது! ஏன்னா வளை எயிறு! யானையின் தந்தம் வளைந்து இருக்காது! நீண்டு தான் இருக்கும்!//

வளைந்த தந்தங்கள் கொண்ட யானையை ல்லாம் நான் டிஸ்கவரி அலைவரிசையில பாத்துருக்கேனே....
----------------------
அசுரர்கள் என்றும் ஒருவாறு கொள்ளலாம்! அதை விடப் பொருத்தம் பூதனை தான்! அப்படித் தான் உரையாசிரியர்களும் கொண்டுள்ளனர்!

வாள் கொள் வளை எயிறு = வளைந்த பற்கள் = பேய்க்கு வாய்க்கு ரெண்டு பக்கமும் வளைஞ்ச பல்லு இருக்கும்-ல்ல? அது போல் வந்த பூதனையின் ஆருயிர் வவ்வினான், குடித்தான், கவர்ந்தான்!

சகடனை வதைத்த போது, அதுக்கு ஒரு மாசம் முன்னாடி தான் பூதனையை வதைத்ததும் நினைவுக்கு வருகிறது! இரண்டையும் சேர்த்துப் பாடுகிறார்!//

நன்றி இரவி!! ;-))