Thursday, September 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 19

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 19

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்*
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை*
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும்பரமன்தன்*
நெற்றி இருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும் - பெண் குழந்தைகள், தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற சிறு சிறு பொருட்களைக் கொண்டு, மணலில் சிறிய வீடு கட்டி விளையாடுவர். அவ்வாறு இந்த பெண்பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்த போது, அவர்கள் வைத்திருந்த, சிறிய முறம், சிறிய மண்பொருட்கள் மற்றும் அவர்கள் கைகளில் என்னவெல்லாம் வைத்திருந்தனரோ அதையும் (முற்றில் - சிறிய முறம்; தூதை - சிறுமண்கலம்; பூ - கொண்டிருத்தல்)

சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப் - சிறுமண் வீடு கட்டி விளையாடும், பெண்பிள்ளைகளைப் (சிற்றில் - சிறிய+இல் - சிறு வீடு; இழைத்து - உருவாக்கி; திரிதருவோர் - விளையாடுவோர்)

பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன் - அவர்களை வலுவாய்ப் பிடித்து, அவர்கள் கைகளில் இருப்பவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு ஓடும் இந்த பரமனின்

நெற்றி இருந்தவா காணீரே நேரிழையீர்! வந்துகாணீரே - அந்தப் பெண்பிள்ளைகளிடத்து இருக்கின்றவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு, அவர்களோ, பெரியவர்களோ தன்னைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வேகமாக ஓடுகின்ற இந்த பிள்ளையின் நெற்றியினை வந்து பாருங்கள். அழகிய பெண்களே, இந்த பிள்ளை ஒருமுக சிந்தனையோடு பதற்றமாய் ஓடும் பொழுது அதன் அழகை வந்து பாருங்கள். (நேரிழை - பெண்; நேரிழையீர் - பெண்களே)

பதவுரை:

சிறு முறம், சிறு மட்கலம் மற்றும் அவர்கள் கையில் கிடைத்தவற்றை எல்லாம் வைத்து, சிறுவீடு கட்டி இந்த பொருட்களை எல்லாம் வைத்து பெண்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில், இந்த குட்டிக் கண்ணன் அங்கு இரகசியமாய் சென்று அவர்களிடமிருக்கின்ற அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு வேகமாய் ஓடி வரும் இந்த பரமனின் சிறு நெற்றியின் அழகினை வந்து பாருங்கள். அழகிய பெண்களே, தன் வயதொத்த பெண்பிள்ளைகளிடமிருக்கின்ற பொருட்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்ற இந்த குறும்பு பிள்ளையின் நெற்றியழகை வந்துப் பாருங்கள்.

4 comments:

Anonymous said...

அந்தப் பெண்பிள்ளைகளிடத்து இருக்கின்றவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு, அவர்களோ, பெரியவர்களோ தன்னைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வேகமாக ஒருமுக சிந்தனையோடு பதற்றமாய் ஓடுகின்ற ;)

ஹா ஹா ஹா! ஹா ஹா ஹா1
Enna kurumbu pudinga kannanai

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நெற்றி இருந்தவாகாணீரே//

பெண் குழந்தைகள் கிட்ட இருந்து முறமும் மண்கலமும் பறித்துக் கொண்டு ஓடும் போது இந்தக் கண்ணன் நெற்றியை ஏன் காட்டுறாரு? ஹிஹி! மாட்டிக்க கூடாதே என்ற வேகத்தில் ஓடும் அவனுக்கு வேர்த்து ஊத்துது! நெற்றி வியர்வை நிலத்தில் வழிய ஓடுறான்! அதான் நெற்றி இருந்தவா காணீரே! :)

தமிழ் said...

srikamalakkanniamman said...

அந்தப் பெண்பிள்ளைகளிடத்து இருக்கின்றவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு, அவர்களோ, பெரியவர்களோ தன்னைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வேகமாக ஒருமுக சிந்தனையோடு பதற்றமாய் ஓடுகின்ற ;)

ஹா ஹா ஹா! ஹா ஹா ஹா1
Enna kurumbu pudinga kannanai//

அன்பா கூப்புட்டா அவனே வந்து சரண்டர் ஆகிடுவான். ஓடவேண்டாம், ஒருமனதாய் அவனை நினையுங்கள்!! எளிதில் அகப்படுவான்!! :-))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நெற்றி இருந்தவாகாணீரே//

பெண் குழந்தைகள் கிட்ட இருந்து முறமும் மண்கலமும் பறித்துக் கொண்டு ஓடும் போது இந்தக் கண்ணன் நெற்றியை ஏன் காட்டுறாரு? ஹிஹி! மாட்டிக்க கூடாதே என்ற வேகத்தில் ஓடும் அவனுக்கு வேர்த்து ஊத்துது! நெற்றி வியர்வை நிலத்தில் வழிய ஓடுறான்! அதான் நெற்றி இருந்தவா காணீரே! :)//

வியர்த்து ஊத்துகிறதா??? இவனும் இரஜினி மாதிரி ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கேப்பானோ??!! :-))