Sunday, September 6, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 13

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

பாடல் 13


வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு* வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு*
அண்டமும் நாடும் அடங்கவிழுங்கிய*
கண்டம் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

பொருள்:

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் கொண்டு - செடியிலேயே மலர்ந்த, செறிந்த தேனுடைய மலர்களை, மலர்ந்தவுடன் பறித்து, நெருக்கமாய்த் தொடுத்து, அவற்றை சூடினமையால், மலரின் தேனைச் சுவைப்பதற்காக யசோதையின் கூந்தலில் வண்டுகள் வந்தமரக்கூடியக் கூந்தலையுடைய ஆய்ச்சியான யசோதை அன்னை, 'தன் மகன்' என்று எண்ணிக் கொண்டு

வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு - தன் மகன் என்ற நினைப்புடனேயே, யசோதை அன்னையால் வளர்க்கப்படுகின்ற இந்த சிறுபிள்ளையான கண்ணபிரானுக்கு (கோவலன் - கண்ணபிரான்; குட்டன் - சிறுபிள்ளை)

அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய - கண்ணனும், யசோதை அன்னையும் இருந்த ஆயர்பாடி உட்பட, இந்த உலகத்திலிருந்த அனைத்தும், அண்டசராசரம் முழுவதும் அவன் வாய்க்குள்ளேயே அடங்கிவிடுமாறு விழுங்கிய (அண்டம் - உலகம்)

கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்து காணீரே - உலகம் அனைத்தையும், தன் வாய்க்குள் விழுங்கிவிட்ட இந்த சிறுபிள்ளையினுடைய தொண்டை அமைந்திருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். வனப்பாய் அலங்கரித்துக் கொண்டுள்ள அழகிய பெண்களே இந்த பிள்ளையின் தொண்டை எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்துபாருங்கள். (கண்டம் - தொண்டை; காரிகை - பெண், காரிகையீர் - பெண்கள்)

பதவுரை:

தேன்நிறைந்த மலர்களைத் தொடுத்தணிந்த கூந்தலில் உள்ளத் தேனினைப் பருகவதற்கு தேனீக்கள் வந்து அமரக்கூடிய அழகிய, மணம்நிறைந்த கூந்தலையுடையவளான யசோதை அன்னையால் 'தன் மகன்' என்ற எண்ணத்துடன் வளர்க்கப்படுகின்ற சிறுபிள்ளையான கண்ணபிரானுடைய வாய்க்குள் அடங்கிவிடுமாறு அண்டசராசரம் அனைத்தையும் விழுங்கியிருக்கின்ற சிறுதொண்டை எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள். வனப்பாய் அலங்காரம் செய்துகொண்டுள்ள அழகிய பெண்களை இந்த சிறுபிள்ளையின் சிறுதொண்டையின் அழகினை வந்து பாருங்கள்.

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யசோதை அன்னை, 'தன் மகன்' என்று எண்ணிக் கொண்டு//

ஆழ்வார் யசோதையாகவே பாடும் பாடல் இது! அப்படி இருக்க 'தன் மகன்' என்று எண்ணிக் கொண்டு வளர்ப்பதாக எப்படி எழுதுவார்? யசோதைக்குத் தான் விவரம் தெரியாதே! சொல்லுங்க தமிழ்முகில்! சொல்லுங்க! :)

//(கோவலன் - கண்ணபிரான்; குட்டன் - சிறுபிள்ளை)//

இங்கு கோவலன் என்பது கண்ணபிரானை விட...ஆயர் குலம்/அதன் தலைவன் நந்தகோபனையே குறிக்கும்!

கோ=பசுக்களின்
வலன்=வல்லமை/செல்வம் பூண்டவன்! = நந்தகோபன்!

அவன் குட்டன் = அவன் சிறு பிள்ளையான கண்ணன் என்று பொருள் கொள்வதே சரியாக வரும்!

குற்றம் ஒன்றில்லாத "கோவலர்" தம் பொற்கொடியே என்று என் தோழியும் பாடுவாள்! கோவலர் வூட்டுப் பெண்ணே, ஆயர் குலப் பெண்ணே என்பதே கோவலர்க்கு வரும் பொருள்!

