Wednesday, September 30, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 1

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை

குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்!

பாடல் 1
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி*
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்*
பேணி யுனக்கு பிரமன் விடுதந்தான்*
மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ.

பொருள்:

மாணிக்கங் கட்டி வயிரம் இடைக்கட்டி - மாணிக்கங்கள் பதித்து, நடு,நடுவே வயிரத்தைப் பதித்து; மாணிக்கம் என்பது நவமணிகளில் ஒன்று.

மாணிக்கம் என்பது சிவப்பு வண்ணம்; வைரம் வெண்மையான அதாவது, ஒரு வகையில் கண்ணாடி போல் இருக்கும்.
செந்நிற மாணிக்கக் கற்களை எங்கும் விரவிப் பதித்து, அவற்றிற்கிடையில், மாணிக்கக் கற்களை எடுத்துக்காட்டுவதற்கு ஏற்றவாறு வெண்ணிற வைரக் கற்களையும் பதித்து

ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் - பொன்னிற் சிறந்தது ஆணிப்பொன். அதாவது சிறிதளவும் கலப்படமில்லாத தூய்மையான பசும்பொன்.

அத்தகைய தூயத் தங்கத்தால் செய்யப்பட்ட அழகிய, உனக்குப் பொருத்தமான சிறிய தொட்டில்

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் - அது உனக்குப் பொருந்துமா எனச் சோதித்து அதை உனக்காகவேப் பாதுகாத்து வைத்திருந்து பிரமன் அனுப்பி வைத்தான்.

மாணிக் குறளனே! தாலேலோ வையம் அளந்தானே! தாலேலோ -
குள்ளச் சிறுவனாய் மூன்றடி நிலம் கேட்டு, ஓரடியில் உலகத்தை அளந்தவனே தாலேலோ! உனக்குத் தாலாட்டுப் பாடுகிறேன்.

மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ - அந்தணனாய் வந்த அழகிய சிறுவனே கண்ணுறங்காயோ! உலகமனைத்தையும் தன் திருவடியாலேயே அளந்த வாமனனே கண்ணுறங்காயோ.

பதவுரை:

விண்ணிருந்து மண்ணில் உதித்த உனக்கு இங்கே சிறந்த தொட்டில் கிடைக்குமோ என்று அஞ்சி படைப்புத் தொழிலன் பிரமன் உன் மீது கொண்ட பேரன்பினால் மாணிக்கங்களும் நடுவே வயிரமும் பதித்த பொன்னிற் சிறந்த ஆணிப் பொன்னாலான எழில்மிகு தொட்டிலை உனக்குப் பொருந்தக் கூடியது தானா என அளந்து அனுப்பி இருக்கிறான். சிறுவனாய் வந்து வையம் அளந்த பெருமாளே கண்ணுறங்கு என தாலாட்டுப் பாடுகிறார்.

அளந்து - சிந்தித்து

14 comments:

முகவை மைந்தன் said...

இந்தப் பாட்டு குறித்து கொஞ்சம் கதை மற்றும் தொடர்புடைய செய்திகளை தமிழ் தனி இடுகையில் தொடர்வார்.

முகவை மைந்தன் said...

மாணின்ற சொல்லுக்குப் பல பொருள்கள் அகராதில குறிப்பிடப் பட்டிருக்கு. மாணவன், திருமணமாகாதவன், அந்தணன், குறுகியவன் அப்படின்னு. ஆனா, இலக்கியத்துல பெரும்பமான்மையான இடங்கள்ல திருமணமாகாதவன் (அ) சிறுவன்ற பொருளில் எடுதாளப் பட்டிருப்பதால் அந்தப் பொருளைக் எடுத்துக் கிட்டேன்.

Raghav said...

மாணிக்கம், வைரம் வைத்து செய்த தொட்டில் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாக்குறேன்.. அதில் குழந்தைக் கண்ணன் உறங்கும் அழகே அழகு தான்..

இப்புடி ஆணிப் பொண்ணால் செய்த தொட்டிலில் படுத்துட்டு எப்படி ஆலமர இலையிலும் படுக்கிறானோ :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கலித்தாழிசை-ன்னா என்னான்னு அப்படியே லைட்டாச் சொல்லுங்க முகவை மைந்தன்! அந்த மெட்டுல தான் தாலாட்டு பாடணுங்களா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணனோ கருப்பு!
அதுனால அவனை வெளிர் வண்ண Background-ல வச்சாத் தான் நல்லாத் தெரிவான்! :)

அதான் மாணிக்கம் - இளஞ்சிவப்பு கட்டி...
அதும் அவ்ளோ சரியா வராது-ன்னு...
அதை விட வெளிர் வண்ணமான வைரம் இடைக்கட்டி...

மாணிக்கம் கட்டி மணி வயிரம் இடைக்கட்டி...
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் :))

தொட்டிலில் உள்ள மணிகளின் ஒளி எல்லாம் மேல் கண்ணன் மேல் பட்டு டால் அடிக்குது! அதில் செல்லமாகத் தூங்குகிறான்! தாலே தாலேலோ!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாணிக் குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ//

பார்வைக்கு குள்ளனா இருப்பான்!
ஆனால் ஓர் நொடியில் ஓங்கி உலகளக்க வல்ல பையன்!
அதனால் யாராச்சும் விஷமம் பண்ண வந்தீங்கன்னா சாக்கிரதை-ன்னு கம்சன் ஆளுங்களுக்கும் ஒரு பொடி வைக்கிறார் ஆழ்வார்!
அதான் ஒரே அவதாரத்தில் - இரண்டு அவதாரங்களான - வாமனன்/திரிவிக்கிரமன் என்று இரண்டையுமே காட்டுகிறார்!

