Thursday, September 3, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 2

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம்திருமொழி - சீதக்கடல்
பாடல் 2

முத்தும்மணியும் வயிரமும் நன்பொன்னும்*
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல்* எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்*
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே.

பொருள்:

முதல் பாடலில் குழந்தை கண்ணனின் பாதமலர்களைப் பற்றி பேசினாள் யசோதை. இந்தப்பாடலில், அவனின் பாத விரல் அழகை வருணிக்கிறார்.

இந்தப் பாடலை,
மணிவண்ணன் பாதங்கள் எங்கும்
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தலைப்பெய்துத் தத்திப்பதித்தாற்போல் பத்துவிரலும்
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்து காணீரே.


அப்படின்னு மாத்திப் படிச்சா எளிமையா பொருள் புரிந்துவிடும்.

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் - முத்து, நீலமணி, வைரம் முதலான நவஇரத்தினங்களுடன், தூய்மையான தங்கத்தையும்
(நவரத்தினங்கள் - முத்து, பவழம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நீலம், கோமேதகம், புட்பராகம்)

தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் - நவமணிகளை எல்லாம் ஒன்றுகூட்டி, அவற்றை நிரலாகப் பரவி பதித்ததைப் போல், (தத்தி - பரவி; தலைப்பெய்தல் - ஒன்றுகூடுதல் )

எங்கும் பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள் - நீலமணிவண்ணனின், நீலமணிவண்ண உடலுடைய கண்ணபிரானின் பாதங்களில் உள்ள பத்துவிரல்களும், பாதவிரல்கள் நுனிப்பகுதியில் சற்று உருண்டையாக இருக்கும். விரலின் நுனிப்பகுதியில் இருக்கும் நகக் கண்கள் ஒவ்வொன்றும் நவரத்தினங்களைப் போல் பொலிந்தனவாம்.

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே - 'நீலமணிவண்ணனின் பாதங்களில் உள்ள பத்துவிரல்களும், தங்கத்துடன், நவரத்தினங்களையும் ஒன்றுகூட்டி நிரலாக வைத்ததை ஒத்திருக்கின்ற அழகினைப் பாருங்களேன்; ஒளிவீசும் நெற்றியினை உடையவர்களே வந்து பாருங்கள்', என்று யசோதை அழைக்கிறாள். (ஒண்ணுதல் - ஒளிபொருந்திய நெற்றி~ நுதல் - நெற்றி)


பதவுரை:

'நீலமணிவண்ணத்தில் உடலினையுடைய குழந்தை கண்ணபிரானின், பாதங்களில் உள்ள விரல்கள் யாவும், முத்தும், மணியும், வைரமும் உள்ளிட்ட நவஇரத்தினங்களுடன், தூய பசுந் தங்கத்தையும் ஒன்றாய் கலந்துகூட்டி, அவற்றை ஒவ்வொரு விரலுக்கும் வரிசையாக வைத்ததைப் போன்று இருக்கின்ற அழகினைப் பாருங்கள். ஒளிருகின்ற நெற்றியினை உடையவர்களே இங்கே வந்து, கண்ணனின் பாதவிரல்களில் நவமணிகளும் ஒன்று கூடி ஓரிடம் அமைந்துள்ள அழகினை வந்து பாருங்கள்!

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மணி வண்ணன்-ன்னு சொல்வாய்ங்க! தெரியும்!
அவன் பாதங்களும் மணி பாதங்கள்-ன்னு நல்லாவே காட்டுது இப்பாசுரம்! :)

//ஒத்திட்டிருந்தவா//

பிறந்த குழந்தைக்குக் கால் விரல்கள் ஒன்னோட ஒன்னு ரொம்ப வித்தியாசமா இருக்காது! எல்லாம் ஒன்னே போல் தான் இருக்கும்! அதான் ஒத்திட்டு இருந்தவா! :)

தமிழ் said...

இந்த இரண்டாம் திருமொழியின் பாசுரங்களில் இருந்தவா என்று வருகின்றன....

இருந்தவா என்றால் இருந்தவாற்றை, இருந்த அழகை, இருந்த அமைப்பை அப்படின்னு சொல்லலாம்.