Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 5

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 5

பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு*
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை*
மறங்கொளிரணியன் மார்பை முன்கீண்டான்*
குறங்குகளை வந்துகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.


பொருள்:

பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு - பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு - ஒரு மானுடப் பெண்ணை போல் உருமாறி, குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்திட்ட பூதனை என்னும் அரக்கியிடத்து பாலுஞ்சுவது போல், பாலோடு, அவள் உயிரையும் சேர்த்து உண்டுவிட்டு,

கதைச்சுருக்கம்:
தேவகியின் திருவயிற்றுதிக்கும் எட்டாவது பிள்ளை, கம்சனின் காலனாக இருப்பவன் என்று அசரீரி கம்சனிடத்து சொன்னதைக் கேட்டு, தங்கையான தேவகியையும் தேவகியின் கணவனையும் சிறையிலடைத்து வைத்துவிட்டான்.

தேவகியின் ஏழாவது கருவில் வந்த பலராமனை, கருவிலேயே இரோகிணியின் கருவிற்கு மாற்றப்பட்டுவிட்டது. எட்டாவது குழந்தையாய் கண்ணன் பிறந்தான்.
அவன் பிறந்தவுடனேயே, பெற்றோர்க்கு தன் சுயரூபக் காட்சியைக், சங்கு சக்கரங்கள் ஏந்திய கைகளுடன் பெற்றோர்க்குத் தெய்வக் குழந்தையாய்க் காட்சியளிக்க, பதறிப் போனாள் தேவகி. தேவகியின் வேண்டுகோளுக்கிணங்கி மானுடக் குழந்தையாக மாறினான் கண்ணன்.

இரவில், சிறைச்சாலையில் பிறந்திருந்த கண்ணனை, இரவோடு இரவாக, வசுதேவர் குழந்தையைக் கொண்டு சென்று தன் நண்பனான நந்தகோபரிடத்து, கொடுத்துவிட்டு, அவருடைய பெண்பிள்ளையை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

மறுநாள் காலையில், கம்சன், மாற்றப்பட்ட குழந்தையை சுவற்றில் வீசிக் கொல்ல முயன்ற போது, அது, 'கம்சா! உன்னைக் கொல்லப் போகும் தெய்வக்குழந்தை பாதுகாப்பாய் வேறிடத்து உள்ளது. அவன் கையில் நீ இறக்கப் போவது உறுதி!' என்று கூறிவிட்டு விண்ணிற்கு பறந்து சென்றது.


அதன் பிறகு, தன் தங்கையின் குழந்தை ஆயர்ப்பாடியில் இருப்பதை அறிந்து, குழந்தையைக் கொல்வதற்காக ''பூதனை'' என்னும் அரக்கியை அனுப்பி வைத்தான் கம்சன்.


பூதனையும், சாதாரண மானிடப் பெண்ணைப் போல் உருமாறி, தன் மார்பில் கொடிய விடத்தைத் தடவிக் கொண்டு நந்தகோபரின் மாளிகைக்கு வந்தாள். அழுகின்ற குழந்தையை ஆற்றுவது போல், அவனுக்கு நஞ்சுப் பாலைக் கொடுத்துவிட்டாள் பூதனை. குழந்தையும் அவளிடத்து பாலுண்ணுவது போல் அவளுடைய உயிரையும் அவ்வழியே உண்டுவிட்டது.

அரக்கியாக அல்லாமல், மானுடப் பெண்ணைப் போல் உருமாறி வந்த பூதனையிடத்து, மிகவும் சுவைத்துப் பாலுண்ணும் பாவனை செய்து, பாலுடன் அவள் உயிரையும் சேர்த்து உண்டுவிட்டு (பிறங்கிய - நிலைமாறிய)

உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை - பூதனையைப் பாலுண்ணுவது போல் அவளைக் கொன்றுவிட்டு, ஏதுமறியாது உறங்குவது போல் பாசாங்கு செய்த இந்த சிறுக் குழந்தை

மறங்கொளிரணியன் மார்பை முன் கீண்டான் - மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் - மிகுந்த வீராவேசங் கொண்டு நரசிம்மரிடம் போரிட்ட இரணியனை, தன் தொடை மேல் படுக்க வைத்து, அவன் மார்பைப் பிளந்தானுடைய (மறம் - வீரம்; கீண்டான்- பிளந்தான், கீண்டல் - கிழித்தல், பிளத்தல்)

குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே - மிகுந்த வீராவேசங் கொண்டு போரிட்ட இரண்யகசிபுவைத் தன் தொடை மேலேயே வைத்து அவன் நெஞ்சைப் பிளந்தவனின் தொடையழகை வந்து பாருங்கள். சிறுகுழந்தை ஏந்திய அன்னையர்களே வந்து அவன் தொடையழகைப் பாருங்கள். (குறங்கு - தொடை)

பதவுரை:

அரக்கியாக இல்லாமல், மானுடப் பெண் போல் உருமாறி குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியிடத்து பாலுண்ணும் போது, பாலோடு அவள் உயிரையும் சேர்த்து உண்டுவிட்டு, ஒன்றும் அறியாத பச்சிளம் பிள்ளையாய் உறங்குவது போல் பாசாங்கு செய்த இந்த குழந்தை, வீராவேசங்கொண்டு போர் புரிந்த இரணியனைத் தன் தொடைகள் மேல் வைத்து அவன் மார்பை இரண்டாகப் பிளந்தவனின் தொடையழகை வந்து பாருங்கள். சிறு குழந்தைகளைக் கொண்டுள்ள அன்னையர்களே இங்குவந்து, இச்சிறுப்பிள்ளையின் தொடையழகையும் வலிமையையும் வந்து பாருங்கள்!

