Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 4

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 4

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண*
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்*
பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்*
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே.

பொருள்:

உழந்தாள் நறுநெய் ஓரோர் தடாவுண்ண - அரும்பாடுபட்டு, இந்த குட்டி வாலு கண்ணனையும் வெச்சிகிட்டு, யசோதை அம்மா, பாலிலிருந்து பக்குவமாய் முறையாய் எடுத்து, பானைகளில் பத்திரமாய் வைத்திருந்த நெய்யையெல்லாம், ஒவ்வொரு பானையா கபலீகரம் செய்த; :-))
---காய்ச்சிய பாலில் உரை(கொஞ்சம் தயிரிட்டு)யிட்டு வைத்து, அதை தயிராக்கி, தயிரை நன்கு கடைந்து அதிலிருந்து மணம்மிகுந்த வெண்ணெயைப் பக்குவமாய் எடுத்து, ஒவ்வொருநாளும் சேரும் வெண்ணெயை சேர்த்து வைத்து, அவற்றைப் பாங்காய் காய்ச்சி நெய்யாக்கி, பானைகளில் சேர்த்து வைத்திருந்தாள் யசோதை. (உழந்தாள் - முயன்று நெய்யினை சேர்த்து வைத்தவள்; ஓரோர் - ஒவ்வொரு, தடா - பானை)

குழந்தை கண்ணனோ, வெண்ணெயோடு, மணம் மிகுந்த நெய்யையும் சேர்த்து, ஒவ்வோர் பானையாக சாப்பிட்டுவிட,

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில்மத்தின் - யசோதை பலநாட்களாய் முயன்று சேர்த்துவைத்த வெண்ணெயையும், நெய்யையும் உண்டுத் தீர்த்ததனாலும், அளவுக்கு மீறி உட்கொண்டால் குழந்தைக்கு செரிமானமாகாது போய்விடும் என்று அஞ்சியும், அக்கறையுடன் கூடிய செல்லக் கோபத்தினால், நெய் திருடி உண்டு, அன்னைக்கு அஞ்சி தூண் மறைவில் மறைவாய் நின்ற கண்ணனைத் தன்னருகே இழுத்து, தயிரினைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதற்கு வைத்திருந்த அழகிய மத்தினுடைய, (எரிவு - கோபம்; எழில் - அழகு; மத்து - தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்கப் பயன்படுத்தும் பொருள்)

பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் - தயிர், கொஞ்சமாய் இருந்தால் நாம் வெறும் கையால் சிறு மத்தினைக் கொண்டு கடையலாம். ஆனால், ஆயர்ப்பாடியில் பால்வளம் மிகுந்திருந்ததினால், நிறைய தயிரினை, பெரிய மத்தைக் கொண்டு கடைய வேண்டியிருக்கும். அத்தகைய நிலையில் வெறும் கையினால் உருட்டி தயிர் கடைவது சிரமமானதாகும். எனவே, மத்தின் தண்டுப் பகுதியில் கயிற்றைச் சுற்றிவைத்து, அந்த கயிற்றின் இரு முனைகளையும் பிடித்து, மாற்றி மாற்றி இழுத்தால் தயிர் கடைவது எளிமையாக இருக்கும்.

அருகிலிருந்த தயிர் கடையப் பயன்படுத்திய கயிற்றை எடுத்து ஓங்கிக் கொண்டே யசோதை, கண்ணனைத் துரத்த, அவனும் பயந்துபோய், அவ்விடம் நிற்காது, அங்கும் இங்கும் ஆட்டம் ஆடி, பின் யசோதை அருகில் வந்தவுடன், சட்டென்று கீழே முழங்காலிட்டு, தவழ்ந்துகொண்டே யசோதையிடமிருந்து தப்பிச் சென்றுவிட்டான். (பழந்தாம்பு - பயன்படுத்திய தாம்பு; தாம்பு - கயிறு; ஓச்ச - துரத்த; விரட்ட)

முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே - இவ்வாறு என்னிடம் இருந்து, தவழ்ந்து கொண்டே தப்பிச் சென்ற மாயவனின் முழந்தால் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை, சிறுமிகளே, இளம்பெண்களே அனைவரும் வந்து பாருங்கள். அவன் முழங்காலழகையும், அதைக் கொண்டு அவன் தப்பிக்கும் அழகையும் வந்து பாருங்கள். (முழந்தாள் - முழங்கால், காலின் முட்டிப் பகுதி)

பதவுரை:

