Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 9

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 9

அதிரும் கடல்நிற வண்ணனை* ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து*
பதரப்படாமே பழந்தாம் பாலார்த்த*
உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே.

பொருள்:

அதிரும் கடல்நிற வண்ணனை - அலைகடல் ஆர்ப்பரிக்கும் பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை

ஆய்ச்சி மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து - ஆய்ச்சியான யசோதை அன்னை, அவனைத் தன்னருகே அழைத்தால் விளையாட்டுக் காட்டித் தன்னிடம் அகப்படாது தப்பித்துவிடுகிறான். அதனால், அவனுக்குப் பால் கொடுப்பதாய்ப் பொய்க் காரணம் கூறி அவனை ஏமாற்றித் தன்னிடம் வரவழைத்தாள் (வஞ்சித்தல் - ஏமாற்றுதல்; மதுரம் - இனிமை)

பதரப்படாமே பழந்தாம்பால் ஆர்த்த - அவன், யசோதையின் கைக்கு சிக்கியதும், அவனை மிகவும் கவனமாய் அருகில் கிடந்த ஆநிரைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய பழைய கயிற்றை எடுத்து, அவனை உரலில் கட்டி வைத்தாள். கட்டி வைத்ததும் சும்மா நில்லாது, உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே நடந்தான் இந்தப் பொல்லாதப் பிள்ளை. அதனால், அவன் வயிற்றில் தாம்புக்கயிற்றின் தழும்பும் தப்பாமல் ஒட்டிக் கொண்டது. (பதர் - மாசு, குற்றம்; தாம்பு - கயிறு)

உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்து காணீரே - யசோதைஅம்மாள் கட்டிய கயிற்றின் தழும்பு அவன் வயிற்றில் இருந்தது. அதைத்தான், தாம்பால் கட்டியதனால், தாம்பின் தழும்புடன் கூடிய வயிறு இருக்ககும் அழகை வந்து பாருங்கள். ஒளிருகின்ற வளையல்கள் அணிந்த பெண்களே வந்து, இந்த தாமோதரனின் வயிற்றழகைப் பாருங்கள். (உதரம் - வயிறு; வளை - வளையல், கையில் அணியும் அணிகலன்)

பதவுரை:
அலைகடல் ஆர்ப்பதைப் போன்று, மிகவாய் குறும்பு செய்துகொண்டிருந்த அலைகடல் வண்ண தேகங்கொண்ட கண்ணனை, இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக ஏமாற்றித் தன்னருகே அழைத்த யசோதை அன்னை, அவனை, அருகிலிருந்த ஒருபழைய கயிற்றால் கட்டி வைத்தாள். கண்ணனின் தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய வயிற்றழகை வந்து பாருங்கள். ஒளிவீசும் வளையல்கள் அணிந்துள்ள பெண்களே வந்து, கண்ணனின் குறும்புக்குப் பலனான தழும்புடன் கூடிய அழகிய வயிற்றை வந்து பாருங்கள்!

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யசோதைஅம்மாள் கட்டிய கயிற்றின் தழும்பு அவன் வயிற்றில் இருந்தது//

அதனால் தான்
தாம்பு + உதரன் = தாமம் + உதரன் = தாமோதரன்!

//அதனால், அவனுக்குப் பால் கொடுப்பதாய்ப் பொய்க் காரணம் கூறி அவனை ஏமாற்றித் தன்னிடம் வரவழைத்தாள் //

உம்...புள்ளைய இப்படி எல்லாம் வேற ஏமாத்தறாங்களா? :)
நல்ல விளக்கங்கள் தமிழ்!

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//யசோதைஅம்மாள் கட்டிய கயிற்றின் தழும்பு அவன் வயிற்றில் இருந்தது//

அதனால் தான்
தாம்பு + உதரன் = தாமம் + உதரன் = தாமோதரன்!

//அதனால், அவனுக்குப் பால் கொடுப்பதாய்ப் பொய்க் காரணம் கூறி அவனை ஏமாற்றித் தன்னிடம் வரவழைத்தாள் //

உம்...புள்ளைய இப்படி எல்லாம் வேற ஏமாத்தறாங்களா? :)
நல்ல விளக்கங்கள் தமிழ்!//

கி கி கி.....

இந்த கதையெல்லாம் தொலைக்காட்சி(தூர்தர்ஷன் ல)யில ஸ்ரீ கிருஷ்ணா தொடர் ல்ல பாத்தது...

நெறைய கதை அதப்பாத்துதான் தெரியும்.

நன்றி தூர்தர்ஷன்!