முகவை மைந்தன் said...

//கலித்தாழிசை-ன்னா என்ன//

பா நான்கு வகை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தம். நான்கு பாக்களுக்கு இந்த மூன்றைப் பொருத்தினால் மொத்தம் 12 பாவினம் வரும்.

கலித்தாழிசை எழுதுவது எளிது, வெண்பாவின் தளைகள் ஓரளவு படித்துக் கொண்டால்.

இரண்டு அடியிலிருந்து எத்தனை அடி வேண்டுமானாலும் வரலாம். ஒவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை வேறுபடலாம். கிட்டத் தட்ட புதுப் பாடல்களைப் போன்றது. ஒரே ஒரு விதி அடிக்குள் சீர்களுக்கிடையே வெண்டளை அமைய வேண்டும். ஈற்றடியில் சீர்கள் மற்ற அடிகளை விடக் கூடுதலாக வரும்.

தாலாட்டு இந்தப் பாவினத்தில் தான் அமைய வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லை. சுருப்பார் குழலி தரவு கொச்சக்க் கலிப்பா. திருத் தாலாட்டிலும் இறுதிப் பாடல் தரவாகத் தான் இருக்கிறது. ஏன்னா - ஆழமாகப் படிச்சாத் தான் புரியும்னு நினைக்கிறேன்.

மெட்டுன்றது நாம அமைச்சுக்கிறது. ஒரு மெட்டு அதே பாவினத்தில் எழுதப் பட்ட இன்னொரு பாட்டுக்கு பொருந்தாமல் இருக்கலாம். 'வண்டமர் பூங்குழல்' பாடல் ஈர்த்து திரும்பத் திரும்பப் படித்த போது திரும்பவும் பாடக்கூடிய மெட்டு ஒன்று கிடைத்தது. ஆனால் வேறு சில பாடல்களை அதே மெட்டில் பாட முடியவில்லை. மாத்திரை அளவும் ஒத்து வரணும்ல. உங்கள் நேரம் சரியில்லை என்றால் பின்னர்ப் பாடி வலையேற்றுகிறேன்:-)

ஆசிரியர் கேட்டு மாணவன் சொல்லக் கூடிய விடை போலத்தான் எழுதி இருக்கிறேன். கூடுதல் தகவல் இணைத்தால் மகிழ்ச்சி.

முகவை மைந்தன் said...

//தொட்டிலில் உள்ள மணிகளின் ஒளி எல்லாம் மேல் கண்ணன் மேல் பட்டு டால் அடிக்குது!//

படிக்கும் போது அப்படித் தான் உணர்ந்தேன். குழந்தைக்குக் கண் கூசுமேன்னு கவலையாக் கூட இருந்தது. அதான் கருப்புக்கு நகை போட்டு காத தூரம் பாக்கலாம்னு சும்மாவா சொன்னாங்க.

//ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்//
இந்த வரிகள்ல ஓசை ஆகச் சிறப்பா வந்திருக்குல்ல. எண்ணியபடியே பாடி இருக்காரு பெரியாழ்வார். படிக்கப் படிக்க இனிமையா இருக்கு இந்தப் பாடல்கள் எல்லாம்.

முகவை மைந்தன் said...

//அதான் ஒரே அவதாரத்தில் - இரண்டு அவதாரங்களான - வாமனன்/திரிவிக்கிரமன் என்று இரண்டையுமே காட்டுகிறார்!//

புதுச்செய்தி எனக்கு. தேடிப் படிக்கிறேன். சட்டுனு திரிவிக்கிறவன்னு படிச்சுட்டேன் :-))

முகவை மைந்தன் said...

//இப்புடி ஆணிப் பொண்ணால் செய்த தொட்டிலில் படுத்துட்டு எப்படி ஆலமர இலையிலும் படுக்கிறானோ :)//

பெரியாழ்வார்ட்ட தான் கேக்கணும். அவர் உறுதியா தெரிஞ்சு வைச்சுருப்பார். இன்னும் பாடல்கள் இருக்கு இல்லியா, வரும்.

முகவை மைந்தன் said...

வருகைக்கு நன்றி ராகவ் (நீங்க தானே சிங்கை வந்தது), ரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சட்டுனு திரிவிக்கிறவன்னு படிச்சுட்டேன் :-))//

அவன் திரி விக்கறவன் இல்ல! திரி வைக்கறவன்! :)

//வருகைக்கு நன்றி ராகவ் (நீங்க தானே சிங்கை வந்தது)//

இல்லை முகவை மைந்தன்! இவரு ராகவ்!
அங்கன வந்தது என் தோழன் ஜி.ராகவன் (ஜிரா)! அடுத்த மாசம் நான் வருவேன் :))

Radha said...

வாமனன் - திருமணமாகாத பிரம்மாச்சாரி அவதாரம்.
மற்றும் அந்தணக் குலத்தில் பிறந்த அவதாரம்.
சிறுவனாக, அந்தண பிரம்மச்சாரியாகத் தான் சென்று மாவலி சக்கரவர்த்தியினிடம் சென்று மூவடி யாசிப்பான்.

சரியான பொருளைத் தான் எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.

Oracle said...

தமிழ் அன்பர்கள் கீழே கொடுக்க பட்ட பாடலை கேட்டு இன்புறவும்.

https://mail.google.com/mail/#inbox/13c9f251b5f80024