யசோதை, அரும்பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த மணமிகுந்த நெய்யினை வைத்திருந்த பானைகளை, ஒவ்வொரு பானையாய் கண்ணன் உண்டுவிட்டான். அதனால் கோபம் கொண்ட யசோதை அன்னை, தூண் மறைவில் நின்ற கண்ணனை இழுத்து, தயிர் கடைவதற்கு பயன்படுத்திய அழகிய மத்தின், கயிற்றினைக் கொண்டு அவனை மிரட்டினாள். கண்ணனோ அன்னை அடித்துவிடுவாளோ என்ற பயத்தில் முழங்காலால் தவழ்ந்துச் சென்றுத் தப்பிவிட்ட, மாலவனின் முழங்காலழகை, ஆயர்பாடி சிறுமிகளே வந்து பாருங்கள்! அவன் முழங்கால் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை பாருங்கள்.

5 comments:

Radha said...

யப்பா சாமி !! இந்த வேகத்துல போனா.... நாங்க எல்லாம் படிக்க வேணாமா ? :-)
பின்னாடி தான் ஒடி வந்து பிடிக்கனும் போல இருக்கு...:-)

அப்பறம், விளக்கங்களுக்கு ஏற்ற அருமையான படங்கள். இவற்றை பின்னாளில் யாரவது(நான் தான் :-)) சுட்டால் ஒத்துக்கொள்வீர்களா?

~
ராதா

Radha said...

யப்பா சாமி !! இந்த வேகத்துல போனா.... நாங்க எல்லாம் படிக்க வேணாமா ? :-)
பின்னாடி தான் ஒடி வந்து பிடிக்கனும் போல இருக்கு...:-)

அப்பறம், விளக்கங்களுக்கு ஏற்ற அருமையான படங்கள். இவற்றை பின்னாளில் யாராவது (நான் தான் :-)) சுட்டால் ஒத்துக்கொள்வீர்களா?

~
ராதா

தமிழ் said...

Radha said...

யப்பா சாமி !! இந்த வேகத்துல போனா.... நாங்க எல்லாம் படிக்க வேணாமா ? :-)
பின்னாடி தான் ஒடி வந்து பிடிக்கனும் போல இருக்கு...:-)//

ஒரு மாசத்துக்கு முப்பது ன்னு எழுதினாலும் குத்து மதிப்பா 10 வருடங்கள் ஆகும்... ;-))

அதனாலத்தான், இப்ப என்ன செய்யலாம்...
-----------------------------
அப்பறம், விளக்கங்களுக்கு ஏற்ற அருமையான படங்கள். இவற்றை பின்னாளில் யாரவது(நான் தான் :-)) சுட்டால் ஒத்துக்கொள்வீர்களா? //

அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டோம்... ;-)) இவைல்லாம் கூகிள் ல இருந்து எடுத்தவைத்தான்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உழந்தாள்
இழந்தாள்
பழந்தாம்
முழந்தாள்
-ன்னு என்னமா சொல்லாட்சி! யப்பா! பெரியாழ்வார் பெரிய ஆழ்வார் தான்! :)

ரொம்ப நல்லா இருக்குங்க இந்தப் பாசுரம்! எங்க வாழைப்பந்தல் கிராமத்து மச்சு வீட்டை ஞாபகப் படுத்துது!

அடுக்கின பானை, உறியில் பானை, நெடு மத்து, குறு மத்து, பழந் தாம்பல் கயிறு எல்லாம் அப்படியே காட்சியா விரியுது! :)

//பழந் தாம்பல்//

மாடு ஓட்டிப் பயன்படுத்திய பழைய தாம்புக் கயிற்றைத் தான் தயிர் கடைய பயன்படுத்துவார்கள்!
புது கயிறு கையை அறுக்கும்!

அப்பறம் ஆயர்பாடி பெண்களின் கை சொர சொர-ன்னு ஆயீருமே! அது நம்ம கண்ணனுக்குத் (எனக்கும்) தானே கஷ்டம்? :) அதான் பழந் தாம்பல் என்கிறார்! :))

தமிழ் said...

@KRS...
//பழந் தாம்பல்//

மாடு ஓட்டிப் பயன்படுத்திய பழைய தாம்புக் கயிற்றைத் தான் தயிர் கடைய பயன்படுத்துவார்கள்!
புது கயிறு கையை அறுக்கும்!//

பழையக் கயிற்றைத் தயிர் கடையப் பயன்படுத்துவார்கள்... சரிதான்.

இங்கு ஆழ்வார், சொன்னது, தயிர் கடைய பயன்படுத்திய பழந்தாம்பு...

அப்படின்னா, ரொம்ப பழமையான கயிறு!! ;-))