Sunday, September 6, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 15

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 15

நோக்கியசோதை நுணுக்கிய மஞ்சளால்*
நாக்குவழித்து நீராட்டும் இந்நம்பிக்கு*
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்*
மூக்கும் இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே.

பொருள்:

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் - யசோதை அன்னை, நல்ல மஞ்சள்எதுவென்றுத் தேடி தேடிப் பார்த்து, அதை, குழந்தையின் சிறுநாவினை வழிப்பதற்கு ஏற்ற அளவுடையதாய் சிறியதாய் நுணுக்கி

நாக்குவழித்து நீராட்டும் இந்நம்பிக்கு - சிறந்த, சிறிய மஞ்சளைத் தேடிக் கொண்டுவந்து அதனால், சிறுகுழந்தையான கண்ணனின் நாவினைக் கீறிவிடாது இலகுவாய் வழித்து, பதமாய் பையவாட்டிய நீரால் குளிப்பாட்டும் இந்த தலைவனுக்கு (நம்பி - தலைவன்)

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் - தத்தித் தத்திப் பேசும் மழலை மொழியும், கருணை மழைப்பொழியும் கார்முகில் வண்ணனின் செங்காந்தள் கண்களும், பவளவாயும், நவமணியும் மின்னுகின்ற குறுநகையும், (நயனம் - கண்; முறுவல் - புன்னகை)

மூக்கும் இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே - எள்பூ (எட்பூ) நாசியும், இப்படி ஒவ்வொன்றும் மாயக் கண்ணன், கார்முகில் வண்ணன் முகத்தில் அழகாய், அமைப்புடன் இருக்கின்ற முறையை வந்து பாருங்கள். அடர்த்தியான, கருங்கூந்தல் கொண்ட பெண்களே வந்து, இந்த கருணா மூர்த்தியின் முகழகைப் பாருங்கள்.

பதவுரை:

நல்ல மஞ்சளாகத் தேடித் தேடிப் பார்த்து, அதை குழந்தை கண்ணனின் வாய்க்கு ஏற்றவாறு சிறியதாக நுணுக்கி, அந்த மஞ்சளால் நாவினை வழித்து, பதமாக பையவாட்டிய நீரால் குளிப்பாட்டும் இந்த தலைவனுக்கு, மழலை மொழியும், கருணை ததும்பும் கண்களும், பவளவாயும், வசீகரப் புன்னகையும், எட்பூ நாசியும் என்று முகத்தில் ஒவ்வொன்றும் அமைந்துள்ள அழகை வந்து பாருங்கள். இருளைப் போன்று கரிய, மிகவும் அடர்த்தியான கூந்தலைக் கொண்ட பெண்களே, வந்து சர்வ இலட்சணங்களும் அமைந்திருக்கும், இந்த வசீகரனின் முக அழகை வந்து பாருங்கள்.

7 comments:

Anonymous said...

tamiz ennanga unga speedu jet vegattula podu. ..konjam rest eduttunkonga (paasuram 13 padavurai saripaarunga . i have doubt)

தமிழ் said...

srikamalakkanniamman said...

tamiz ennanga unga speedu jet vegattula podu. ..konjam rest eduttunkonga (paasuram 13 padavurai saripaarunga . i have doubt)//

பதவுரையின் பிழையைத் திருத்திவிட்டேன் என்று கருதுகிறேன். எழுதிமுடித்தவுடன், என்பிள்ளை விசைப்பலகையை வேகமாய் அழுத்தியதும், பலவார்த்தைகள் அழிந்துவிட்டன போலும். ;-((

பிழையைச் சுட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி கமலக்கண்ணிஅம்மன். ;-))

முகவை மைந்தன் said...

எழுதித் தொழுத எழிலா அழிந்த
மொழியும் பழுதாம் மொழிக்கென மாறன்
பிழையை உழந்தான் விழைந்து :-)

தமிழ் said...

முகவை மைந்தன் said...

எழுதித் தொழுத எழிலா அழிந்த
மொழியும் பழுதாம் மொழிக்கென மாறன்
பிழையை உழந்தான் விழைந்து :-)//

வெண்பா புலி முழிச்சுக்கிச்சு போல... ;-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முகவை மைந்தன் said...
எழுதித் தொழுத எழிலா அழிந்த
மொழியும் பழுதாம் மொழிக்கென மாறன்
பிழையை உழந்தான் விழைந்து :-)//

மொத்தம் பத்து ழ-கரம்ப்பா! :)

பிழையை உழந்தான் விழைந்து என்பது சூப்பர் ஈற்றடி முகவை மைந்தன்!

பிழையை உழந்தான் விழைந்தே தமிழில்
மழையைப் பொழிந்தான் மாமணி "மாறன்" :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாக்கும்
நயனமும்
வாயும்
முறுவலும்
மூக்கும்
-ன்னு என் கண்ணனின் எல்லா அங்கங்களையும் ஒரே பாட்டினில் காட்டினால் நான் தாங்குவேனா? :)

தமிழ் said...

வாக்கும்
நயனமும்
வாயும்
முறுவலும்
மூக்கும்
-ன்னு என் கண்ணனின் எல்லா அங்கங்களையும் ஒரே பாட்டினில் காட்டினால் நான் தாங்குவேனா? :)//

அதனாலத்தான் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு பாட்டும்ன்னு வெச்சுப்பாத்தாரு...

ஆனாலும் அந்த வசீகரனின் வசியம் செய்கின்ற முகத்துல மயங்கி அவரின் வாய்க்கும், வாக்கிற்கும் நயனத்திற்கும் மூக்கிற்கும் முறுவலுக்கும் உலகத்தில் எத உவமையா சொல்றது?? இனிமேல வேணும்ணா அந்த மாதிரி உருவாகலாம் இதுவரைக்கும் அவற்றை ஒத்த எதுவும் இல்லன்னு, பட்டுனு முடிச்சுட்டாரு.....