Thursday, September 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 20

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 20

அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக் கொண்டு*
கழல்கள் சதங்கை கலந்து எங்குமார்ப்ப*
மழகன்றினங்கள் மறித்துத் திரிவான்*
குழல்கள் இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.

பொருள்:

அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு - உள்ளங்களையில் பசும்பொன்னாலான அழகிய நீண்ட கோலினை வைத்திருக்கின்ற (பைம்பொன் - பசும்பொன்; கோல் - தடி, குச்சி; அங்கை - உள்ளங்கை)

கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப - கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் சதங்கை கொலுசு அணியும் வழக்கம் பெண்களுக்குரியது. ஆனால், ஆண்களும் காலில் கழல் அணிந்து கொள்வர். காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக்கழலைத்தான்.

கிண்கிணிகள் நிறைந்த கழல்கள் கண்ணன், கால் அசையும் பொழுதெல்லாம் ஒலிஎழுப்புகின்றன. அவ்வொலி எங்கும் எதிரொலிக்கின்றது. (கழல் - வீரக்கழல், காலில் அணியும் ஒருவகை அணி; சதங்கை - கிண்கிணி, ஆர்ப்ப - ஒலிக்க)

மழகன்றினங்கள் மறித்துத் திரிவான் - முதல் இரண்டடிகளிலேயே நமக்கு, எத்தகைய சூழல் என்று உணரக்கூடியதாய் உள்ளன; மூன்றாமடி அதை உறுதி செய்துவிடுகிறது. சிறு கன்றுக் குட்டிகள் எப்போதும் ஓரிடம் நில்லாது, அவ்வப்போது தன் தாயை விட்டுப் பிரிந்து சென்று பரந்த வெளியில் துள்ளித் துள்ளி விளையாடும். அவ்வாறு தனிமையில் விளையாடுவது கானகத்தில் க்ன்றிற்கு நல்லதல்ல. விலங்குகள் ஏதும் தாக்கிவிடக்கூடும். எனவே, கன்றுக்குட்டிகளை, எங்கும் தனித்து சென்றுவிடாது மறித்து, ஆநிரைகளின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் திரிபவனின்

கையில் நீண்ட கோலினைக் கொண்டு, மாடு மேய்க்கச் செல்கையில் கன்றுகுட்டிகள் அங்குமிங்கும் ஓடிவிளையாடும் பொழுது, அவற்றை மறித்து மந்தையோடு சேர்த்துவிட்டு, அவற்றின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் திரிபவனின் (மழகன்று - கன்றுக் குட்டி)

குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே - அழகிய இளம்பெண்களே! கையில் நீண்ட கோல் கொண்டு, காலில் வீரக்கழல் அணிந்து, அங்குமிங்கும் குறும்பு செய்து ஓடிவிளையாடும் கன்றுக்குட்டிகளை மறித்து மந்தையோடு இணைத்து, அவற்றின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் திரிபவனின் கூந்தலழகை வந்து பாருங்கள். (குழல் - கூந்தல்) குழல் - கூந்தல்; குழை - குண்டலம்

இந்த இருபது பாடல்களிலும், குழந்தை கண்ணனின், அடி முதல் முடி வரை ஒவ்வொரு பாகமாக யசோதை அன்னைத் தான் அனுபவித்து இன்புற்றதை, மற்ற பெண்களையும் அழைத்துக் காண்பித்து மகிழ்கிறார்.

பதவுரை:

அழகிய பசும்பொன்னால் செய்த கோலினைக் கையில் ஏந்திக் கொண்டு, கால்களில் வீரக்கழலின் கிண்கிணிகள், அவன் நடக்கும் போதெல்லாம் ஒலி எழுப்புகின்றன; அவ்வொலி கானகமெங்கும் எதிரொலிக்க, மந்தையை விட்டுத் தனித்துச் செல்லும் மழலைக் கன்றுக்குட்டிகளை மறித்து மந்தையோடு இணைத்து, ஆநிரைகளின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் அலைந்து திரிபவனின் கூந்தலழகை வந்து பாருங்கள். அழகிய இளம்பெண்களே! இந்த கோவலக் குமரனின் கூந்தலழகை வந்து பாருங்கள்.

6 comments:

Anonymous said...

1. இளஞ்சிவப்பு வண்ணப் பாதங்களை
2. கண்ணனின் பாதவிரல்
3. கணுக்காலின் அழகினை,
4. முழங்காலழகை
5. மார்பை இரண்டாகப் பிளந்தவனின் தொடையழகை
6. பாலகனின் முத்தம் இருக்கின்ற அழகை
7. அழகிய இடையினை.
8. அழகிய தொப்பூள்
9. வயிற்றழகை
10. திருமார்பையும், திருமறுவான திருமகள்
11. வலிமை தோள்கள்
12. கைகளை
13. சிறுதொண்டை
14. சிவந்த வாயினை
15. முக அழகை
16. கண்ணழகை
17. கரிய புருவத்தின் அழகினை
18.காதுகள அழகினை
19.நெற்றியின் அழகினை
20.கூந்தலழகை

Aaha arumai sri Krishnarai nam mun niruti vittare periyalwar
Arumaiyana vilakkangal tamizh
20-th paasurathil kannan aaniraigalai olungupadutiyadaaga kooriyirukiraar
Oru raja veetu pillai inda velaigalai seigiraare!!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக் கொண்டு//

ஓ...மாட்டை மறித்து மந்தையில் தள்ள தங்கத்தில் செஞ்ச கோலா? கண்ணன் பணக்காரனாத் தான் இருப்பான் போல! ஏழை வூட்டு ஆயன்-ல்ல நெனைச்சேன்! :))

தமிழ் said...

srikamalakkanniamman said...


Aaha arumai sri Krishnarai nam mun niruti vittare periyalwar
Arumaiyana vilakkangal tamizh
20-th paasurathil kannan aaniraigalai olungupadutiyadaaga kooriyirukiraar
Oru raja veetu pillai inda velaigalai seigiraare!!!!!

வாங்க கமலக்கண்ணியம்மன்!

செய்யும் தொழிலே தெய்வம்; கோமாதா எங்கள் குலமாதா என்று ஆநிரைகளை நாம் தெய்வமாகத்தானே மதிக்கிறோம்.

அது மட்டுமல்லாது, கண்ணன் ஆநிரைகளை மேய்ப்பது, மனித மனங்களை மேய்ப்பதற்கு ஒப்பானதைக் குறிக்கின்றது. ;-))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக் கொண்டு//

ஓ...மாட்டை மறித்து மந்தையில் தள்ள தங்கத்தில் செஞ்ச கோலா? கண்ணன் பணக்காரனாத் தான் இருப்பான் போல! ஏழை வூட்டு ஆயன்-ல்ல நெனைச்சேன்! :))//

வாங்க இரவி,

கோ வலன் புதல்வனாச்சே!! நந்தகோபர் வசதியானவர்தானே... :-))

Radha said...

பாதாதி கேச வர்ணனை பாசுரங்களை இவ்வளவு விரைவில் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து கண்ணன் அருள் புரிய வேண்டுகிறேன்.

தமிழ் said...

Radha said...

பாதாதி கேச வர்ணனை பாசுரங்களை இவ்வளவு விரைவில் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து கண்ணன் அருள் புரிய வேண்டுகிறேன்.//

மிக்க நன்றி இராதா!!

தொடர்ந்து வருகைதாருங்கள்!! ;-))