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//யசோதை அன்னை, 'தன் மகன்' என்று எண்ணிக் கொண்டு//

ஆழ்வார் யசோதையாகவே பாடும் பாடல் இது! அப்படி இருக்க 'தன் மகன்' என்று எண்ணிக் கொண்டு வளர்ப்பதாக எப்படி எழுதுவார்? யசோதைக்குத் தான் விவரம் தெரியாதே! சொல்லுங்க தமிழ்முகில்! சொல்லுங்க! :)//

யசோதைக்கு விவரம் தெரியாததனாலத்தான் ''தன்மகனாகக்'' கொண்டு ன்னு பாடுறாரு....

தெரிஞ்சுருந்தா, தேவகி மைந்தனை, வசுதேவர் வீரனை ன்னு ல்ல பாடிருப்பாரு...

தமிழ் said...

//(கோவலன் - கண்ணபிரான்; குட்டன் - சிறுபிள்ளை)//

இங்கு கோவலன் என்பது கண்ணபிரானை விட...ஆயர் குலம்/அதன் தலைவன் நந்தகோபனையே குறிக்கும்!

கோ=பசுக்களின்
வலன்=வல்லமை/செல்வம் பூண்டவன்! = நந்தகோபன்!

அவன் குட்டன் = அவன் சிறு பிள்ளையான கண்ணன் என்று பொருள் கொள்வதே சரியாக வரும்!

குற்றம் ஒன்றில்லாத "கோவலர்" தம் பொற்கொடியே என்று என் தோழியும் பாடுவாள்! கோவலர் வூட்டுப் பெண்ணே, ஆயர் குலப் பெண்ணே என்பதே கோவலர்க்கு வரும் பொருள்!//

நீங்க சொல்றது சரிதான் இரவி!!

கோவலக் குட்டன் என்றால், ஆயர்தலைவன் நந்தகோபனுடைய பிள்ளை....

குட்டன் கோவலன் ன்னாதான், சிறுவனான கண்ணன் என்று வரும்...

தவற்றைத் திருத்தியமைக்கு நன்றி இரவி சாரே. ;-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யசோதைக்கு விவரம் தெரியாததனாலத்தான் ''தன்மகனாகக்'' கொண்டு ன்னு பாடுறாரு....

தெரிஞ்சுருந்தா, தேவகி மைந்தனை, வசுதேவர் வீரனை ன்னு ல்ல பாடிருப்பாரு...//

ஒப்புக்க முடியாது! ஒப்புக்க முடியாது! :)
தன் மகன் "என்று எண்ணிக் கொண்டு"-ன்னு சொல்லும் போதே, மகன் இல்லை, மகன் என்று எண்ணிக் கொண்டு-ன்னு பொருள் வந்துவிடுகிறதே! அதுனால இன்னொரு தபா சரியான வெளக்கத்தைச் சொல்லுங்க! விட மாட்டோம்! :))

முகவை மைந்தன் said...

யசோதைக்கு கண்ணன் மகன் தான். ஆனால் அவளுக்கு அண்டம் விழுங்கிக் காட்டிய பின் அவன் திருவுரு என்பது புரிந்து விட்டது. அத்தகைய திருவுருவை மகனாகக் கொண்ட யசோதைன்னு படிச்சா பொருள் இன்னும் தெளிவா இருக்கும்.

சரியா இரவி? என்னால ஆன வரை முயற்சி பண்ணினேன்.

தமிழ் said...

@இரவிசங்கர், கண்ணபிரான்...

யசோதை அன்னைக்கு, கண்ணன் தன் மகன் இல்லை என்ற உண்மை கடைசி வரை தெரியாமல் போகலையே.

கம்சனுடைய தனுர் யாகத்துக்காக, அக்ரூர் அழைக்க வந்திருந்தப்ப யசோதைட்ட உண்மையைச் சொல்லி, அவளைத் தேற்றித்தான கூட்டிட்டு போனாங்க.

இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடுபரமன்தன்.... என்று வடமதுராவில் நடந்ததை யசோதைக்கு எப்படித் தெரியும்.

யசோதை அன்னையின் மனோபாவத்துல இருந்து ஆழ்வார் பாடுகிறார். ஆனால், யசோதை அன்னைக்குப் பிற்காலத்தில் தெரிந்தவற்றை, கண்ணன் பிறப்பு பற்றிய இரகசியம் ஆழ்வாருக்குத் தெரியும் தானே!