6 comments:

Anonymous said...

தேவகியின் திருவயிற்றுதிக்கும் எட்டாவது பிள்ளை, கம்சனின் காலனாக இருப்பவன் என்று அசரீரி கம்சனிடத்து சொன்னதைக் கேட்டு, தங்கையான தேவகியையும் தேவகியின் கணவனையும் சிறையிலடைத்து வைத்துவிட்டான்


Antha asariri kooriyavan en kaila kedachaan avana konnuduven
Pinna ennanga asariri kooramal irundaal namma kananuku ivlo
Prachanaigal vandu irukkadulla! Happyaa irundiruppar

தமிழ் said...

@sri kamalakkanniamman...
Antha asariri kooriyavan en kaila kedachaan avana konnuduven
Pinna ennanga asariri kooramal irundaal namma kananuku ivlo
Prachanaigal vandu irukkadulla! Happyaa irundiruppar//

so funny nga neenga...

அசரீரி ன்னா குரல் மட்டும் தான், அதுக்கு உருவமே கிடையாது... அது எப்படி உங்க கையில கிடைக்கும்.... ;-)))

இப்பவும் அவர் happy ஆ தான் இருக்கார். தேவகியும், வசுதேவரும் தான் பாவம்... ;-((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குறங்குகளை வந்துகாணீரே //

தொடையழகு சூப்பரு!
குரங்கு-குறங்கு இனி ஜாக்கிரதையா, எழுத்துப்பிழை இல்லாம எழுத முடியும்! :)

குழந்தைக்கு யார் வேண்டுமானாலும் பால் ஊட்டலாமா?
எப்படி பூதனை ஊட்ட முடிந்தது? ஆயர்பாடியில் ஒப்புக் கொண்டார்கள்? அல்லது கண்டும் காணாது விட்டார்கள்?

நகைச்சுவையாக ஒரு வியாக்யானம் உண்டு:
இராமன் அம்மாவிடம் மட்டுமே பால் குடித்தான் - சாதுவான பிள்ளை!
கண்ணனோ - கொஞ்சம் பேயிடமும் குடித்தான் அல்லவா? அதான் அத்தனை பொல்லாத்தனம்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Antha asariri kooriyavan en kaila kedachaan avana konnuduven
Pinna ennanga asariri kooramal irundaal namma kananuku ivlo
Prachanaigal vandu irukkadulla//

ஹா ஹா ஹா
கமலக் கண்ணியம்மன், சூப்பராச் சொன்னீங்க! அசரீரி (உடம்பில்லாதவன்) கையில கிடைக்க மாட்டான் என்றாலும், அடுத்த முறை அவன் குரல் விடும் போது, அவனுக்கு உங்க மேல கொஞ்சம் பயம் இருக்கும்! :)

நல்ல பாவனை! இதுவே ப்ரேம பக்தி! வாழி! வாழி! :)
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூடலாமே!

இராமனின் போர்க்களத்தில் இலக்குவன் நாகாஸ்திரத்தால் சாய்ந்தான் என்று உபன்னியாசம் கேட்டு, இராமனுக்கு உதவி செய்ய, குலசேகராழ்வார் படை திரட்டிய கதை தான் ஞாபகம் வருது! :)

தமிழ் said...

@KRS...
குழந்தைக்கு யார் வேண்டுமானாலும் பால் ஊட்டலாமா?
எப்படி பூதனை ஊட்ட முடிந்தது? ஆயர்பாடியில் ஒப்புக் கொண்டார்கள்? அல்லது கண்டும் காணாது விட்டார்கள்?//

கிராமத்தில் பொதுவாக, தாயிடம் பால் பத்தாது போனால், வேறு அன்னையர் கொடுப்பார்கள்... அவர்கள் அவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
--------------------------
நகைச்சுவையாக ஒரு வியாக்யானம் உண்டு:
இராமன் அம்மாவிடம் மட்டுமே பால் குடித்தான் - சாதுவான பிள்ளை!
கண்ணனோ - கொஞ்சம் பேயிடமும் குடித்தான் அல்லவா? அதான் அத்தனை பொல்லாத்தனம்! :))//

பேயிடம் கொஞ்சம் பால் மட்டுமா குடித்தான், பேயையே குடித்தவன் அல்லவா?? ;-))

Anonymous said...

அசரீரி (உடம்பில்லாதவன்) கையில கிடைக்க மாட்டான்

sareenga krs